இந்தியா Vs நியூசிலாந்து: பயிற்சி ஆட்டம்!

Published On:

| By Balaji

சிறந்து விளங்கும் 8 அணிகளுக்கிடையேயான 8-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வருகிற ஜூன் 1-ம் தேதி தொடங்குகிறது. இந்திய அணி தனது முதல் லீக்கில் பாகிஸ்தானை 4-ம் தேதி எதிர்கொள்கிறது. அதற்கு முன்பாக இந்திய அணி, 2 பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா-நியூசிலாந்து இடையிலான பயிற்சி ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று (மே 28) பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கவுள்ளது. தொடர்ச்சியாக 20 ஓவர் போட்டிகளில் விளையாடிவந்த இந்திய வீரர்கள் கடந்த ஜனவரி மாதத்தில் இங்கிலாந்துடன் ஆடிய ஒருநாள் போட்டிக்குப் பிறகு கலந்துகொள்ளும் முதல் ஒருநாள் தொடர் இதுவாகும்.

காயம் காரணமாக ஐ.பி.எல்.தொடரில் பங்கேற்காத இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் உடல் தகுதி பெற்று இந்திய அணிக்காக நேரடியாகக் களம் காணுகிறார். காயத்தால் அவதிப்பட்டு வந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியும் அணியில் இடம் பிடித்துள்ளார். இருவரும் களத்தில் தங்களது முழு உடல்தகுதியை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் யுவராஜ்சிங் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் பயிற்சியில் ஈடுபடாத அவர் இன்றைய ஆட்டத்தில் ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா இன்று தான் அணியுடன் இணைய இருப்பதால் அவரும் களம் காண மாட்டார் என்று தெரிகிறது.

ADVERTISEMENT

இந்தப் பயிற்சி ஆட்டம் அதிகாரப்பூர்வமற்றது என்பதால் எல்லா அணிகளும் தங்கள் அணியின் 15 வீரர்களையும் மாற்றி மாற்றி களம் இறக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்குத் தயாராவதற்கும், இங்குள்ள சூழலுக்குத் தகுந்தபடி தங்களை மாற்றிக்கொள்வதற்கும் இந்த ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

*இந்தப் போட்டிக்கான இரு அணிகள்*

ADVERTISEMENT

**இந்தியா:** விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், ரோகித் சர்மா, டோனி (விக்கெட் கீப்பர்), யுவராஜ்சிங், கேதர் ஜாதவ், ரஹானே, ஹர்திக் பாண்டியா, ஆர்.அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, உமேஷ் யாதவ், புவனேஷ்வர்குமார், முகமது ஷமி, தினேஷ் கார்த்திக், ஜஸ்பிரித் பும்ரா.

**நியூசிலாந்து:** கனே வில்லியம்சன் (கேப்டன்), டாம் லாதம், மார்ட்டின் கப்தில், ராஸ் டெய்லர், லுக் ரோஞ்ச் (விக்கெட் கீப்பர்), நீல் புரூம், ஜேம்ஸ் நீஷம், கிரான்ட்ஹோம், கோரி ஆண்டர்சன், மிட்செல் சான்ட்னெர், ஜீத்தன் பட்டேல், ஆடம் மில்னே, மெக்லெனஹான், டிம் சவுதி, டிரென்ட் பவுல்ட்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share