9 மாத கர்ப்பிணி மனைவியை கொன்று நாடகமாடிய கணவர்… போலீசாரிடம் சிக்கியது எப்படி?

Published On:

| By christopher

husband who killed 9 month pregnant woman

பிரசவத்திற்கு ஒருநாள் முன்னதாக கர்ப்பிணி மனைவியை துடிக்கத் துடிக்க கொன்ற கணவருக்கு, உச்சபட்ச தண்டனை வழங்கக்கோரி பல்வேறு மகளிர் அமைப்பினர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். husband who killed 9 month pregnant woman

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள மதுரவாடா பகுதியைச் சேர்ந்தவர்கள் ஞானேஸ்வர ராவ் – அனுஷா (வயது 27) தம்பதியர். இவர்கள் மதுரவாடாவில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

ஞானேஸ்வர ராவ் இரண்டு பாஸ்ட் ஃபுட் உணவகம் நடத்தி வருகிறார். அனுஷா ஹோட்டல் மேலாண்மை படிப்பில் பட்டம் பெற்றுள்ளார்.

வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்கள் இருவரும் கடந்த 2022-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். எனினும் காதல் திருமணம் குறித்து தனது பெற்றோரிடம் எதுவும் தெரிவிக்காமல், விசாகப்பட்டினத்தில் வேலை பார்த்து வருவதாக ஞானேஸ்வர ராவ் கூறி வந்துள்ளார்.

இந்த நிலையில் ஞானேஸ்வருக்கு அவரது பெற்றோர் பெண் பார்ப்பதாக கூறியுள்ளனர். இதனையடுத்து தனது கர்ப்பிணி மனைவி அனுஷாவை விவகாரத்து செய்துவிட்டு வீட்டில் பார்த்த பெண்ணை மணமுடிக்க ஞானேஸ்வர் தயாரானார்.

அதற்காக அனுஷாவிடம் தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், சிறிதுகாலம் தான் என்னால் வாழ முடியும் எனவே நாம் விவாகரத்து செய்து விடலாம் என்றும், நீ என்னை விட்டு பிரிந்து வேறு திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றும் உருக்கமுடன் நடித்துள்ளார்.

ஆனால் அதை உண்மை என்று நம்பி அதிர்ச்சியடைந்த அனுஷா, “உயிரோடு இருந்தாலும் செத்தாலும், அது உன்னோடு தான்” என்று கணவருக்கு ஆறுதல் கூறியுள்ளார். எனினும் அனுஷாவை கழட்டிவிடுவதில் குறியாக இருந்ததால், தினமும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த 14ஆம் தேதி அனுஷாவுக்கு குழந்தை பிறக்க இருந்தது. அதற்காக அன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட இருந்த அனுஷா பேச்சு மூச்சின்றி கிடப்பதாக உறவினர்களிடம் ஞானேஸ்வர ராவ் தெரிவித்தார். உடனடியாக அனுஷாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

சந்தேகத்தில் சிக்கிய கணவர்!

எனினும் அனுஷாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகாரளித்த நிலையில், பி.எம். பாளையம் காவல் நிலைய போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.

உறவினர்கள் எழுப்பிய சந்தேகத்தின் அடிப்படையில் போலீசாரின் பார்வை கணவர் ஞானேஸ்வர ராவ் மீது விழுந்தது. அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணையில் ஈடுபட்ட போது, மனைவி அனுஷாவை கழுத்தை நெரித்து கொன்றதை ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து ஞானேஸ்வர ராவை போலீசார் கைது செய்தனர்.

மேலும், அவர் அளித்த வாக்குமூலத்தில், ”அனுஷா மீது இருந்த மயக்கத்தில் தனது பெற்றோருக்கு தெரியாமல் அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். வேற்று சமுகப்பெண்ணை மருமகளாக தனது பெற்றோர் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதால் அவரை விவாகரத்து செய்து விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ள, நான் எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. எனவே கடந்த 14ஆம் தேதி அதிகாலையில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த அனுஷாவின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி, மூச்சுத் திணற செய்து கொலை செய்தேன். பிறகு அதில் இருந்து தப்பிப்பதற்காக, உறவினர்களிடம் மனைவி சுயநினைவில்லாமல் கிடப்பதாக நாடகமாடினேன். இப்போது மாட்டிக்கொண்டேன்” எனத் தெரிவித்தார்.

உச்சப்பட்ச தண்டனை வழங்க வேண்டும்!

இந்த நிலையில் பிரசவத்திற்கு தயாரான கர்ப்பிணி மனைவியை திட்டமிட்டுக் கொன்ற கணவர் ஞானேஸ்வர ராவுக்கு அதிகபட்ச தண்டனையை விரைந்து வழங்க வேண்டுமென இந்திய மகளிர் தேசிய கூட்டமைப்பின் (NFIW) தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இந்த வழக்கை விசாரிக்க விரைவு நீதிமன்றத்தை அமைக்குமாறும், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அனுஷா குழந்தைப் பருவத்தில் தனது தாயை இழந்தார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவரது தந்தை உயிரிழந்தார். இந்த நிலையில் கணவர் மட்டுமே உலகம் என்று நம்பி வாழ்க்கையை தொடங்கிய அனுஷா மற்றும் அவரது வயிற்றில் இருந்த குழந்தையின் உயிரையும் பறித்துள்ளது ஞானேஸ்வர ராவின் ஏமாற்றுக் காதல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share