இந்தியன் 2 படத்தில் நாட்டில் நிலவும் ஊழல்களை ஒழிக்க முதல்படியாக, வீட்டுக்குள் நடக்கும் ஊழல்களை வெளியே கொண்டு வர வேண்டும் என்று இந்தியன் தாத்தா கமல்ஹாசன் அழைப்பு விடுப்பார்.
இதையடுத்து, பெற்றோர் உள்ளிட்ட லஞ்சப் பேர்வழிகளை குழந்தைகள் காட்டிக் கொடுக்கும் வண்ணம் கதைக் களம் அமைக்கப்பட்டிருக்கும். அதே போல, வீட்டுக்குள் இருந்த ஊழல்வாதியை கணவர் ஒருவர் காட்டி கொடுத்த சம்பவம் ஒன்று தெலங்கானாவில் நடந்தது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே மணிகொண்டா நகராட்சி உள்ளது. இங்கு துணை எக்ஸிகியூடிவ் இன்ஜினியராக திவ்யஜோதி பணியாற்றி வருகிறார். இவர், தொடர்ந்து லஞ்சம் வாங்கி வீடு, பங்களா என சொத்துகளை வாங்கி குவித்துள்ளார்.
இது, அவருடைய கணவர் ஸ்வர்ணா ஸ்ரீபாடுக்கு பிடிக்கவில்லை.பல முறை மனைவியிடம் லஞ்சம் வாங்க வேண்டாம் என்று கூறி தடுத்தும் கேட்கவில்லை.
இந்த நிலையில், திவ்ய ஜோதி தனது வீட்டில் கட்டுக்கட்டாக பணத்தை பதுக்கி வைத்திருந்துள்ளார். அதில், 20 முதல் 30 லட்சம் வரை இருந்துள்ளது. இதை பார்த்த கணவர் அதிர்ந்து போனார். பின்னர், அந்த பணக்கட்டுகளை வீடியோவாக எடுத்துள்ளார். தொடர்ந்து, அவற்றை தன் மனைவி வாங்கிய லஞ்ச பணம் என்று கூறி சமூகவலைத் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். மணிகொண்டா சுற்று வட்டார பகுதி காண்ட்ரக்டர்கள், பில்டர்களிடத்தில் கமிஷன் வாங்கி திவ்யஜோதி இவ்வளவு பணத்தை சேர்த்ததாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து ஸ்வர்ண ஸ்ரீபாடு கூறுகையில்,என் மனைவியை லஞ்சம் வாங்காதே என்று பல முறை தடுத்தும் பலன் கிடைக்கவில்லை. என் மனைவி லஞ்சம் வாங்குவதற்கு அவரின் சகோதரர்தான் காரணம். அவர் கொடுக்கும் பிரஷரால் என் மனைவி தவறான நடவடிக்கையில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
லஞ்சப்புகாரையடுத்து, திவ்ய ஜோதி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
சாம்சங் ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாதது ஏன்?: உதயநிதி பேட்டி!