சகோதரியின் திருமணத்துக்கு டி.வி வாங்கிக்கொடுக்க விரும்பிய கணவனை, மனைவியின் சகோதரர்கள் கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் பாரபங்கி என்ற இடத்தை சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது சகோதரிக்கு நாளை (ஏப்ரல் 26) திருமணம் நடக்க இருக்கிறது. சகோதரியின் திருமணத்துக்கு தங்க மோதிரம் மற்றும் ஒரு டி.வி வாங்கி கொடுக்க மிஸ்ரா முடிவு செய்தார்.
மிஸ்ரா இது பற்றி தனது மனைவி சபியிடம் தெரிவித்தபோது, ஏன் அந்த அளவுக்கு பணம் செலவு செய்ய வேண்டும் என்று கேட்டு கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
உடனே கோபத்தில் தனது சகோதரர்களுக்கு போன் செய்து இதுகுறித்து தெரிவித்த சபி, உடனே கிளம்பி வந்து தனது கணவனுக்கு சரியான பாடம் கற்றுக்கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார். உடனே அவரது சகோதரர்கள் விரைந்து வந்து மிஸ்ராவை ஒரு மணி நேரம் கம்பால் அடித்து உதைத்தனர். இதில் படுகாயம் அடைந்த மிஸ்ராவை அவரது உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவரை சோதித்த டாக்டர்கள், மிஸ்ரா இறந்துவிட்டதை உறுதி செய்தனர்.
இதையடுத்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் வழக்கு பதிவு செய்து மிஸ்ராவின் மனைவி சபி மற்றும் சபியின் சகோதரர்கள் என மொத்தம் ஐந்து பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்
ஹெல்த் டிப்ஸ்: மன அழுத்தம் ஏற்படும்போது சாப்பிட நினைப்பவரா நீங்கள்?
பியூட்டி டிப்ஸ்: கோடையில் குளுமையைத் தரும் முல்தானி மிட்டி!
