திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத் தூணில் தீபமேற்ற வலியுறுத்தி உள்ளூர் மக்களில் ஒரு தரப்பினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை.
இதுதொடர்பாக தமிழக அரசு மேல்முறையீடு செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று விசாரித்தது. அப்போது வழக்கத்தை மாற்றவே முடியாது என்று சட்ட விதிகளை குறிப்பிட்டு தமிழக அரசு திட்டவட்டமாக வாதங்களை முன்வைத்தது. இதைத்தொடர்ந்து வழக்கு டிசம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே தீபத் தூணில் தீபம் ஏற்ற பிறப்பிக்கப்பட்ட உத்தரவை செயல்படுத்த வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கேட்டு மதுரை போலீஸிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. இதற்கு போலீஸ் அனுமதி வழங்கவில்லை.
இதனால் மதுரையைச் சேர்ந்த இரா. பிரபு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை கடந்த டிசம்பர் 11ஆம் தேதி விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி, சில நிபந்தனைகளுடன் அமைதியான முறையில் உண்ணாவிரதம் நடத்த அனுமதி வழங்கினார்.
அரசியல் கட்சிகள் பற்றி பேசக்கூடாது, அமைதியாக உண்ணாவிரதம் இருக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
அதன்படி திருப்பரங்குன்றம் மயில் மண்டபம் அருகே சுமார் 50 பேர் இன்று (டிசம்பர் 13) காலை 9 மணிக்கு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
அவர்கள், ‘தமிழக அரசே, இந்து அறநிலையத் துறையே முருக பக்தர்களை புறக்கணிக்காதே’, ‘ஒன்றுபடுவோம், ஒன்றுபடுவோம் முருக பக்தர்கள் ஒன்றுபடுவோம், ‘தீபத் தூணில் தீபமேற்றியே தீருவோம்’ உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியுள்ளனர்.
இதுகுறித்து போராட்டக்காரர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இது 60 ஆண்டுகால பிரச்சினை. நீதிமன்ற உத்தரவை மீறி இந்த அரசு செயல்படுகிறது. சட்டத்தை மீறும்போது, இப்போதாவது அரசை எதிர்த்து மக்கள் குரல் கொடுக்க வேண்டும் தானே. திருப்பரங்குன்றத்தை சுற்றி 3 கிமீ தொலைவிற்குள் வசிப்பவர்கள் இங்கு கூடியிருக்கிறோம். இங்கு கட்சிக்காரர்களும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் உள்ளூர்வாசிகளாக இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்” என்று கூறினர்.
இந்த போராட்டத்துக்கு திருப்பரங்குன்றம் ரஜினி ரசிகர்கள் மன்றம் ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்த போராட்டம் இன்று மாலை 5 மணி வரை தொடர்கிறது. இதனால் 50க்கும் மேற்பட்ட போலீசார் திருப்பரங்குன்றத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வழக்கம்போல் கோயிலுக்கு சென்று வர பொதுமக்களும், பக்தர்களும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
