ஸ்ரீராம் சர்மா
“மனிதவளம், முதலீடுகள் ஆகியவற்றை ஆக்கபூர்வமான முறையில் திறம்பட பயன்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் மேம்படுத்தப்படும்…”
மேற்கண்ட வரிகள், 2022 – 23க்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து நாடாளுமன்றத்தில் பேசிய மாண்புமிகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களது உரையில் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான வரிகள்.
ஆம், இந்திய நாடு கொண்டிருக்கும் மனிதவள மேன்மை வேறெந்த நாட்டிலும் காணக் கிடைக்காததொன்று! என்னதான் மனிதவளம் இருந்தாலும், பொருளாதாரம் அவசியம் அல்லவா எனலாம்!
ஓடக் கூடிய குதிரையின் முதுகில் ஏறிக்கொள்வது உலக முதலாளிகளின் பரம்பரை குணம் என்பதால் அந்தப் பொருளாதாரத்தை உலக அரங்கில் கடனாகப் பெற்றுக்கொள்வது எளிதில் முடிந்து விடும்.
ஆனால், மனிதவளத்தைக் கடனாகக் கொண்டுவிட முடியுமா? அப்படியே கொண்டுவிட்டாலும் அந்த மனிதவளங்கள் முழுமையான பலனைக் கொடுத்து விடுமா?
கூலிக்கு மாரடிப்பதற்கும் – உணர்வுபூர்வமாக உழைப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை வியாபார உலகம் கணக்குப் போட்டுப் பார்க்குமல்லவா?
இப்படியாகவெல்லாம் கவலைப்பட வேண்டியது இந்தியாவைப் பின்தள்ளி ஆசியாவின் வல்லரசாகி விட முயலும் சீனத்தின் கவலைதானே? அதுகுறித்து நமக்கென்ன என வாளாவிருந்துவிட முடியுமா?
எதிரியின் பலவீனம், நமக்கான பலமாகி விடுமா? நமது பலத்தை மேலும் பெருக்கிக் கொள்வதுதானே நன்மை பயக்கும்!?
சரி, இந்தியத்தின் மனிதவளம் எப்போது மேம்படும்?
‘மனிதவளங்கள்’ அபரிமிதமானது என மார்தட்டுவதற்கு முன்பு, ‘மனித மனங்கள்’ குறித்து சிந்தித்தால் மட்டுமே அது வசப்படும்!
இந்தியத் திருநாடு விடுதலை அடைந்து வெறும் 75 ஆண்டுகள் மட்டுமே ஆகிறது. அதற்கு முன்பதான முகலாய, ஆங்கிலேய அடிமை ஆட்சியைப் பல நூறு ஆண்டுகளாக அனுபவித்த நமது முன்னோர் நமக்குச் சொல்லிப் போனதென்ன என்பது குறித்து நாம் சிந்தித்தாக வேண்டும்.
இந்த மண்ணில் எண்ணற்ற சித்தர்கள் தோன்றிப் பாடினார்கள். அவர்கள் சிவனைப் பற்றி மட்டுமே பாடினார்கள் என்பது அறியாமை. உண்மையில், அவர்கள் பாடியது அத்துணையும் மானுடம்! ஆம், சாதிமத பேதங்களற்ற மானுட ஒன்றுதல் குறித்தே அதிகம் பாடி வைத்தார்கள்!
அந்த வரிசையில் கடைசியாக நின்று அறிவுறுத்தியவர் பாரதியார்!

**முப்பது கோடி முகமுடையாள் – உயிர் **
**மொய்ம்புற ஒன்றுடையாள் – இவள் **
**செப்பு மொழி பதினெட்டுடையாள் – எனிற் **
**சிந்தனை ஒன்றுடையாள் !**
ஏறத்தாழ 32 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது இந்தியா!
சில நூறு கிலோமீட்டருக்கு இடையிடையே பலவிதமான கலாச்சார விழுமியங்கள் மாறி மாறி நின்றபோதிலும் அனைத்தையும் தன்னுள் அடக்கி, ஒரே நிலப்பரப்பாக நிர்ணயித்துக் கொண்டு, வந்தே மாதரம் பாடும் இந்த மண்ணுக்கு இணை ஒன்று இல்லைதான்!
ஆயினும், தன் மாநில மக்களின் கலாச்சாரங்களை அதனதன் அழகில்கொண்டு, ஆதரித்து, அரவணைக்கும்போது மட்டுமே பாரத மாதாவின் பளபளக்கும் பட்டுச்சேலை ஜரிகை மின்னலடிக்கும் என்பது நிதர்சனம்!
சுப்பிரமணிய பாரதியார் தேசிய கவியாக இருந்தும்கூட தன் தாய்த்தமிழ் மண் குறித்துப் பாடுகையில்…
**காவிரி தென்பெண்ணை பாலாறு – தமிழ்**
**கண்டதோர் வையை பொருநை நதி – என**
**மேயிய ஆறு பலவோடத் – திரு**
**மேனி செழித்த தமிழ்நாடு !**
எனவும்,
**நீலத்திரைகட லோரத்திலே – நின்று **
**நித்தம் தவஞ்செய் குமரி எல்லை – வட**
**மாலவன் குன்றம் இவற்றிடையே – புகழ்**
**மண்டிக் கிடைக்கும் தமிழ்நாடு !**
எனவும் மேலதிக உணர்வெழுச்சி கொள்கிறார்…
“நர்மதை நதிக்கரையில் நடனமாடிக் களிப்போமே…” என முடியும் குஜராத் மாநிலப் பாடலும், சங்கரம்பதி சுந்தராச்சாரியாரின் “மா தெலுகு தல்லிகி…” எனும் தெலுகு மாநிலப் பாடலும், “நீராரும் கடலுடுத்த…” எனத் துவங்கியெழும் மனோன்மணியத்தாரின் எழுச்சிமிகு வரிகளும் தனித்த கலாச்சாரங்களின் உணர்வெழுச்சிகளே!
தேசிய கீதம் பாடப்படும்போது ஒன்றிணைந்து நெக்குருகி நிற்கும் இந்திய மனம் – அதனதன் மாநிலத் தனித்தன்மை குறித்தொரு பாடலிசைக்கப்படும்போது மேலதிக தன்னெழுச்சியோடு வேகம் கொண்டு விடுவது வெகு இயல்பானதே!
காந்தியடிகள் சேலம் வரை வந்து கூட்டம் போட்டதும் – நேதாஜி அவர்கள் பசும்பொன் தேவரோடு தொடர்புகொண்டு தேசியம் பாராட்டியதும் அந்த காரணம் பற்றியதே!
அப்படியாக, மாநிலங்களின் தனித்தப் பெருமைகளை அடையாளம் காட்டி அரவணைக்கும் போதுதான் தேசியம் வலுப்படும் என்பது மூத்தோர் கணக்கு!
ஆம், எனது மொழியை – எனது கலாச்சாரத்தை – எனது வரலாற்றை உயர்த்திக்காட்டும் இந்தியமே எனது தலைமை என நெக்குருகி நிற்கும் மனம் மட்டுமே மனிதவளமாக மூறி எழுந்து நிற்கும்!
அந்த மனிதவளம்தான் தன் தாய் மண்ணுக்காக மேலதிகம் உழைக்கும். அது மட்டும்தான் இந்த மண்ணை பன்மடங்கு உயர்த்தும். புறக்கணிக்கப்படும் மண் மறுதலித்துத்தான் போகும்.
உதாரணத்துக்கு, வேலு நாச்சியார் குறித்த எனது ஆய்வை 2007இல் எடுத்துச் சொன்னபோது பெண்மையின் அந்த உண்மை வரலாறு காரணமின்றி புறக்கணிக்கப்பட்டது.
“இதுகாறும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் எவரும் பதியாத ஒன்றை புதிதாகச் சொல்ல வருகிறாயா?” எனப் புறம் தள்ளியது.
அன்றந்த நாளில் வைகோ என்னும் பெருந்தகையாளரின் அரவணைப்பால் கலை வடிவமாக அதை மேடையேற்றி – அதன்பின் இடைவிடாமல் கல்லூரிகளிலும் – பல்கலைக்கழகங்களிலும் ஓயாமல் எடுத்துச் சொல்லி வந்தேன்…
இன்று, வேலு நாச்சியாரின் அந்த வீர வரலாறு இளைய பெண்களுக்கோர் ஆதர்சமாக எழுந்து நின்று உத்வேகம் அளித்துக் கொண்டிருக்கிறது.
மாண்புமிகு வானதி ஸ்ரீனிவாசன் அவர்கள் தனது தேசிய அலுவலகத்தில் வேலு நாச்சியாரை ஒரு பிம்பமாக வைத்த பின்பு, தேசிய அளவில் அவருக்கோர் மரியாதை கிடைத்தது. பாரதப் பிரதமர் மோடியின் ட்வீட் வரை இடம்பெற்றது.
சமீபத்தில், சில அறிவுஜீவிகளின் சிஸ்டங்களால் – சிலுமிஷங்களால் தாய் மண் திரும்பிய தாய் வேலுநாச்சியார்…

தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிரத்யேக உத்தரவின் பேரில், 2022 குடியரசு தினத்தின் முதல் ஊர்தியில் கன கம்பீரமாக வீற்றிருந்து மக்களின் மனங்களை கொள்ளை கொண்டார்.
இப்படியாக, மாநிலம் சார்ந்த கலாச்சார வரலாறுகள் அனைத்தும் உயர்த்திப் பிடிக்கப்பட வேண்டும் என்கிறேன். அப்படி உயர்த்திப் பிடிக்கப்படும்போதுதான் மனித மனங்கள் எழுச்சி கொள்ளும் என்கிறேன். மனித மனங்கள் எழுச்சி கொள்ளும் போதுதான் மனிதவளம் என்பது அதன் உண்மையான பலனை அள்ளித் தரும் என்கிறேன்.
துணிந்து சொல்வேன், பரந்து விரிந்த இந்திய மண்ணில் மனிதவளமானது தமிழகத்தில்தான் காரண வீரியங்களோடு ததும்பி நிற்கிறது.
தமிழகத்தில் நிலவும் இன்றைய ஆட்சியோ தன்னிலை அறிந்து ஆள்கிறது.
முந்தைய ஆண்டுகளில் குழியறியாது அலைந்த முசக் கூட்டங்கள் போல் அல்லாமல், சிறந்ததொரு ஆட்சியாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இன்றைய முதல்வரிடம் ‘ஃபால்ஸ் ஈகோ’ என்பது கிடையாது. கனிந்து முதிர்ந்த வயதில் ஆட்சிக்கட்டில் ஏறியவர் – தன் முந்தையரைக் காட்டிலும் கொஞ்சமேனும் சாதித்து விட மாட்டோமா எனும் ஏக்கத்தில் தன் பரிவாரங்களை அயராது முன் செலுத்தக் காண முடிகிறது.
எந்த ஆட்சியிலும் தவறுகள் நடப்பதைத் தடுக்க முடியாது. ஆயினும், அது குறித்த கவலை முதலமைச்சருக்கு உள்ளதை மறுத்துவிட முடியாது.
அரசியலில் போட்டி இருக்கலாம். அபிலாஷைகள் துளிர்க்கலாம். மாபாரத மருளாட்டங்களையே கண்டு கடந்துவிட்ட இந்த மண்ணுக்கு எதுவும் புதிதில்லைதான்!
ஆயினும், இருபுறமும் விட்டுக்கொடுத்து உயர்த்திப் பிடிப்பதால் மட்டுமே, இந்த ஜனநாயக மண்ணின் மனிதவளத்தை மேம்படுத்தி வருங்கால இந்தியாவை செழுமைப்படுத்த முடியும்!
உறுதிபட சொல்வேன், மாநில மனித மனங்களின் எழுச்சியில்தான் இந்திய மனிதவளத்தைக் காண முடியும்!
அன்றந்த அடிமை இந்தியாவின் கொடுமையை அனுபவித்தபடி, விடுதலை இந்தியாவின் ஒளிக்கீற்றுக்கு ஏங்கிய மகாகவி பாரதியார்…
பாரத மாதா பள்ளியெழுச்சி பாடலின் கடைசி கண்ணியில் இவ்வாறு கேட்கிறார்…
**மதலையர் எழுப்பவும் தாய் துயில்வாயோ? **
**மாநிலம் பெற்றவள் இஃதுண ராயோ?**
**குதலை மொழிக்கிரங் காதொரு தாயோ?**
**கோமகளே பெரும் பாரதர்க் கரசே!**
திருநாள் ஒன்று தோன்றட்டும்!
வருங்காலம் ஒளி வீசட்டும்!
**கட்டுரையாளர் குறிப்பு**

**வே.ஸ்ரீராம் சர்மா** – எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.
