நாம் வெளியில் செல்லும் போது டெபிட் கார்டு இல்லாவிட்டாலும், தேவைப்படும் பட்சத்தில் நீங்கள் யுபிஐ மூலம் ஏடிஎம்மில் பணம் எடுக்கலாம் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அது குறித்த விரிவான விபரங்களை இங்கு பார்க்கலாம்.
தற்போதைய டிஜிட்டல் உலகில் மொபைல் பேங்கிங், இணையவழி பண பரிவர்த்தனை என ஏராளமான சேவைகள் நமது நேரத்தை மிச்சப்படுத்த ஆரம்பித்தன. குறிப்பாக கொரோனா காலகட்டம் தொடங்கி பெரும்பாலும் gpay, phone pay என பண பரிவர்த்தனைகள் பெரும்பாலும் நமது நுனி விரலில் நடந்து வருகிறது. ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்துவது கூட படிப்படியாகக் குறைந்து வருகிறது.
அதே சமயம் ஏடிஎம் கார்டுகளை எடுக்காமல் நாம் வெளியில் செல்லும் சூழலில் நம் கைகளுக்கு ரொக்க பணம் தேவை என்றால் எப்படி ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்க வேண்டும் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
தேவையான வசதி
நாம் ஏடிஎம் டெபிட் கார்டு இல்லாமல் வெளியில் சென்றாலும் கூட நம் வங்கி கணக்கில் பணம் இருக்கும் பட்சத்தில் ஜிபே, அல்லது போன் பே இருந்தால் நம் வங்கி ஏடிஎம்மில் இருந்து பணத்தை எடுக்கலாம். ஏடிஎம் டெபிட் கார்டு இல்லாமல் அதிக பட்சமாக ரூ.10,000 வரை எடுக்க முடியும். அதேசமயம் எடுக்கும் பணத்தின் அளவில் வங்கிக்கு வங்கி சிறிய மாற்றங்கள் இருக்கலாம்.
பணம் எடுக்கும் வழிமுறை
ஏடிஎம் மெஷினில் யுபிஐ ரொக்க பணம் பெறுதல் என்ற மெனுவை முதலில் கிளிக் செய்ய வேண்டும். உடனடியாக ஏடிஎம் மெஷினில் உங்களுக்கான ஸ்கிரீனிங் க்யூஆர் கோடு தெரியும்.
இதைத்தொடர்ந்து வழக்கம்போல் நாம் நமது யுபிஐ செயலியை திறந்து அதில் உள்ள ஸ்கேனர் வசதியை பயன்படுத்தி க்யூஆர் கோடை ரீட் செய்ய வேண்டும்.
உங்களுக்கு தேவையான பணத்தின் அளவை பதிவு செய்த பின் ப்ரொசீட் என கிளிக் செய்ய வேண்டும்.
உங்கள் யுபிஐ பின் எண்ணை அழுத்த வேண்டும். அவ்வளவுதான் உங்களுக்கு தேவையான ரொக்கப் பணம் ஏடிஎம்மில் இருந்து வெளியே வந்துவிடும்.
பழைய ஏடிஎம் மெஷின் பயன்பாட்டில் இருக்கும் சில இடங்களில் இந்த வசதி இல்லாமல் இருக்க வாய்ப்பு உள்ளது. உங்கள் கணக்கு இருக்கும் வங்கியில் இந்த வசதி உள்ளதா என்பதையும் ஒரு முறை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டியது அவசியம்.
