சப்ஜா விதைகளை ஊறவைத்த நீரைக் குடித்தால் உடல் எடை குறையும் என்பது பலரின் நம்பிக்கை. ஆனால், இதை தினமும் குடிப்பது நல்லதா… எந்தளவு சாப்பிட வேண்டும் என்பது தெரியாது. இந்த நிலையில் இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட்ஸ் என்ன சொல்கிறார்கள்?
சப்ஜா மற்றும் சியா விதைகள் இரண்டுமே நிறைய ஊட்டச்சத்துகள் கொண்டவை. இவற்றில் அதிக நார்ச்சத்து, புரதச்சத்து மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம், கால்சியம், மக்னீசியம் உள்ளிட்ட சத்துகள் அதிகம்.
எனவே இவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியத்தை நிச்சயம் மேம்படுத்த முடியும்.
இந்த இரண்டு விதைகளையுமே தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைத்தால் ஜெல் வடிவத்துக்கு மாறும். அதை தண்ணீரில், ஜூஸில், சர்பத்தில் கலந்து குடிக்கலாம்.
அது தவிர சாலட், சூப் போன்றவற்றில் இந்த விதைகளை ஊறவைக்காமலும் அப்படியே தூவிச் சாப்பிடலாம்.
நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளில் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் தன்மை இருக்கும். ரத்தச் சர்க்கரை அளவையும் அவை குறைக்கும்.
அந்த வகையில் இதய நோயாளிகள், நீரிழிவு உள்ளவர்கள், கொலஸ்ட்ரால் அதிகமுள்ளோர் ஆகியோர் இந்த விதைகளை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது பலன் தரும்.
புரதச்சத்து அதிகம் என்பதால் அடிக்கடி பசி உணர்வு ஏற்படுவது தடுக்கப்படும். நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கல் பிரச்சினைக்கும் இவை தீர்வாக அமையும்.
இந்த விதைகள் சேர்க்கப்படும் உணவுகளைச் சாப்பிடும்போது குறைவாகச் சாப்பிட்டாலே வயிறு நிறைந்த உணர்வு ஏற்படும் என்பதால் அதன் மூலம் மறைமுகமாக எடைக் குறைப்பும் நிகழும். எடை குறைந்தால் ரத்தச் சர்க்கரை, கொழுப்பு, ரத்த அழுத்தம் என எல்லாம் கட்டுப்பாட்டுக்குள் வரும்.
ஆனால், இந்த விதைகளைச் சாப்பிடுவதால் சிலருக்கு வயிற்று உப்புசம் ஏற்படலாம். அதனால் புதிதாக இந்த விதைகளைச் சாப்பிட ஆரம்பிக்கிறவர்கள் அரை அல்லது ஒரு டேபிள்ஸ்பூன் அளவுடன் தொடங்கலாம்.
அது பழகியதும் இரண்டு டேபிள்ஸ்பூன் வரை போகலாம். அதற்கு மேல் பயன்படுத்துவது நல்லதல்ல. இந்த விதைகளைச் சாப்பிடும்போது கூடவே நிறைய தண்ணீர் குடிக்க வேண்டியதும் அவசியம்” என்று விளக்கமளிக்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: மஞ்சள் சோயா மில்க்
200 ரூபா பட்ஜெட்… அப்டேட் குமாரு
இமாச்சல், மணிப்பூர், கேரளா… தேசியத்துக்கு வழிகாட்டும் தாய்மை நிறைந்த தமிழ்நாடு
ஃபேக் சர்டிபிகேட்: பூஜா கெட்கர் ஐஏஎஸ் தேர்ச்சி ரத்து… யுபிஎஸ்சி அதிரடி!