நம்மில் பலர் வெளியே கிளம்பும்போது சிரத்தையெடுத்து அழகுப்படுத்தி கொள்வார்கள். ஆனால் வீடு திரும்பியதும் முகத்தில் கண்களில் இருக்கும் மேக் அப் பொருட்களைக் கலைக்காமல் அப்படியே விட்டு விடுவார்கள்.
இதனால் சருமத்தினுள்ளே ரசாயனங்கள் ஊடுருவ வாய்ப்புண்டு. சருமத் துளைகளிலும் பருக்கள் மாதிரியான பிரச்சினைகள் வரக்கூடும். எனவே, மேக் அப்பை கலைக்க வீட்டிலிருக்கும் பொருட்களை பயன்படுத்தினாலே போதும்… சருமத்துக்குப் பாதுகாப்பும் கிடைக்கும்.
சுத்தமான நீரில் முகத்தை கழுவி மேக் அப் கலைப்பதைக் காட்டிலும் சில துளி தேங்காய் எண்ணெய் முகத்தில் இருக்கும் ஒட்டுமொத்த மேக் அப்பை சுத்தமாக நீக்கிவிடும்.
ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை எடுத்து உள்ளங்கையில் தடவி நன்றாக தேய்த்து முகம் முழுக்க லேசாக மசாஜ் செய்தால் மேக் அப் நீங்கும். கண்களில் மஸ்காரா, காஜல் நீக்கத்தை பாதிப்பில்லாமல் நீக்க தேங்காய் எண்ணெய் உதவும்.
காய்ச்சாத பாலை சுத்தமான காட்டனில் நனைத்து முகத்தில் நன்றாக படரும் படி ஒற்றி ஒற்றி எடுங்கள். ஐந்து நிமிடங்கள் கழித்து மீண்டும் காட்டனை கொண்டு துடைத்து எடுங்கள்.
மேக் அப் சற்று கூடுதலாக பயன்படுத்தி இருப்பவர்கள் ஆலிவ் எண்ணெயை காட்டனில் நனைத்து முகத்தை துடைத்து பிறகு பாலை கொண்டு சருமத்தை சுத்தம் செய்யலாம்.
இவை சரும துளைகளில் இருக்கும் அழுக்கை நீக்கி முகத்தை பளிச்சென்று வைக்க உதவும். பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடலாம்.
அழகு சாதன பொருள்கள் எப்போதாவது சருமத்தில் லேசான எரிச்சலை உண்டாக்குவது போல் இருப்பவர்கள் சிறப்பான முறையில் அதை அகற்ற வெள்ளரிக்காய் உதவும்.
வெள்ளரிக்காயை தோல் சீவி நன்றாக மைய அரைத்து விழுதாக்கி வைத்துகொள்ளவும். தினசரி மேக் அப் பயன்படுத்துபவர்கள் வாரம் ஒருமுறை இதை மசித்து வைத்துகொள்ளலாம். மேக் அப் கலைக்கும்போது இந்த விழுதை முகத்தில் தடவி மசாஜ் செய்து 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்.
கற்றாழை ஜெல்லுடன் சிறிதளவு பன்னீர் சேர்த்து சுத்தமான காட்டனில் நனைத்து முகத்தை துடைத்து எடுக்கலாம். கண்களை சுற்றியிருக்கும் மேக் அப்பையும் இதை கொண்டு துடைத்து எடுக்கலாம்.
கற்றாழை பயன்படுத்துவதன் மூலம் கருவளையங்கள் வராமல் தடுக்க முடியும். இதை கொண்டு மசாஜ் செய்த பிறகு குளிர்ந்த நீரில் முகம் கழுவ வேண்டும். தொடர்ந்து இப்படி செய்தால் முகம் மென்மையாக மாறும்.
பார்ட்டி, திருமணம் போன்ற விசேஷங்களின்போது சற்று அதிகப்படியான மேக் அப் பயன்படுத்துவது உண்டு. இந்த நேரத்தில் முகத்துக்கு ஆவி பிடிப்பதன் மூலம் முகத்தில் இருக்கும் மேக் அப் முழுவதுமே வெளியேறும்.
அதோடு சருமத்துவாரங்களில் இருக்கும் அழுக்குகள் வெளியேறி அகற்றப்படும். இதன் மூலம் மறுநாள் உங்கள் முகத்தில் கூடுதல் பொலிவை உணரலாம்.
மேக் அப் பயன்பாட்டுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் போன்று அதை கலைப்பதற்கும் முக்கியத்துவம் கொடுத்தால் சருமம் எல்லா காலங்களிலும் எல்லா நேரங்களிலும் அழகாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க முடியும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
IPL 2024 Final: சேப்பாக்கம் மைதானம் யாருக்கு சாதகம் ? ப்ளஸ் மைனஸ் ரிப்போர்ட்!
share market ’பங்காளி’கள் கவனத்துக்கு… லாப திசையில் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட்!