மார்ச் மாதம் பாதி நாட்களிலேயே வெயிலில் தாக்கம் அதிகரித்து வருகிறது. இது மேலும் அதிகமாகும்போது ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு ஏற்படக்கூடும் என்கிறார்கள் பொதுநல மருத்துவர்கள். How to prevent heat stroke?
“நமது உடலில் இயல்பான வெப்பநிலை 37 டிகிரி சென்டிகிரேடு. அதற்கு மேல் சேரும் வெப்பத்தை உடலே வெளியேற்றி விடும். இந்த வெளியேற்றம் பல வழிகளில் நடக்கும். அவற்றில் முக்கியமானது வியர்வை. கோடைக்காலத்தில் மற்ற வழிகளைவிட வியர்வை மூலமாகவே வெப்பம் வெளியேறி உடல் குளிர்வடையும்.
நம் உடலில் ரத்தம், தசை என எல்லாப் பகுதிகளுக்கும் தண்ணீர் தேவை. உடல் அதிக வெப்பத்தால் தாக்குறும்போது இந்த உறுப்புகள் எல்லாம் இயங்கத் தேவையான அளவு தண்ணீரை வைத்துக்கொண்டே, வியர்வைக்கான தண்ணீரை உடல் ஒதுக்கும். நாம் போதிய தண்ணீர் குடிக்கவில்லை என்றால் வியர்வை சுரப்பு பாதிக்கப்படும். வெப்பநிலையைச் சமன்படுத்தும் பணி தொய்வடையும். வெப்பநிலை 40-42 டிகிரிக்கு மேல் உயர்ந்து ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படும்.
அதனால் வெயில் காலத்தில் தண்ணீர் அதிகமாக அருந்துவது அவசியம். காற்றோட்டமான இடத்தில் இருக்க வேண்டும். வெயிலில் அல்லது இறுக்கமான இடங்களில் வேலை செய்பவர்களுக்கு அதிக அளவு வியர்வை சுரந்து உடலிலிருக்கும் உப்புகளும் சேர்த்து வெளியேறிவிடும். அவர்கள் கூடுதல் தண்ணீர், எலெக்ட்ரோலைட், எலுமிச்சை போன்ற பழச்சாறுகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
குறிப்பாக, முதியோர், சிறு குழந்தைகள் மீது கூடுதல் கவனம் தேவை. அடர்நிற ஆடைகள் வெப்பத்தை உள்வாங்கும். அதனால் மென்மையான நிற ஆடைகள் அணிவது பாதுகாப்பு. சிறுநீரகம், இதயம் சார்ந்த நோய் உள்ளவர்கள் தீவிர வெயில் நேரத்தில் வெளியில் நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி அவர்கள் தண்ணீர், பிற உணவுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும்” என்று அறிவுறுத்துகிறார்கள். How to prevent heat stroke?