பியூட்டி டிப்ஸ்: பற்களைப் பளபளப்பாக்க 10 வழிகள்!

Published On:

| By Selvam

10 Ways to Whiten Your Teeth

1. சாப்பிட்ட பின்னர் வாயில் எஞ்சி இருக்கும் உணவுத் துகள்களே பாக்டீரியாக்கள் பெருகும் இடங்கள். எனவே, ஒவ்வொரு முறை சாப்பிட்டு முடித்ததும் வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும்.

2. காலை, இரவு என்று தினமும் இரண்டு வேளை பல் துலக்குவது அவசியம். இரவு படுக்கும்போது உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்துவிட்டுப் படுப்பது பற்களுக்கு நல்ல பாதுகாப்பைத் தரும்.

3. பற்களை நீண்ட நேரம் துலக்கக் கூடாது. ஏனெனில், அது பல்லின் வெளிப்புறத்தில் உள்ள எனாமலைத் தேய்த்துவிடும். மேற்புற ஈறுகளை மேலே இருந்து கீழாகவும், கீழ்ப்புற ஈறுகளை கீழே இருந்து மேலாகவும் விரலால் அழுத்தித் தேய்த்தால், ஈறுகள் பற்களுடன் வலுவாக இணைந்திருக்கும். உணவுத் துகள்கள் பற்களுக்கும் ஈறுகளுக்கும் இடையில் தங்காது. பாக்டீரியா தொற்றுக்கான வாய்ப்புகள் குறையும். துர்நாற்றமும் ஏற்படாது. ஈறுகளில் வீக்கமும் ரத்தக் கசிவும் ஏற்படாமல் பற்கள் பாதுகாக்கப்படும்.

4. கார்போஹைட்ரேட்கள், சர்க்கரைப் பொருட்கள் போன்றவை பற்சிதைவைத் தூண்டும் காரணிகள். இவற்றின் விஷயத்தில் கவனமாக இருந்தால், பற்சிதைவுக்கான வாய்ப்புகள் குறையும்.

5. பற்சிதைவு ஆரம்பத்தில் ஒரு சிறிய கரும்புள்ளி போலப் பல்லின் மேற்பரப்பில் தோன்றும். இந்த நிலையிலேயே பல் மருத்துவரைச் சந்தித்து உரிய ஆலோசனையும் சிகிச்சையும் பெற்றால் மேற்கொண்டு பல் சொத்தை ஆகாமல் பாதுகாக்கலாம். ஆனால், மிக ஆழமாகக் குழி உண்டாகி, நரம்பு வரையிலும் பற்சிதைவு ஏற்பட்டிருந்தால் பற்களைப் பிடுங்கி எடுக்க வேண்டிய அவசியம் உருவாகும்.

6. பற்களை எடுத்திருந்தால், ஒரு மாதத்தில் இருந்து ஆறு மாதங்களுக்குள் செயற்கைப் பற்களைப் பொருத்திக்கொள்ள வேண்டும். இல்லை எனில் மேற்பற்கள் கீழே இறங்கவோ அல்லது கீழ்ப் பற்கள் மேலே ஏறவோ அல்லது பக்கவாட்டுப் பற்கள் சரியவோ கூடும். இதைத் தவிர்த்து எஞ்சிய பற்களைப் பாதுகாக்கப் பொய்ப் பற்கள் கட்டிக்கொள்வதுதான் உத்தமம்.

7. பற்களால் நகத்தைக் கடித்தல், பென்சில் போன்ற பொருட்களைக் கடித்தல், குண்டூசி மற்றும் குச்சியால் பற்களைக் குத்துதல் போன்ற செயல்களைச் செய்யக் கூடாது. இவை பற்களில் நோய்த் தொற்றினை ஏற்படுத்திவிடும்.

8. கார்பன்டை ஆக்ஸைடு கலந்த குளிர்பானங்கள் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். இவற்றில் உள்ள அமிலங்கள் பற்களில் உள்ள எனாமலைப் பாதிப்பதோடு பற்களையும் அரிக்கின்றன. பானங்களைக் குடித்தே ஆக வேண்டிய சமயங்களில் இயன்றவரை ஸ்ட்ரா மூலம் அருந்தலாம்.

9. பால் புட்டியில் பால் அருந்தியவுடன் குழந்தைகள் அப்படியே தூங்கிவிடும். இந்தச் சமயத்தில், வாயில் இருக்கும் பாக்டீரியாக்கள் பாலுடன் வினை புரிந்து அமிலம் உருவாகி, பால் பற்கள் பாதிக்கப்படும். எனவே, குழந்தை பால் குடித்த பிறகு சிறிது தண்ணீரைக் குடிக்கச் செய்வது அவசியம்.

10. பற்களின் பாதுகாப்புக்கும் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. பல் மற்றும் ஈறு தொடர்பான நோய்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு அதிகம் வர வாய்ப்பு இருப்பதால், ரத்தத்தில் சர்க்கரையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது நல்லது. புகையிலை மற்றும் மது பழக்கம் ஈறுகளில் புற்றுநோயை ஏற்படுத்தும் சாத்தியம் இருப்பதால், அவற்றைத் தவிர்ப்பது பல் பாதுகாப்புக்கு உதவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா – சண்டே ஸ்பெஷல்: பனீரை எப்படிப் பயன்படுத்துவது ஆரோக்கியமானது?

என்ன ராஜேஷ்…ஜெயிச்சிட்டியா? 9 ஆவது ரவுண்டில் ஸ்டாலின் போட்ட போன்!

அமலுக்கு வந்த புதிய மதுவிலக்குத் திருத்தச் சட்டம் : என்னென்ன தண்டனைகள்?

வெற்றி வாகை சூடிய இந்தியா கூட்டணி… பின்னடைவை சந்தித்த பாஜக!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share