‘ஊறுகாய் இருந்தால்தான் சோறே இறங்கும்’ என்று சொல்பவர்கள் நம்மில் பலர் உண்டு. குறிப்பாக, உப்பு, மிளகாய்த்தூள், எண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்துத் தயாரிக்கப்படுகின்றன ஊறுகாய் வகைகள்.
இவை பார்ப்பதற்கு கண்ணைப் பறிப்பதோடு, நாவூற வைக்கும் சுவையிலும் இருப்பதால் உணவுப் பிரியர்களின் விருப்பப்பட்டியலில் ஊறுகாய்க்கும் பிரதான இடம் உண்டு.
வழக்கமான ஊறுகாய் வகை காரசாரமாக இருக்க… அதில் கொஞ்சம் இனிப்பையும் சேர்த்து இந்த ஸ்வீட் மாங்காய் ஊறுகாயைச் செய்து பாருங்கள். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
என்ன தேவை
மாங்காய்த் துருவல் – 2 கப்
சர்க்கரை – ஒன்றரை கப்
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
சீரகத்தூள் – அரை டீஸ்பூன்
பட்டைத்தூள், லவங்கத்தூள் – தலா கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள், உப்பு – தலா ஒரு டீஸ்பூன்
எப்படி செய்வது
மாங்காய்த் துருவலுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து இரண்டு மணி நேரம் மூடி வைக்கவும். (மாங்காயில் சிறிதளவு தண்ணீர் விட்டிருக்கும்).
அதனுடன் சர்க்கரை, மிளகாய்த்தூள், சீரகத்தூள், பட்டைத்தூள், லவங்கத்தூள் சேர்த்து நன்றாகக் கிளறி மெல்லிய துணியால் மூடி வெயிலில் வைக்கவும் (ஏழு நாள்கள் வெயிலில் வைக்கவும்).
காலையும் மாலையும் ஊறுகாயை நன்றாகக் கிளறிவிடவும். சர்க்கரைப்பாகு இரண்டு கம்பிப் பதம் வந்தவுடன் வெயிலில் வைப்பதை நிறுத்திவிடவும்.
மற்றொரு முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை அடிகனமான பாத்திரத்தில் சேர்த்து மிதமான தீயில் வைத்து இரண்டு கம்பிப் பதம் பாகு வரும் வரை கிளறி இறக்கவும். இந்த ஊறுகாயைச் சப்பாத்தி, பூரியுடன் தொட்டுக்கொள்ளலாம்.
குறிப்பு: பட்டைத்தூள், லவங்கத்தூள் ஆகியவற்றை விருப்பப்பட்டால் சேர்க்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிஜிட்டல் திண்ணை: மாறும் வேட்பாளர்கள் யார்? ஸ்டாலின் கையில் ஹிட் லிஸ்ட்!