பொதுவாக வீடுகளில் இட்லிக்கு மாவரைக்கும்போது முதல் இரண்டு நாள்களுக்கு இட்லியும், அடுத்தடுத்த நாள்களில் தோசையும் செய்வது வழக்கம்.
ஆனால், சிலர் தோசைக்கென தனியே மாவு அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்… அப்படி அரைத்தால்தான் ஹோட்டல் தோசை போல் இருக்கும் என்று நினைக்கிறார்கள்.
இது உண்மையா? இப்படி தோசைக்கென பிரத்யேகமாக அரைப்பதென்றால் என்னென்ன சேர்க்க வேண்டும்… எப்படி அரைக்க வேண்டும் என்பது பல இல்லத்தரசிகளின் கேள்வி.

இதற்கான பதில் என்ன?
“இட்லிக்கும், தோசைக்கும் தனித்தனியே மாவு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும் என கட்டாயம் இல்லை.
இட்லி மாவையே தோசைக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். நேரமும் விருப்பமும் உள்ளவர்கள் தோசைக்கென தனியாக மாவு அரைத்து வைத்துக்கொள்ளலாம்.
ஒரு கப் பச்சரிசி, ஒரு கப் புழுங்கலரிசி, கால் கப் உளுந்து, ஒரு டேபிள்ஸ்பூன் துவரம்பருப்பு, ஒரு டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு, அரை டீஸ்பூன் வெந்தயம்… இவை அனைத்தையும் 4-5 மணி நேரத்துக்கு ஒன்றாக ஊறவைத்து, நைசாக அரைத்துக்கொள்ளவும்.
உப்பு சேர்த்து இட்லி மாவு போலவே புளிக்க வைக்க வேண்டும். தோசை வார்ப்பதற்கு முன் ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்கு அடித்துக் கலந்துவிட்டு தோசை வார்த்தால் ஹோட்டல் தோசை போல மொறுமொறுப்பாகவும் சிவப்பாகவும் நைசான தோசை கிடைக்கும்.
ஆனால், இப்படி அரைக்கும் மாவை இரண்டு நாள்களுக்கு மேல் வைத்திருக்கக் கூடாது. இந்த மாவை தோசை வார்த்ததும் சூடாக உடனே சாப்பிட்டுவிட வேண்டும். ஆறினால் ரப்பர் போல மாறிவிடும்” என்கிறார்கள் சமையற்கலைஞர்கள்.

Comments are closed.