ADVERTISEMENT

கிச்சன் கீர்த்தனா: பலாக்காய் பிரியாணி

Published On:

| By Monisha

நம்முடைய உடலில் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் இருக்கும். அவற்றின் அளவைப் பொறுத்துதான் யாருடைய உடல்வாகு எப்படி என்று ஆயுர்வேத, சித்த மருத்துவத்தில் மருந்தே கொடுப்பார்கள். இந்த மூன்றும் சரியான அளவில் இருந்தால்தான் நல்லது.

இதன் சமநிலை கெடும்போதுதான் உடலில் ஏராளமான நோய்கள் உருவாகின்றன. அப்படிப்பட்ட நிலையில் பலாக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் சமநிலையில் இருக்க உதவும். அதற்கு பலாக்காய் பிரியாணி செய்து இந்த வீக் எண்ட் நாளைச் சிறப்பாக்கும்.

ADVERTISEMENT

என்ன தேவை?

சிறிய பலாக்காய் – ஒன்று (தோல் நீக்கி, சுத்தம் செய்து பெரிய துண்டுகளாக நறுக்கவும்)
பாசுமதி அரிசி – ஒன்றரை கப்
பெரிய வெங்காயம் – 2 (மெல்லியதாக நறுக்கவும்)
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
தனியாத்தூள் (மல்லித்தூள்) – அரை டீஸ்பூன்
பிரியாணி மசாலாத்தூள் – கால் டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
புதினா இலைகள் – கைப்பிடியளவு
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன்
தயிர் – ஒன்றரை கப்
பிரிஞ்சி இலை – 2
ஏலக்காய் – 4
பட்டை – ஒரு துண்டு
லவங்கம் – 6
பச்சை மிளகாய் – 4 (பொடியாக நறுக்கவும்)
நெய் – 4 டேபிள்ஸ்பூன்
ரோஸ் வாட்டர், குங்குமப்பூ – சிறிதளவு
முந்திரி, எண்ணெய், உப்பு – தேவையான அளவு

ADVERTISEMENT

எப்படிச் செய்வது?

பாசுமதி அரிசியை அரை மணி நேரம் ஊறவைக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு நறுக்கிய பெரிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். பிறகு, பலாக்காய் துண்டுகள் சேர்த்துப் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

ADVERTISEMENT

ஒரு பாத்திரத்தில் நான்கு கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். இதனுடன் ஒரு டீஸ்பூன் நெய், பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை, ஏலக்காய், உப்பு சேர்த்து மேலும் கொதிக்கவிடவும். பிறகு அரிசியைப் போட்டு வேகவிடவும். முக்கால் வேக்காடு பதத்துக்கு வெந்ததும் வடித்து ஆறவிடவும். உதிர் உதிராக வைத்துக்கொள்ளவும்.

அடிகனமான பாத்திரத்தில் மீதமுள்ள நெய்யை விட்டு முந்திரி சேர்த்து வறுக்கவும். இதனுடன் பச்சை மிளகாய், பலாக்காய்த் துண்டுகள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள் (மல்லித்தூள்), பிரியாணி மசாலாத்தூள், கொத்தமல்லித்தழை, புதினா இலைகள், இஞ்சி – பூண்டு விழுது, தயிர் சேர்த்து வதக்கி இறக்கவும். ஒரு பாத்திரத்தில் வடித்த சாதத்தைப் சேர்க்கவும், அதன் மேல் வதக்கிய பலாக்காய் மசாலா, பொரித்த வெங்காயம் என்று வரிசையாக அடுக்கி சிறிதளவு தண்ணீர், ரோஸ் வாட்டர், குங்குமப்பூ சேர்த்து `தம்’ போட்டு இறக்கவும்.

கிச்சன் கீர்த்தனா: பலாக்கொட்டை மசாலா ரோஸ்ட்

கிச்சன் கீர்த்தனா: பலாப்பழ பருப்பு பாயசம்

How to Make Jackfruit Biryani in Tamil
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share