ஹெல்த் டிப்ஸ்: வாய் துர்நாற்றம் போக்குவது எப்படி?

Published On:

| By christopher

How to get rid of bad breath?

தற்போது பயன்பாட்டில் உள்ள மேற்கத்திய உணவு முறைகளாலும் அவசர கதி வாழ்க்கை முறையாலும் ‘வாய் துர்நாற்றம்’ என்பது பலரையும் வாட்டும் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது.

சரியாகப் பல் துலக்காமல் இருப்பது, உணவு சாப்பிட்டதும் ஒழுங்காக வாய் கொப்பளிக்காமல் இருப்பது போன்றவை வாய் நாற்றத்தை ஏற்படுத்துகின்றன.

உணவைச் சாப்பிட்டதும் வாயை நன்றாகச் சுத்தம் செய்யத் தவறினால், உணவுத் துகள்கள் பல் இடுக்குகளில் மாட்டிக்கொள்ளும். அப்போது, வாயில் இயற்கையாகவே வசித்துக்கொண்டிருக்கிற லட்சக்கணக்கான பாக்டீரியாக்கள், இந்த உணவுப் பொருட்களுடன் வினை புரியும். இதனால், உணவுத் துகள்கள் அழுகும். அப்போது கந்தகம் எனும் வேதிப்பொருள் உருவாகும். இது கெட்ட வாயுவை வெளியேற்றும். இதுதான் வாய் நாற்றத்துக்கு அடிப்படைக் காரணம்.

இந்த நிலையில் வாய் நாற்றம் உள்ளவர்கள் முதலில் பல் மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலும் ‘ஸ்கேலிங்’ முறையில் பற்களைச் சுத்தம் செய்துகொண்டாலே வாய் நாற்றம் சரியாகிவிடும். இது தவிர, பற்களில் வேறு ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், அவற்றுக்குரிய சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அடுத்து, பொது மருத்துவர் மற்றும் காது-மூக்கு-தொண்டை சிறப்பு மருத்துவர் உதவியுடன் சைனஸ் எக்ஸ்-ரே மற்றும் ஸ்கேன், மார்பு எக்ஸ்-ரே, எண்டாஸ்கோபி (Endoscopy) பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இவற்றால் மற்றக் காரணங்களைக் கண்டறிந்து, அவற்றையும் களைந்துவிட்டால் வாய் நாற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்.

வாய் நாற்றத்தைத் தடுக்க விரும்புவோர் வாயைச் சுத்தமாக வைத்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தினமும் காலை எழுந்ததும் ஒருமுறை, இரவு படுக்கப் போகும் முன்பு ஒருமுறை பற்களைத் துலக்க வேண்டும். கடினமான பல்துலக்கிகளைப் பயன்படுத்தினால் பல் ஈறுகளுக்குக் கெடுதல் உண்டாகிவிடும். மிருதுவான பல்துலக்கிகளைப் பயன்படுத்துவது நல்லது.

அடுத்து, சாப்பிடும் முன்பும் சாப்பிட்ட பின்பும் வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும். வாயைச் சுத்தப்படுத்தும் ஒவ்வொரு முறையும் நாக்கையும் சுத்தப்படுத்த வேண்டியது அவசியம். முக்கியமாக, நாக்கின் பின்புறத்தை நன்றாகச் சுத்தப்படுத்த வேண்டும். அங்குதான் 80 சதவிகிதம் பாக்டீரியாக்கள் வசிக்கின்றன. பெரும்பாலோருக்கு வாய் நாற்றம் அங்குதான் ஆரம்பிக்கும்.

இறைச்சி, மீன் போன்ற அசைவ உணவு வகைகளைச் சாப்பிட்ட பின்பு, பற்களின் இடையில் சிக்கியுள்ள உணவுத் துகள்களை அகற்றுவதற்குப் பலரும் பல்குச்சியைப் பயன்படுத்துவார்கள். அப்படி அடிக்கடி பற்களைக் குத்தும்போது, குச்சி பல் ஈறுகளில் பட்டு புண்ணை ஏற்படுத்திவிடும், இது வாய் நாற்றத்தை அதிகரித்துவிடும். எனவே, பல்குச்சிகளைக் கவனமாகக் கையாள வேண்டும் அல்லது இதற்கென்றே உள்ள பல்துலக்கி வயர்களைப் பயன்படுத்த வேண்டும்.

நேர்காணலுக்குச் செல்லும்போதும் சிறப்பு விருந்தினர்களுடன் உரையாடும்போதும் செயற்கை மணமூட்டிகளைப் பயன்படுத்தலாம். அதேவேளையில் அடிக்கடி அவற்றைப் பயன்படுத்தினால், அவற்றில் உள்ள சில வேதிப்பொருள்கள் பற்களைக் கெடுத்துவிடக்கூடிய ஆபத்தும் இருக்கிறது. இதனால் இவற்றுக்குப் பதிலாக லவங்கம், ஏலக்காய், சோம்பு போன்ற இயற்கை மணமூட்டிகளை வாயில் சிறிது நேரம் அடக்கிக்கொண்டால் வாய் மணக்கும்.

வாய் நாற்றத்தைப் போக்கி, புத்துணர்வை உண்டாக்க என்று பல்வேறு ‘மவுத் வாஷ்’ திரவங்கள் கிடைக்கின்றன. இவற்றை அடிக்கடி பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. பல் மருத்துவரின் ஆலோசனையுடன் தேவைப்படும்போது பயன்படுத்துவதே நல்லது. ஏனென்றால், மவுத் வாஷைப் பயன்படுத்தும்போது தீமை தரும் பாக்டீரியாக்களுடன், வாய்க்குள் இருக்கும் நன்மை தரும் பாக்டீரியாக்களும் அழிந்துவிடுகின்றன. இது வாயின் ஆரோக்கியத்தைக் கெடுத்துவிடும். எனவே, மவுத் வாஷ் விஷயத்தில் எச்சரிக்கை தேவை.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பியூட்டி டிப்ஸ்: தேன் தடவினால் முடி செழிக்கும்!

டாப் 10 நியூஸ் : கிருஷ்ண ஜெயந்தி முதல் தமிழ்த்தென்றல் திரு.வி.க பிறந்த நாள் வரை!

கிச்சன் கீர்த்தனா : டிரை ஃப்ரூட் சிக்கி

ரஜினி பற்றிய துரைமுருகன் பேட்டி… ‘அவர் மந்திரியா இருக்கணுமா வேணாமா?’ கொதித்த ஸ்டாலின்…திமுகவில் நடப்பது என்ன?

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share