ஹெல்த் டிப்ஸ்: ஜிம்மில் சேரப் போறீங்களா… இதையெல்லாம் கவனத்தில் கொள்ளுங்கள்!

Published On:

| By Minnambalam Desk

தற்போது பலருக்கும் ஆரோக்கியத்தின் மீதான விழிப்பு உணர்வும், ஆர்வமும் அதிகரித்து உள்ளது. கூடவே ஃபிட்னஸ்ஸிலும் ஈடுபாடு காட்டுகின்றனர். அதன் விளைவாக, ஆங்காங்கே பல உடற்பயிற்சி நிலையங்கள் பெருக ஆரம்பித்துள்ளன. இந்த நிலையில் உங்களுக்கான ஜிம்மை தேர்ந்தெடுக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றிக் கூறுகிறார்கள் ஃபிட்னஸ் டிரெய்னர்ஸ். How to Choose a Best Gym

ஃபால்ஸ் ஸ்டேட்மென்ட் (false statement)… அதாவது, `இத்தனை நாட்களுக்குள் உங்கள் உடல் எடையைக் குறைத்து தருகிறோம்’, `நீங்கள் கேட்பதை இத்தனை நாட்களில் செய்து தருகிறோம்’ என்றெல்லாம் சாத்தியமில்லாத உறுதிகள் கொடுக்கும் ஜிம் என்றால், சேர்வதற்கு முன் நன்றாக யோசித்துக்கொள்ளுங்கள்.

ஏனெனில், ஒவ்வொருவருடைய உடல் அமைப்பு, எடையைப் பொறுத்து அவருக்கான ஃபிட்னஸ்ஸுக்கு மாறும் காலம் மாறுபடும். அதனால் இதுபோன்ற உறுதிகளை நம்பி ஜிம்மில் சேர வேண்டாம். How to Choose a Best Gym

ஜிம்மைப் பொறுத்தவரை, ஆண்டுக் கட்டணம் (Annual package) முடிவை எடுக்காதீர்கள். `ஓர் ஆண்டுக்கு சேர்த்துக் கட்டும்போது கட்டணம் குறைவாக இருக்கிறதே…’ என்று எண்ணியோ, `ஓர் ஆண்டுக்கும் கட்டணம் செலுத்திவிட்டால், அதற்காகவாவது நாம் நிச்சயம் தவறாது ஜிம்முக்கு வந்தே தீர்வோம்’ என்று நினைத்தோ அந்த முடிவை எடுக்காதீர்கள்.

ஜிம்மைப் பொறுத்தவரை, ஒரு மாதத்தில் ஆர்வத்துடன் செல்லும் பலருக்கும் அடுத்தடுத்த மாதங்களில் ஆர்வம் குறைந்துவிடும் என்பதே உண்மை. மேலும், ஆண்டுக்கட்டணம் செலுத்திவிட்டதால், ஒரு மாதம் ஸ்கிப் செய்து அடுத்த மாதம் சென்றுகொள்ளலாம் என்ற எண்ணமும் தலைதூக்கலாம். அதனால் எப்போதும் `ஷார்ட் டேர்ம் பேக்கேஜ்’ தேர்ந்தெடுப்பதே நல்லது.

ஃபிட்னஸ்ஸில் உங்களுக்கு என்று ஓர் இலக்கு செட் செய்த பிறகு, ஜிம்மில் சேருங்கள். சென்ற பின் அங்கிருக்கும் அனைத்துக் கருவிகளையும் பயன்படுத்த நினைக்காமல், உங்களுக்கு என்ன தேவையோ அதற்கான கருவிகளில் மட்டும் வொர்க் அவுட் செய்யுங்கள். அதேபோல, உங்கள் ஃபிட்னஸ் கோலுக்கான கருவிகள் இருக்கும் ஜிம்மாகப் பார்த்து தேர்வு செய்யுங்கள்.

ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் (beginners) முடிந்த அளவுக்கு ஒரு குழுவுடன் இணைந்து ஜிம்மில் உடற்பயிற்சியை ஆரம்பியுங்கள். பலருடன் இணைந்து செய்யும்போது தொடர்ச்சி மிஸ் ஆகாமல் இருக்கும்; ஒருவர் மற்றவருக்கு மோட்டிவேட் செய்துகொள்ளலாம். சோம்பேறித்தனம் குறைந்து தன்னம்பிக்கை அதிகரிக்கும். குழுவில் உள்ளவர்களில் உங்கள் உடலமைப்பு/உங்கள் ஃபிட்னஸ் கோலுடன் ஒத்துப்போகிறவர்கள் உங்களுக்கு ஒரு நல்ல துணையாகவும் கிடைப்பார். எனவே, முடிந்த அளவுக்கு குழுவுடன் இணைந்து பயிற்சி மேற்கொள்வது போன்ற ஜிம்மை தேர்வு செய்யுங்கள்.

ஜிம்மில் சேரும் முன் ஜிம்முக்கும் உங்கள் வசிப்பிடத்துக்கும் உள்ள தொலைவை கவனத்தில் கொள்ள வேண்டும். அதிக தூரத்தில் உள்ள ஜிம்மை தேர்வு செய்தால், போக்குவரத்து சிரமங்களால் தொடர்ந்து அங்கு செல்ல முடியாமல் போகலாம். அதனால் அருகிலேயே இருக்கும் ஜிம்மை தேர்வு செய்வது நல்லது. How to Choose a Best Gym

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share