“வங்கித் தேர்வெல்லாம் எழுதி அலுத்துப்போச்சா? தேர்வு இல்லாமலேயே ரிசர்வ் வங்கியில் நுழைய ஒரு வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்?” அப்படியொரு அரிய வாய்ப்பைத்தான் தற்போது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்துள்ளது. வழக்கமான போட்டித் தேர்வுகள் இல்லாமல், குறிப்பிட்ட துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்காக (Lateral Entry) கதவுகளைத் திறந்துள்ளது ஆர்பிஐ.
வங்கித்துறையின் தலைமைப் பீடமான ஆர்பிஐயில், ஆலோசகர்கள் மற்றும் சிறப்பு நிபுணர்கள் (Consultants/Subject Matter Experts) பதவிகளுக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.
யாரெல்லாம் தேவை?
இந்த முறை ஆர்பிஐ குறிவைப்பது அனுபவம் வாய்ந்த இரண்டு துறைப் புலிகளைத்தான்:
- கம்யூனிகேஷன் எக்ஸ்பர்ட் (Communication Experts): வங்கியின் கொள்கைகள், அறிவிப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத் துறை சார்ந்த வல்லுநர்கள்.
- சட்ட நிபுணர்கள் (Legal Experts): சர்வதேசச் சட்ட விவகாரங்கள், நிதி சார்ந்த வழக்குகள் ஆகியவற்றைக் கையாளும் திறமை படைத்த வக்கீல்கள்.
தகுதி என்ன?
இது பிரஷர்களுக்கான வேலை இல்லை. அந்தந்தத் துறையில் கரைத்துக்குடித்தவர்களுக்கான களம்.
- கல்வி: இதழியல் (Journalism), மக்கள் தொடர்பு (Mass Communication) அல்லது சட்டம் (Law) ஆகியவற்றில் முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- அனுபவம்: குறைந்தது 15 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். அதுவும் சர்வதேச நிறுவனங்கள் அல்லது பெரிய நிதி நிறுவனங்களில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை.
- வயது: 40 முதல் 55 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
சம்பளம் எப்படி?
ஆர்பிஐ ஆளுநரே பார்த்து வியக்கும் அளவுக்குச் சம்பளம் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இது ஒப்பந்த அடிப்படையிலான பணி (Contract Basis) என்பதால், உங்களின் முந்தைய சம்பளம் மற்றும் அனுபவத்தைப் பொறுத்து, “கேட்டதைக் கொடுக்கும்” மனநிலையில் ஆர்பிஐ உள்ளது. லட்சங்களில் சம்பளம் புரளும் என்பது உறுதி.
தேர்வு முறை:
வழக்கமான ஆன்லைன் தேர்வு, ரீசனிங், ஆப்டிட்யூட் எதுவும் கிடையாது. விண்ணப்பங்களைப் பரிசீலித்து (Shortlisting), நேராக நேர்காணலுக்கு (Interview) அழைப்பார்கள். அங்கு உங்கள் திறமையை நிரூபித்தால், அடுத்த நாளே மும்பையில் ஆர்பிஐ கேபினில் உட்காரலாம்.
விண்ணப்பிப்பது எப்படி?
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.rbi.org.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி தேதி:
விண்ணப்பங்கள் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: பிப்ரவரி 14, 2026 (மாலை 6 மணிக்குள்).
இளைஞர்களுக்கு இது வாய்ப்பில்லை என்றாலும், மீடியா மற்றும் சட்டத்துறையில் நீண்ட காலமாக இருப்பவர்களுக்கு இது ஒரு ‘லைப் டைம் செட்டில்மென்ட்’. ஆர்பிஐ போன்ற ஒரு கௌரவமான இடத்தில் ஆலோசகராக இருப்பது, கேரியரின் உச்சம்!
