பிற்படுத்தப்பட்டோர் தொழில் தொடங்க ரூ.15 லட்சம் கடனுதவி: விண்ணப்பிப்பது எப்படி?

Published On:

| By christopher

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் தொழில் தொடங்க ரூ.15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

”பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்தவர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சாத்தியக்கூறுள்ள சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் கடன் மற்றும் குழுக் கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் உதவி வழங்கப்படுகிறது.

இதில் பயனடைய பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருத்தல் வேண்டும்.

குடும்ப ஆண்டு வருமானம் ரூ.30,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். தனிநபர் கடன் திட்டத்தின் கீழ் சிறு வர்த்தகம், வணிகம், விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த தொழில்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் மரபு வழி சார்ந்த தொழில்கள் செய்வதற்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.

சுய உதவிக் குழு துவங்கி ஆறு மாதங்கள் பூர்த்தியாகியிருக்க வேண்டும். திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) அவர்களால் தரம் மதிப்பீடு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இரு பாலருக்கான சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கும் இந்தக் கடனுதவி வழங்கப்படுகிறது.

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு ஒரு கறவை மாட்டுக்கு ரூ.30,000- வீதம் இரண்டு கறவை மாடுகள் வாங்க அதிகபட்சம் ரூ.60,000- வரை கடனுதவி வழங்கப்படுகிறது.

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளிலும் கடன் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும், இக்கழக இணையதள முகவரியில் (www.tabcedco.tn.gov.in) பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம்.

கடன் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து சாதி, வருமானம் மற்றும் பிறப்பிடச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை மற்றும் வங்கி கோரும் ஆவண நகல்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் அல்லது கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் அல்லது மாவட்ட கூட்டுறவு வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்” என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 நியூஸ்: மக்களுடன் முதல்வர் திட்டம் முதல் நடராஜர் கோவில் தேரோட்டம் வரை!

கிச்சன் கீர்த்தனா : மக்னா மலாய் கறி

ஹெல்த் டிப்ஸ்: உடல் எடையை வேகமாகக் குறைக்க நினைப்பவரா நீங்கள்? எச்சரிக்கும்  ஐசிஎம்ஆர்!

ஒரு டோக்கன் கொடுத்தது தப்பாப்பா? : அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share