ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உலகளவில் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 8 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவிகிதம் இறக்குமதி செய்வதால், தொடர்ந்து விலை உயர்வு ஏற்பட்டால் பணவீக்கம் உயரும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக எரிசக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க தொழில்துறை தலைவருமான அமித் குமார் தி இந்து ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில்,
“இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமாக இறக்குமதி செய்கிறது. ஈரானில் இருந்து இந்தியா நேரடியாக அதிக அளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யாவிட்டாலும், ஈரான் – இஸ்ரேல் மோதல் எண்ணெய் விநியோகத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.
ஆனால், ஹார்முஸ் ஜலசந்தியைச் சுற்றியுள்ள பகுதிகளில் தாக்குதல் நடைபெற்றால், இந்தியாவிற்கு முக்கிய சப்ளையர்களான இருக்கும் ஈராக், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இந்தியாவிற்கு வரும் எண்ணெய் ஏற்றுமதிகளைப் பாதிக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்திப் சிங் புரி நேற்று (ஜூன் 13) அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “வரும் மாதங்களுக்கு இந்தியாவிற்கு தேவையான எரிசக்தி விநியோகம் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த மோதலால், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்தால், பெட்ரோல், உணவு என அனைத்துவிதமான அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் நிலை ஏற்படும். Israel Iran conflict could affect india