இந்தியாவில் அமலாக்கத்துறை என்கிற Enforcement Directorate (ED) என்பது சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் உள்ளிட்ட பொருளாதார குற்றங்களை விசாரிக்கும் ஒரு விசாரணை அமைப்பு. ஆனால் இத்தகைய ஒரு விசாரணை அமைப்பானது தற்போது நீதித்துறையின் கடுமையான விமர்சனங்கள், கண்டனங்களுக்கு உள்ளாவதற்கு காரணமே ஆளும் பாஜகவின் ‘அரசியல் ஆயுதமாக’ உருமாறிவிட்டதுதான். How the Enforcement Directorate
தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் வழக்கில், உச்சநீதிமன்றம் இன்று அமலாக்கத்துறையை கடுமையாக விமர்சித்துள்ளது. அரசியல் சாசனத்தை மீறுகிறது; வரம்புகளை மீறுகிறது; கூட்டாட்சி அமைப்பையே சிதைக்கிறது என்றெல்லாம் அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் காட்டமாக கண்டனம் தெரிவிக்க காரணமே, ‘ அரசியல் ஆயுதமாக’ அந்த துறை தடம் மாறிப் போனதால்தான்.
பொருளாதார குற்றங்கள் தொடர்பான சோதனைகள், விசாரணைகள் நடத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டிய அமலாக்கத்துறை என்ற அமைப்பு, சில சோதனைகளை நடத்தி வெளியிடும் அறிக்கைகள் ‘முகாந்திரம்’ இல்லாமல், தொலைக்காட்சி தொடர்கள், சினிமா காட்சி அமைப்புகளை மிஞ்சும் வகையில் இருக்கின்றன என்பது மிகையல்ல.

இந்தியாவில் தற்போது அமலாக்கத்துறை என்பது எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், அரசுடன் முரண்படும் அதிகாரிகள், அறக்கட்டளைகள், நிறுவனங்களை மிரட்டுகிற அல்லது பணிய வைக்கிற ‘அரசியல் ஆயுதமாகி’விட்டது என்பது வெளிப்படையான ஒன்று.
கடந்த 2005-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையில் அமலாக்கத்துறை மொத்தமே 112 சோதனைகளை மேற்கொண்டது. ஆனால் கடந்த 9 ஆண்டுகளில், அமலாக்கத்துறை நடத்திய சோதனைகளின் எண்ணிக்கை 3,000-த்தை தாண்டிவிட்டது. இவற்றில் 95% சோதனைகள், எதிர்க்கட்சிகளின் தலைவர்களை குறிவைத்து நடத்தப்பட்டவைதான்.
அரசுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் போராட்டத்தை அறிவித்தாலோ, விமர்சனத்தை முன்வைத்தாலோ, அரசுக்கு எதிரான கருத்துகள் மூலமாக பொதுமக்கள்- ஊடகங்களின் ஆதரவைப் பெற்றாலோ, உடனேயே அவர்கள் மீது அமலாக்கத்துறை ஏவிவிடப்படுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. இப்படி அமலாக்கத்துறை களமிறங்கும் தருணங்களில் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக, இடைவிடாத பிரேக்கிங் நியூஸ் செய்தியாக இடம் பெறும் இந்த சோதனைகள், சில மாதங்களில் சுவடுகளே இல்லாமல் அடங்கிப் போய்விடுவதும் தொடருகிறது.

அமலாக்கத்துறையின் மிக முக்கியமான ஆயுதம், சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு. இது 2002-ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தாலும் 2023-ம் ஆண்டு வரை பதிவு செய்யப்பட்ட 5,400 வழக்குகளில் மொத்தமே 25-ல்தான் அமலாக்கத்துறையால் தண்டனை பெற்றுத் தர முடிந்துள்ளது. அதாவது அமலாக்கத்துறை தாம் பதிவு செய்த வழக்குகளில் 0.5%- வழக்குகளில்தான் தண்டனையைப் பெற்றுத் தந்துள்ளது. ஆனால் சிபிஐ தாம் பதிவு செய்த வழக்குகளில் 65% வழக்குகளில் தண்டனை பெற்றுத் தந்துள்ளது.
அமலாக்கத்துறை வழக்குகள் பொதுவாக கைதுகள், சொத்துகள் முடக்கம் என்பதுடன் முடிவடைந்து விடுகின்றன; இதற்கு அப்பால், வழக்குகளில் தண்டனை பெற்றுத் தருவது, வழக்குகளை கைவிடுவது என்பவற்றில் அமலாக்கத்துறைக்கு துளியும் அக்கறை இல்லை என்பதுதான் நிலைமை.
அமலாக்கத்துறை அதிகாரிகள், போதுமான ஆதாரங்கள் எதுவுமே இல்லாமல் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துவது, ஊடகங்கள் மூலம் அவப்பெயரை ஏற்படுத்துவது என்பதாகவே செயல்பட்டு வருகின்றனர். சிறு வணிகர்கள், வங்கி பணியாளர்கள், மாநில அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் என பலதரப்பும் அமலாக்கத்துறையினரால் இப்படி சித்தரவதைகளை எதிர்கொள்கின்றனர்.
இதனால் பணி இழப்பு, வங்கி கணக்குகள் முடக்கம், நீதிமன்ற செலவினங்கள் என பல்வேறு இன்னல்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

பாஜகவின் அரசியல் ஆயுதமாக எப்படி அமலாக்கத்துறை உருமாறி இருக்கிறது? என்ற கேள்விக்கு பல மாநிலங்களின் அரசியல் தலைவர்களை உதாரணமாக சொல்ல முடியும். பாஜகவில் இன்றைக்கு இணைந்திருக்கின்ற பல தலைவர்கள், முன்னர் அங்கம் வகித்த கட்சிகளில் இருந்த போது இதே பாஜகவை கடுமையாக எதிர்த்தவர்கள்தான்.
மேற்கு வங்கத்தின் சுவேந்து அதிகாரி, அஸ்ஸாமின் ஹிமந்த பிஸ்வா சர்மா, மகாராஷ்டிராவின் நாராயண் ரானே என இந்தப் பட்டியல் மிக நீளமானது. பாஜகவில் இணைவதற்கு முன்னர் இவர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குகளைப் போட்டிருந்தது. பாஜகவில் இணைந்த பின்னர் இந்த வழக்குகளில் இருந்து இவர்கள் விடுவிக்கப்பட்டுவிட்டனர்.
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்ற போது சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை முழு வீச்சில் செயல்பட்டது; இதனால் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டாக பிளவுபட்டன; உத்தவ் தாக்கரே ஆட்சியும் கவிழ்ந்து பாஜகவின் கூட்டணி ஆட்சி அமைந்தது.
இதேபோல நிதிஷ்குமார் தலைமையில் ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி பீகாரில் நடைபெற்ற போது முழு வேகத்தில் இயங்கிய அமலாக்கத்துறை இப்போது, பாஜகவுடன் நிதிஷ்குமார் கை கோர்த்துவிட்டதால் மவுனித்துக் கிடக்கிறது. ஜார்க்கண்ட், தமிழ்நாடு என எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அமலாக்கத்துறை முழு வீச்சில் இப்போதும் செயல்பட்டு வருகிறது. இதனால்தான் அமலாக்கத்துறை பாஜகவின் அரசியல் ஆயுதம் என விமர்சிக்கப்படுகிறது.
அமலாக்கத்துறை யார் மீதும் வேண்டுமானாலும் குற்றம் சாட்டிவிடும்; குற்றம்சாட்டப்பட்டவர்தான் தம் மீதான குற்றம் இல்லை என நிரூபிக்க வேண்டும் என்கிற பிரிவுகள் அமலாக்கத்துறையின் இந்த எல்லையற்றப் போக்குக்கு ஊக்கமாக இருந்து வருகிறது.
அமலாக்கத்துறையின் இத்தகைய எல்லையற்ற அதிகாரப் போக்கை உச்சநீதிமன்றம் தொடர்ந்தும் கண்டித்து வருகிறது. தமிழ்நாட்டின் டாஸ்மாக் என்கிற அரசின் மதுபான விற்பனை நிறுவனத்தில் முறைகேடு நடந்ததாக ஏற்கனவே மாநில அரசின் லஞ்ச ஒழிப்பு போலீசார் 41 வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். ஆனால் திடீரென அமலாக்கத்துறை உள்ளே நுழைந்து, ரூ1,000 கோடி முறைகேடு நடைபெற்றுவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிக்கை தந்தது.
இது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு, அமலாக்கத்துறையை மிகக் கடுமையாக விமர்சித்தது. அமலாக்கத்துறையானது அரசியல் சாசனத்தையும் உரிய வரம்புகளையும் மீறி செயல்படுகிறது என்று கண்டனம் தெரிவித்ததுடன் நாட்டின் கூட்டாட்சி அமைப்பையே சிதைத்துக் கொண்டிருக்கிறது என பட்டவர்த்தனமாகவே கண்டித்திருக்கிறது.
ஏற்கனவே 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், ரூ1,000 கோடி முறைகேடு என அமலாக்கத்துறை அறிவித்ததற்கு முகாந்திரம் என்ன? என்ற உச்சநீதிமன்றத்தின் கேள்விக்கு பதில் ஏதும் இல்லைதான்.
அமலாக்கத்துறை என்பது பொருளாதார குற்றங்களைக் கண்டறிந்து அதில் ஈடுபட்டோருக்கு தண்டனை பெற்றுத் தரக் கூடிய உயரிய நிதி நிர்வாகம் சார்ந்த அமைப்பு. ஆனால் பாஜகவின் அரசியல் ஆயுதமாகவே மாறிப் போய்விட்டதால்தான் இப்படி ஒவ்வொரு வழக்கிலும் நீதிமன்றங்களில் குட்டுப்பட்டுக் கொண்டிருக்கிறது அமலாக்கத்துறை என்பது ஜனநாயக அமைப்பில் துயரம்தான்!
கட்டுரை உதவி: https://southnews.in/enforcement-as-strategy-how-the-ed-became-a-weapon-in-indias-political-playbook/