வெற்றியோ, சந்தோஷமோ, கொண்டாட்டமோ எல்லாவற்றுக்கும் ‘ஸ்வீட் எடு! கொண்டாடு!’ என்பது உலக வழக்கமாக இருக்கிறது. இனிப்பு உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது என்றாலும் அதை அளவுக்கு அதிகமாக எடுப்பது ஆரோக்கியத்தையும் பாதிக்கும். ஒரு நபர் ஒரு நாளைக்கு எவ்வளவு இனிப்பு எடுத்துக் கொள்ளலாம், உணவியல் ஆலோசகர்கள் சொல்வது என்ன?
ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு எத்தனை கலோரி தேவைப்படுகிறதோ அதன் அடிப்படையில்தான் எவ்வளவு இனிப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பது கணக்கிடப்படுகிறது. ஒரு மனிதன் செயல்படுவதற்குத் தேவையான ஆற்றலின் அளவை கலோரிகளில் கணக்கிடுவார்கள். வயது, பாலினம், உடல் இயக்கம், நோய்கள் ஏதேனும் உள்ளனவா என்பனவற்றின் அடிப்படையில் ஒருவருக்குத் தேவையான கலோரிகள் கணக்கிடப்படும்.
உலக சுகாதார நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) ஆகியவற்றின் பரிந்துரையின்படி, உடல் உழைப்பு குறைவாக இருக்கும் ஓர் ஆணுக்கு ஒரு நாளைக்கு 1,800 கலோரிகள், மிதமான இயக்கம் உள்ளவர்களுக்கு 2,100 கலோரிகள், அதிக உடல் உழைப்பு கொண்டவர்களுக்கு 2,400 கலோரிகள் தேவைப்படும்.
அதேபோல உடல் இயக்கம் குறைவாக இருக்கும் பெண்களுக்கு ஒரு நாளைக்கு 1,600 கலோரிகள், மிதமான உடல் இயக்கம் உள்ளவர்களுக்கு 1,800 கலோரிகள், அதிக உடலுழைப்பு கொண்டவர்களுக்கு 2,000 கலோரிகள் தேவைப்படும். அவரவர்க்குத் தேவைப்படும் சரியான கலோரி அளவை மருத்துவர் அல்லது உணவியல்ஆலோசகர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.
ஒரு நபருக்குத் தேவைப்படும் கலோரியின் அளவிலிருந்து 10 சதவிகிதம் இனிப்பு எடுத்துக் கொள்ளலாம். உதாரணத்துக்கு, ஒருவருக்கு ஒரு நாளைக்கு 1,600 கலோரி தேவைப்பட்டால் அதில் 160 கலோரியை இனிப்பாக எடுக்கலாம் என்று வரையறுக்கப்பட்டிருந்தது.
உடல் பருமன், சர்க்கரை நோய் உள்ளிட்ட வாழ்வியல் சார்ந்த பல்வேறு நோய்களின் தாக்கம் அதிகரித்து வருவதால் இந்த அளவை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உலக சுகாதார நிறுவனம் மறுவரையறை செய்துள்ளது. அதன்படி, கலோரியின் அளவில் 5-7 சதவிகிதம் அளவுக்கு இனிப்பு எடுத்துக் கொள்ளலாம். அதாவது 1,600 கலோரி தேவைப்படும் ஒரு நபர் 80-90 கலோரி இனிப்பு எடுத்துக்கொள்ளலாம். ஒரு டீஸ்பூன் சர்க்கரையில் 20 கலோரி இருக்கும். அப்படியென்றால் 4 -5 டீஸ்பூன் வரை சேர்த்துக்கொள்ளலாம்.
அன்றாட உணவாக நாம் எடுத்துக்கொள்ளும் தானியங்கள், பருப்புகள், காய்கறிகள், பழங்கள், பால், பொருள்கள் என அனைத்திலும் குறிப்பிட்ட அளவு இனிப்பு காணப்படும். பொதுவாகவே, கார்போஹைட்ரேட் சத்து காணப்படும் உணவுகள் அனைத்திலும் இனிப்பு காணப்படும். அவற்றை இயற்கையான இனிப்பு என்போம். அதுவே உடலின் ஆற்றலுக்குப் போதுமானது.
ஆரோக்கியமான ஒரு நபர் கூடுதலாக எந்த அளவு வரை இனிப்பு சேர்த்துக்கொண்டால் உடலுக்குப் பிரச்சினை ஏற்படாது என்பதற்குதான் மேற்குறிப்பிட்டுள்ள அளவு வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே, கூடுதல் இனிப்பை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை. கூடுதல் இனிப்பை உணவில் சேர்ப்பதைக் இயன்றவரை தவிர்க்க வேண்டும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு உணவிலிருந்து கிடைக்கும் இயற்கையான இனிப்பே உடல் இயக்கத்துக்குப் போதுமானது. கூடுதலாக இனிப்பு சேர்த்து காபி, டீ, ஜூஸ், ஸ்வீட்ஸ் என எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நான் பயாலஜிக்கலாக பிறந்திருக்க வாய்ப்பில்லை : மோடி பேட்டி!
கருடன் : சூரியின் மிரட்டல் நடிப்பு..! டிரைலர் எப்படி..?
விடாமுயற்சி : ஆலுமா டோலுமா வைப்.. அனிருத் சம்பவம்..!
சட்டப்பிரிவு 370 ரத்து : மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்!
