டிஜிட்டல் திண்ணை: திருமா மாநாட்டில் எவ்வளவு கூட்டம்? ஸ்டாலினுக்கு சென்ற ரிப்போர்ட்!

Published On:

| By Aara

வைஃபை ஆன் செய்ததும்  உளுந்தூர்பேட்டையில்  விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்திய மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு  காட்சிகள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.

அவற்றைப் பார்த்த வாட்ஸ் அப்  தனது மெசேஜ் டைப் செய்ய  தொடங்கியது.

“கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி  மது போதைப் பொருள் ஒழிப்பு மாநாட்டுக்கு அதிமுகவும் வரலாம் என்று  திருமாவளவன்  அறிவித்ததால்  திமுக கூட்டணிக்குள் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.  அதற்கு அவரே எவ்வளவோ விளக்கம் அளித்தும் அதிமுக கூட்டணிக்கு போகிறதா விசிக என்ற விவாதமே பெரிய அளவில் இருந்தது.  இதோடு விசிகவின்  துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா திமுக பற்றியும் உதயநிதி பற்றியும் கொடுத்த பேட்டி கூட்டணிக்குள் மேலும்  சலசலப்புகளை ஏற்படுத்தியது.

இவ்வளவையும் தாண்டி தமிழ்நாடு காவல்துறையின் மிகப்பெரிய ஒத்துழைப்போடு இந்த மாநாடு நடந்திருக்கிறது.  மாநாட்டில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பற்றி மின்னம்பலத்தில் தனியாக செய்திகள் வந்துள்ளன.

மது போதைப் பொருள் ஒழிப்பு  என்ற பொது நோக்கத்துக்காக இந்த மாநாடு கூட்டப்பட்டாலும்… விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில கட்சி என்று அங்கீகாரம் பெற்ற பிறகு கூட்டப்படும் முதல் மாநாடு என்பதால்  மற்ற அரசியல் சக்திகளுக்கும் குறிப்பாக திமுகவுக்கும் தங்களது பலத்தை காட்ட வேண்டும் என்பதை இந்த மாநாட்டின் மறைமுக அஜெண்டாவாகவே  திருமா நிர்ணயித்தார்.  அதன்படிதான்  திருமாவளவன் ஒவ்வொரு மாவட்டமாக சென்று மாநாட்டின் ஆயத்த கூட்டங்களை  நடத்தினார்.

இந்த வகையில் விசிகவின் பலத்தை நிரூபிக்கும் வகையில் இந்த மாநாட்டில் கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது. உளுந்தூர் பேட்டை பைபாஸுக்கு அருகிலே  மாநாடு நடப்பதால்  போக்குவரத்து நெரிசல் மிகக் கடுமையாக ஏற்பட்டது.   பார்க்கிங் செய்வதற்காக ஒதுக்கப்பட்டிருந்த இடங்கள்  வாகனங்களால் நிரம்பி வழிந்து வேறு இடம் கிடைக்காமல் நெடுஞ்சாலைகளில் வாகனங்களை பார்க்கிங் செய்தனர்.

இந்த வகையில்  கார்,  லாரி,   மினி லாரி,   பேருந்துகள்,  வேன்கள்  என மொத்தம் 6,000  வாகனங்கள் இந்த மாநாட்டுக்காக  வந்திருந்ததாக சென்னைக்கு  முதல் கட்ட ரிப்போர்ட் சென்றிருக்கிறது.

போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருந்ததால் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் அவரே களத்தில் இறங்கி போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினார்.  ஐ.ஜி.யே சாலையில் இன்று வேலை செய்ததால் மற்ற போலீஸ் அதிகாரிகளும் களத்தில் இறங்கி தீவிரமாக செயல்பட்டனர்.

இந்த வகையில்  அக்டோபர் 2 ஆம் தேதி நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது போதைப்பொருள் ஒழிப்பு மாநாட்டில்  40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை  கூட்டம் இருந்தது  என  முதலமைச்சர் ஸ்டாலினுக்கு முதல்கட்ட நோட் சென்று இருக்கிறது.

திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது இந்த மாநாட்டின் அறிவிப்பு. ஆனால் திமுக கூட்டணி மாநாடாகவே இப்போது நடந்து முடிந்திருக்கிறது.  அரசின், போலீசின் ஒத்துழைப்பும் இந்த மாநாட்டுக்கு பெருமளவில் இருந்ததைக் களத்தில் காண முடிந்தது” என்ற மெசேஜுக்கு செண்ட்  கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் போதைப் பொருள் அதிகரிப்பு… விசிக தீர்மானத்தில் தகவல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share