பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு 46,767 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. budget for school education department
பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித் துறைக்கான முக்கிய அம்சங்கள்…
பேராசிரியர் அன்பழகன் பெயரால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 2025-26 ஆம் ஆண்டில் அரசுப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகங்கள் மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கிடும் பொருட்டு 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
2025-26 ஆம் ஆண்டில் 2,000 பள்ளிகளுக்கு 160 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கணினி ஆய்வகங்கள் மேம்படுத்தப்படும்.
அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் பயின்று வரும் பள்ளிகளில் உள்ள 880 உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் 56 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும்.
அரசுப் பள்ளிகளில், 2025-26 ஆம் ஆண்டில் 2,676 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
2025-26 ஆம் ஆண்டில் 1,721 முதுகலை ஆசிரியர்களும் 841 பட்டதாரி ஆசிரியர்களும் நேரடி நியமனம் மூலம் பணியமர்த்தப்படுவார்கள். இதற்கான தேர்வு அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் வெளியிடும்.
கடந்த இரண்டு ஆண்டுகளில், 780 அரசுப் பள்ளி மாணவர்கள் இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களான இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT), தேசிய சட்டப் பல்கலைக்கழகம் (NLU) உள்ளிட்ட, நாட்டின் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் சிறப்பிடம் பெற்று சேர்க்கை பெற்றுள்ளனர். மேலும், 12 மாணவர்கள் முழுக் கல்வி உதவித்தொகையுடன் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் பயின்று வருகின்றனர்.
இதன் அடுத்தகட்டமாக, 20 வகையான கல்விப் பிரிவுகளில் 350-க்கும் மேற்பட்ட பல்வேறு அகில இந்திய உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் உள்ள கல்வி உதவித்தொகையுடன் கூடிய பட்டப் படிப்பு வாய்ப்புகள் குறித்தான விழிப்புணர்வு, நான் முதல்வன்-கல்லூரிக் கனவு திட்டம் மூலம் தமிழ்நாட்டின் அனைத்து மாணவர்களுக்கும் எடுக்கப்படும்.
முதற்கட்டமாக, 388 ஊராட்சி ஒன்றியங்களில் அமைந்துள்ள 500 அரசுப் பள்ளிகளில் உயர்கல்வி குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
நான் முதல்வன்-கல்லூரிக் கனவு திட்டத்தின் மூலம், குறைந்தது 2,000 அரசுப் பள்ளி மாணவர்கள் இனி ஒவ்வொரு ஆண்டும் அகில இந்திய அளவில் புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து சிகரம் தொடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கென 50 கோடி ரூபாய் இந்த வரவு-செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்படுகிறது.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் (Samagra Shiksha) கீழ், பல்வேறு மாணவர் நலன் சார்ந்த திட்டங்களை கடந்த 7 ஆண்டுகளாக மாநில அரசு சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, மாணவர்களின் அடிப்படைக் கல்வியறிவை உறுதிசெய்யும் எண்ணும் எழுத்தும் திட்டம்’, மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கான சிறப்புக் கல்வி, தொலைதூரக் குடியிருப்புகளிலிருந்து மாணவர்கள் பள்ளிகளுக்கு வந்து சென்றிட போக்குவரத்துப்படி, ஆசிரியர்களின் ஊதியம், மாணவர்களின் எதிர்காலத்தைச் செதுக்கிடும் உயர்கல்வி வழிகாட்டி, மாணவர்களின் தனித் திறன்கள் மிளிர்ந்திட கலைத் திருவிழா, கல்விச் சுற்றுலா, இணைய வசதி உள்ளிட்ட பள்ளிகளுக்கான கட்டமைப்பு வசதிகள் என பல்வேறு திட்டங்கள் மாணவரின் கல்வி நலன் சார்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
எனினும், இந்த ஆண்டு மும்மொழிக் கொள்கையை உள்ளடக்கிய ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையினை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாததால், ஏற்கெனவே ஒப்புதல் வழங்கிய நிலையிலும் 2,152 கோடி ரூபாயை ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு விடுவிக்காமல் வஞ்சித்துள்ளது. ஒன்றிய அரசு, தமிழ்நாட்டுக்கு உரிய நிதியை விடுவிக்காவிட்டாலும், மாணவர் நலன் கருதி அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி ஒரு துளியேனும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ஆசிரியர்களின் ஊதியம் உள்ளிட்ட அத்திட்டங்களுக்குரிய நிதியை மாநில அரசே தனது சொந்த நிதி ஆதாரங்களில் இருந்து விடுவித்துள்ளது.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் மற்றும் கல்வராயன் மலை, கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை உள்ளிட்ட இடங்களிலுள்ள தொலைதூர மலைப் பகுதிகளில் அமைந்துள்ள 14 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படும்.
தென் தமிழ்நாட்டின் அறிவாலயமாகத் திகழ்ந்திடும் மதுரை மாநகரில் உருவாக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு, இதுவரை 15 லட்சத்திற்கும் மேற்பட்ட வாசகர்கள் வருகை புரிந்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து, கோவை மற்றும் திருச்சியில் மாபெரும் நூலகங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அறிவைப் பரவலாக்கிடும் முயற்சிகளின் அடுத்த கட்டமாக, சேலம், கடலூர் மற்றும் திருநெல்வேலியில் பொதுமக்கள், போட்டித் தேர்வு எழுதிடும் மாணவர்கள் பயன்பெறும் விதமாக தலா ஒரு லட்சம் புத்தகங்கள் மற்றும் மாநாட்டுக் கூட வசதிகளுடன் நூலகங்கள் அமைக்கப்படும்.
இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் பள்ளிக்கல்வித் துறைக்கு 46,767 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. budget for school education department