அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வெற்றிக்கு மிச்சிகன் மாகாணத்தில் வசிக்கும் அரபு அமெரிக்க மக்களின் ஓட்டு வெகுவாக உதவியுள்ளது.
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் அமைந்துள்ள டெட்ராய்ட் நகரத்தில்தான் அதிகமாக அரபு அமெரிக்கர்கள் வசிக்கின்றனர். கடந்த 1920 ஆண்டுகளில் போர்டு கார் தொழிற்சாலையை ஹென்ரி போர்டு தொடங்கிய போது, லெபனான், ஈரான், ஈராக்,பாலஸ்தீனம், ஏமன் போன்ற நாடுகளில் இருந்து பலரையும் வேலைக்கு அமர்த்த தொடங்கியுள்ளார். நாள் ஒன்றுக்கு 5 டாலர் அவர்களுக்கு சம்பளமும் வழங்கப்பட்டுள்ளது.
நாளடைவில் இவர்கள் அரபு அமெரிக்கர்களாக அந்த நாட்டின் குடிமக்களாக மாறினர். இங்குள்ள டியர்பார்ன் என்ற நகரத்தில் அரபு அமெரிக்க மக்கள் ஏராளமாக வசிக்கின்றனர். தற்போது, இவர்கள் மிக்சிக்கன் மாகாணத்தில் தொழில் முனைவோராக, ஹோட்டல்கள் நடத்துபவராக உயர்ந்துள்ளனர். அதோடு, தங்களது வருங்கால சந்ததிகளுக்கு உதவும் வகையில் பல்வேறு அமைப்புகளையும் நடத்தி வருகின்றனர்.
தற்போது, இந்த மக்கள் நடந்து வரும் இஸ்ரேல்- ஈரான் மோதல், காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் போன்றவற்றில் அமெரிக்க அதிபரான ஜோ பைடன் எடுத்த நடவடிக்கையில் திருப்தி இல்லாமல் இருந்துள்ளனர். இதனால், அரபு அமெரிக்க மக்களின் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் டொனால்ட் டிரம்புக்கு கிடைத்துள்ளது. அதோடு, கருப்பினத்து மக்களும் டிரம்புக்கு ஓட்டளித்துள்ளனர். இதனால், மிக்சிக்கன் மாகாணத்தில் 49.8 சதவிகித வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.
கடந்த முறை ஜோ பைடன் இங்கு 70 சதவிகித வாக்குகளை பெற்ற நிலையில் , இந்த முறை கமலாவுக்கு 30 சதவிகித வாக்குகளே கிடைத்துள்ளது. இந்த மக்கள் டிரம்பை மாற்று சக்தியாக பார்க்கவில்லை என்றாலும் கமலா ஹாரிஸ் பைடன் மாதிரியேதான் ஆட்சி செய்வார் என்கிற அவ நம்பிக்கையை டிரம்ப் தொடர்ந்து பேசி வந்தது பலனளித்துள்ளது. இதனால், கமலாவை பின்னுக்குத் தள்ளி டிரம்பை அவர்கள் தேர்வு செய்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
’அமரனின் கமாண்டிங் ஆபிஸரே!’ : 70ஐ தொட்ட கமல்… குவியும் வாழ்த்துகள்!