கோடை தொடங்கிவிட்டது. இந்த நாட்களில் பல மணி நேரம் குளிப்பவர்களும் இருக்கிறார்கள். விடுமுறை நாட்களில் குளியலுக்கு விடுமுறை கொடுப்பவர்களும் இருக்கிறார்கள். இந்த நிலையில் ஒரு நாளைக்கு எத்தனை முறை குளிக்கலாம்?
நாம் வெப்பமண்டல நாட்டில் வசிப்பதால் வெப்பம் உடலில் எளிதாகச் சேரும். அதைக் குளிர்விப்பதற்கு குளியல் அவசியம். நாள் முழுவதும் வேலை செய்து களைத்த உடலை புத்துணர்வாக்குவதற்கும் செல்கள் தூண்டப்படுவதற்கும் ஒரு தெரபி போல குளியல் செயலாற்றும்.
இந்த நிலையில் அதிக வெப்பமான பகுதியில் வசிப்பவர்கள், உடற்பயிற்சி, விளையாட்டு போன்றவற்றில் ஈடுபடுபவர்கள், அதிக உடலுழைப்பைச் செலுத்தும் பணி செய்பவர்கள், அதிகமாக வியர்ப்பவர்கள் போன்றவர்கள் இரண்டு வேளை குளிக்கலாம். வொர்க் ஃப்ரம் ஹோம், உடலுழைப்பு அதிகம் செலவழிக்காத வேலை, கம்ப்யூட்டரில் அமர்ந்து பணியாற்றும் வகையான வேலை என்றால் ஒருவேளை குளிப்பதே போதுமானது.
ஒரு நாளைக்கு இரண்டு வேளை குளிப்பதாக இருந்தால் 5 நிமிடங்களுக்கு மேல் குளிக்க வேண்டாம். அதிக ரசாயனங்கள் சேர்த்த சோப், ஷாம்பூ பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. இரண்டாவது முறை குளியல் என்றால் சோப், ஷாம்பூ பயன்படுத்தாமல் வெறும் நீரை மட்டும் ஊற்றிக் குளிக்கலாம்.
இன்று பெரும்பாலானவர்கள் வீடுகளில் வாட்டர் ஹீட்டர் இருக்கிறது. அதில் குளித்தே பழகியவர்கள் கோடைக்காலத்திலும் வெந்நீரிலேயே குளிக்கிறார்கள். இது தவறான பழக்கம். அதிக சூடான நீரில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும். குளிர், மழை காலங்களில் மட்டும் அதிக குளிர்ந்த நீராகவும் இல்லாமல், அதிக சூடாகவும் இல்லாமல் வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம்.
வெந்நீரில் குளிப்பதை இயன்றவரை தவிர்ப்பதே நல்லது. தொடர்ந்து அதிக சூடான நீரில் குளிப்பதால் உடலிலிருக்கும் செல்கள் சேதமடைய வாய்ப்புள்ளது. தோலில் இயற்கையாக இருக்கும் ஈரப்பதம் குறைந்து, அதன் நெகிழ்வுத்தன்மையும் (Elasticity) பாதிக்கப்படும். இதனால் தோலில் சுருக்கம், வறட்சி ஏற்படும். தலைக்கு அதிக சூடான நீரை ஊற்றிக் குளிக்கும் மயிர்க்கால்கள் பலவீனமடைந்து முடி கொட்டுவது, வழுக்கை விழுவது போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
சிலருக்கு என்ன வேலை செய்துவிட்டு வந்தாலும் குளிக்க வேண்டும் என்ற உணர்வு இருக்கும். உதாரணத்துக்கு, காலையில் குளித்துவிட்டு கிளம்பி வெளியில் சென்றுவிட்டு சிறிது நேரத்தில் வீட்டுக்குத் திரும்புவார்கள். வீட்டுக்கு வந்த உடனே மீண்டும் குளிப்பார்கள். இப்படி நான்கைந்து முறை குளிக்கும் பழக்கமும் சிலரிடம் இருக்கிறது. இது முற்றிலும் தவறானது.
நமது உடலில் அதிக உணர்திறன் கொண்ட (Hypersensitive) செல்கள் நிறைய உள்ளன. அடிக்கடி குளிப்பதால் அந்த செல்கள் அடிக்கடி தூண்டப்பட்டு அவற்றின் செயல்பாடு குறையத் தொடங்கும். அதேபோல உடலின் வெளிப்புறத்தில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்களும் பாதிக்கப்படும். ஒவ்வொரு முறை குளிக்கும்போது சோப், ஷாம்பூ போடுவதால் அதிலிருக்கும் ரசாயனங்கள் உடலில் இயல்பாகச் சுரக்கும் ஈரப்பதத்தை பாதிக்கும்.
சிலருக்கு காலையில் குளிக்கும் பழக்கம் இருக்காது. இரவு நேரத்தில் குளித்துவிட்டுத் தூங்குவார்கள். அவரவர் வாழ்க்கை முறைக்கு எது ஒத்துவருகிறதோ அதைச் செய்யலாம். ஆனால், ஒரு நாளைக்கு ஒருமுறையாவது கட்டாயம் குளித்துவிட வேண்டும். நுரையீரல் தொற்று, நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள், அடிக்கடி சளி, ஆஸ்துமா, சைனஸ் தொந்தரவால் பாதிக்கப்படுபவர்கள் இரவு நேரத்தில் குளிப்பதைத் தவிர்த்துவிடுவது நல்லது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்
வறுமை ஒழிப்புக்கு ரூ.25,922 கோடி: பட்ஜெட்டில் புது திட்டம்!
“நாளை முதல் பட்ஜெட் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்”: முதல்வர் ஸ்டாலின்
ரஃபா நகருக்கு குறிவைத்த இஸ்ரேல்: கவலையில் உலக நாடுகள்!
ஹெல்த் டிப்ஸ்: அதிக சத்தத்துடன் அடிக்கடி ஏப்பம்… தவிர்ப்பது எப்படி?