பியூட்டி டிப்ஸ்: ஒருநாளைக்கு எத்தனை முறை முகம் கழுவுகிறீர்கள்?

Published On:

| By Selvam

ஒருநாளைக்கு எத்தனை முறை முகம் கழுவ வேண்டும்? சரும மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?

சாதாரண அல்லது எண்ணெய்ப் பசை உடைய சருமம் உடையவர்கள் காலை, மாலை என இரண்டு வேளை முகம் கழுவுவது நல்லது. அதிக எண்ணெய்ப் பசை கொண்ட சருமம் கொண்டவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை முகம் கழுவலாம். சிலருக்கு முகப்பரு அதிகமாக இருக்கிறது என்பதால் கூடுதலாக ஒரு வேளை முகம் கழுவ மருத்துவர் அறிவுறுத்துவார்.

ADVERTISEMENT

அதிக சென்சிட்டிவ் மற்றும் அதிக வறட்சியான சருமம் கொண்டவர்கள் ஒருநாளைக்கு ஒருமுறை முகத்தைக் கழுவினாலே போதுமானது. மாசு, மேக்கப் பொருள்கள், அழுக்கு என அனைத்தும் முகத்தில் படிந்து காணப்படும் என்பதால் மாலை அல்லது இரவு நேரத்தில் கழுவினால் நல்லது.

சிலருக்கு ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை அல்லது அடிக்கடி முகத்தைக் கழுவுவது பழக்கமாக இருக்கும். இப்படி அடிக்கடி முகம் கழுவிக்கொண்டே இருக்கும்போது முகத்தில் உள்ள எண்ணெய்ப் பசை நீங்கி சருமம் வறட்சியாகத் தொடங்கும். இதனால் முகத்தில் எரிச்சலுணர்வு (Irritation) ஏற்படலாம்.

ADVERTISEMENT

நம் வியர்வை சுரப்பிகள் அடைபட்டு வியர்வை வெளியேற முடியாமல் போவதால் முகத்தில் பருக்கள் தோன்றும். அடிக்கடி முகம் கழுவுவதால் சருமம் வறண்டு, பாக்டீரியாக்கள் எளிதாகப் படிவதற்கு வாய்ப்பாக அமையும். இதனால் முகத்தில் சிறிய சிறிய கட்டிகள், கொப்புளங்கள் போன்றவை தோன்றலாம்.

சோப், ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி முகத்தைக் கழுவுவது என்பது அதில் படிந்திருக்கும் அழுக்கை நீக்குவதற்குதான். இதனால் பருக்கள் வராமல் தடுக்கப்படும். மேலும், இறந்த செல்கள் தங்கியிருப்பதைத் தடுக்கும். புத்துணர்வாக உணர்வதற்கு வேண்டுமானால் வெறும் நீரால் முகத்தைக் கழுவலாம். அதிக சூடாகவும் அதிக குளிர்ச்சியாகவும் இல்லாமல், சாதாரண அறை வெப்ப நிலையில் இருக்கும் தண்ணீரில் முகம் கழுவுவது நல்லது.

ADVERTISEMENT

முகம் கழுவி முடித்ததும் நாம் பயன்படுத்தவும் துண்டு, டிஷ்யூ எதுவாக இருந்தாலும் மென்மையாக இருக்க வேண்டும். கரடுமுரடாக இருக்கும் துணியைப் பயன்படுத்தக்கூடாது. முகத்திலிருக்கும் ஈரத்தை துணியால் ஒற்றி எடுக்க வேண்டுமே தவிர, மேலும் கீழுமாக துணியை வைத்துத் தேய்க்கக் கூடாது.

கடினமான துண்டை வைத்து மீண்டும் மீண்டும் முகத்தைத் தேய்க்கும்போது அந்த இடம் எரிச்சலுணர்வுக்கு உள்ளாகி, சருமத்தில் கருந்திட்டுகள்கூட (Pigmentation) உருவாகலாம். அதேபோல முகத்தைத் துடைப்பதற்குப் பயன்படுத்தும் துண்டு, கைக்குட்டை போன்றவை சுத்தமாக, தூய்மையாக இருக்க வேண்டும். மீண்டும் மீண்டும் பயன்படுத்தியவற்றை, அழுக்கானதைப் பயன்படுத்துவதால்கூட நோய்த்தொற்று ஏற்படலாம்.

மேக்கப் போட்டுக்கொள்ளும் துறையில் இருப்பவர்களுக்கு வெறும் முகம் கழுவுவது மட்டும் போதாது. முதலில் ‘க்ளென்சர்’ (Makeup removing Cleanser) பயன்படுத்தி மேக்கப்பை முழுவதுமாக நீக்க வேண்டும். எவ்வளவு தாமதித்தாலும் இரவு மேக்கப்பை நீக்காமல் தூங்கவே கூடாது. முகத்துக்கு மட்டுமல்லாமல் கண், உதடுகளுக்கான மேக்கப்பையும் நீக்க வேண்டும். மேக்கப்பை முழுவதுமாக நீக்கிய பிறகு ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி முகம் கழுவலாம்.

மேக்கப் செய்யாதவர்கள், நாள் முழுவதும் வீட்டிலேயே இருப்பவர்கள் என யாராக இருந்தாலும் ஒருநாளைக்கு ஒருமுறையாவது முகம் கழுவ வேண்டும். வியர்வை, தூசு படிதல், இறந்த செல்கள் போன்றவற்றால் வியர்வை துவாரங்கள் அடைந்திருக்கும். முகம் கழுவவில்லை என்றால் இறந்த செல்கள் அப்படியே படிந்துவிடும். வியர்வை துவாரங்கள் அடைபடுவதால் முகப்பரு வரலாம். முகம் கழுவவில்லை என்றால் பார்ப்பதற்கு சோர்வாகவும் தெரிவார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சண்டே ஸ்பெஷல்: சமையலுக்கு ஏற்றது பெரிய வெங்காயமா? சின்ன வெங்காயமா?

மணிமேகலை யார்?: அப்டேட் குமாரு

கனமழைக்கு வாய்ப்பு : எந்தெந்த மாவட்டங்களில்?

இலங்கை அதிபர் தேர்தல் : நள்ளிரவு முதல் முடிவுகள்!

How many times should you wash your face in a day?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share