பியூட்டி டிப்ஸ்: நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை தடவை தலை வாருகிறீர்கள்?

Published On:

| By christopher

How many times brush your hairs every day

நம்மில் சிலருக்கு அடிக்கடி தலை வாரும் பழக்கம் இருக்கும். சிலருக்கு அவ்வப்போது தலை வாரும் பழக்கம் இருக்கும். நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை தடவை தலை வாருகிறீர்கள்?  தலை வாருவது தொடர்பாக பொதுவாக எழும் சந்தேகங்களுக்கான விடை இதோ…

ஆண்/பெண்… முடி உதிர்வு பிரச்சினை உள்ளவர்கள் என யாராக இருந்தாலும் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை தலை வார வேண்டும்.

நீண்ட முடி, குட்டையான முடி, சுருட்டை முடி என எந்த வகையான முடியாக இருந்தாலும் மூன்று முறை வரை தலை வாரலாம். குறைந்தபட்சம் காலை, மாலை என இரண்டு வேளையாவது முடியை வார வேண்டும்.

வீட்டில் இருந்தாலும் வெளியே சென்றாலும் தலை வாருவது அவசியம். நீள முடி உள்ளவர்கள் தலை வாரி பின்னுவது, கொண்டை போட்டுக்கொள்வது, குதிரைவால் என எந்த ஹேர் ஸ்டைல் வேண்டும் என்றாலும் செய்துகொள்ளலாம்.

தலைமுடியை வாரும்போது சீப்பு மண்டை ஓட்டுப்பகுதியில் உராய்வதால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். தலையில் இயற்கையான எண்ணெய் உற்பத்தியாகவும் அது அனைத்துப் பகுதியில் சீராகப் பரவவும் இது பங்களிக்கும்.

மேலும், தலைப்பகுதியில் உள்ள இறந்த செல்களை நீக்க (Exfoliation) உதவும். இதனால் புது செல்கள் உற்பத்தியாகி தலை முடி வளரும்.

விடுமுறை நாட்கள் என்றால் சிலர் போட்ட பின்னலை, கொண்டையை அவிழ்க்கவே மாட்டார்கள். இது மிகவும் தவறான பழக்கம்.

தலைமுடியை வாராமல் விடும்போது முடி சிக்காகும். மேலும், வியர்வை தேங்கி, பிசுபிசுப்பு உண்டாகும். இதனால் பொடுகுத்தொல்லை, பேன் போன்ற பிரச்சினைகள் வரலாம்.

பொதுவாக ஆண்களுக்கு அடிக்கடி தலை வாரும் பழக்கம் இருக்கும். இருசக்கர வாகனத்திலிருந்து இறங்கியதுமே கண்ணாடி பார்த்து தலை வாருவதைப் பார்த்திருப்போம்.

அடிக்கடி தலைமுடியை வாருவதால் முடி முரடாக (Rough) மாறலாம். ஆண்களைப் பொறுத்தவரை சீப்பை பயன்படுத்தி லேசாக தலை வாருவது நல்லது.

அதிக பலம் கொடுத்து அழுத்தி வாரும்போது முடி உதிர்வு ஏற்படும். சிக்காக இருக்கும் முடியை அதிக பலம் கொடுத்து வாரினால் முடிகொட்டத் தொடங்கும்.

தலை வாருவதற்கு பற்கள் பெரிதாக இருக்கும் மரச்சீப்புகளைப் பயன்படுத்துவது நல்லது. மரச்சீப்புகளில் இருக்கும் பற்களின் முனை கூராக இருக்காது என்பதால் தலை வாரும்போது மண்டை ஓட்டுப்பகுதியை அதிகம் உறுத்தாது.

பிளாஸ்டிக் சீப்புகளின் முனை சில நேரங்களில் கூராக இருக்கும் என்பதால் வேகமாக வாரும்போது எரிச்சலுணர்வு, தொடர்ந்து பயன்படுத்துவதால் சில நேரங்களில் புண்கள் ஏற்படலாம். இதனால் முடி கொட்டுவதற்கும் வாய்ப்புள்ளது.

பிளாஸ்டிக் சீப்பை பயன்படுத்தும்போது அவசர அவசரமாக வாராமல் சற்று மெதுவாக தலை வாருவது நல்லது.

தலைக்கு குளித்து முடித்ததும் முடி ஈரமாகவும் மிக பலவீனமாகவும் எளிதில் உதிர்ந்துபோகும் நிலையிலும் இருக்கும். அந்தச் சமயத்தில் தலையில் இருக்கும் சிக்கை சீப்பு கொண்டு வாரும்போது எளிதில் முடி உடைந்து, முடி உதிர்வு ஏற்படலாம்.

இதைத் தடுப்பதற்கு தலை குளிப்பதற்கு முன்பாக தலை வாரி சிக்கை எடுத்துவிட வேண்டும். இல்லையென்றால் தலை குளித்துவிட்டு கண்டிஷனர் தேய்த்தபிறகு, விரல்களைக் கொண்டே முடியில் இருக்கும் சிக்குகளை நீக்கிவிட வேண்டும்.

அதன் பிறகு பெரிய பற்கள் கொண்ட சீப்பை பயன்படுத்தி தலையை வாரிவிட்டு, தலையில் தண்ணீர் ஊற்றி கண்டிஷனரை கழுவ வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் முடி உதிர்வதைத் தடுக்க முடியும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : காளான் வறுவல்

“சொந்தக்காரங்க தொல்ல தாங்க முடியல” : அப்டேட் குமாரு

குபேரா : தனுஷ் எடுத்த ரிஸ்க்.. 10 மணி நேர படப்பிடிப்பு..!

தந்தை இறந்த சோகத்திலும் 514 மதிப்பெண் பெற்ற மாணவி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share