ஆபரேசன் சிந்தூரில் எத்தனை பாக். போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டன? – விமானப்படைத் தளபதி விளக்கம்!

Published On:

| By christopher

How many Pak fighter jets were shot down in Operation Sindoor?

”ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் 5 பாகிஸ்தான் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய விமானப்படைத் தளபதி இன்று (ஆகஸ்ட் 9) முதன்முறையாக விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் ஜம்முகாஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அத்துமீறி நுழைந்து நடத்திய பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் மே மாதம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் ஈடுபட்டது.

ADVERTISEMENT

இதில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்து 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் மற்றும் ராணுவ தளங்கள் தாக்கப்பட்டன. இதனையடுத்து இருநாடுகள் மத்தியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

இதற்கிடையே பஹல்காம் தாக்குதல் தொடர்பாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், நாட்டின் பாதுகாப்பு குறைபாடுகளை சுட்டிக்காட்டி குற்றஞ்சாட்டி வருகின்றன.

ADVERTISEMENT

இந்த நிலையில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியாவால் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் போர் விமானங்களின் எண்ணிக்கை குறித்து முதன்முறையாக இந்திய விமானப்படை (IAF) தளபதி ஏ.பி. சிங் விளக்கம் அளித்துள்ளார்.

பெங்களூரில் இன்று நடைபெற்ற விழாவில் அவர் பேசுகையில், “மே 10 அன்று இந்தியா ராணுவம், பாகிஸ்தானின் இராணுவ தளங்களை குறிவைத்தபோது ஜகோபாபாத் விமானப்படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த சில அமெரிக்க தயாரிப்பு F-16 ஜெட் விமானங்கள் சேதமடைந்தன. முரித் மற்றும் சக்லாலா என்ற இரண்டு கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்களும் சேதமடைந்தன.

ADVERTISEMENT

மேலும் ஐந்து பாகிஸ்தான் போர் விமானங்களும், வான்வழி கண்காணிப்புக்காக வடிவமைக்கப்பட்ட மற்றொரு விமானமும் அழிக்கப்பட்டன.

நாங்கள் சமீபத்தில் வாங்கிய S-400 வான் பாதுகாப்பு அமைப்பு, ஒரு கேம் சேஞ்சராக இருந்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவத்தால் அந்த அமைப்பை ஊடுருவ முடியாததால் அவர்களால் ஆயுதங்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது” எனத் தெரிவித்தார்.

மே 7 அன்று ஆயுதப் படைகளால் தாக்கப்பட்ட ஒன்பது பயங்கரவாத இலக்குகளின் ’முன் மற்றும் பின்‘ செயற்கைக்கோள் படங்களையும் சிங் பகிர்ந்து கொண்டார்.

தொடர்ந்து அவர், இதன்மூலம் பயங்கரவாத இலக்குகளை தவிர வேறு எந்த சேதமும் ஏற்படவில்லை என்பது தெரியும். பொதுமக்கள் உயிரிழப்புகள் குறித்த பாகிஸ்தானின் குற்றச்சாட்டை மறுக்கிறேன். பயங்கரவாத இலக்குகள் மீதான தாக்குதல்களில் சுமார் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்” என்றார்.

மேலும் அவர், “வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் அரசின் முழுமையான ஆதரவு. எங்களுக்கு மிகத் தெளிவான வழிமுறைகள் வழங்கப்பட்டன. எங்களுக்கு எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. சில கட்டுப்பாடுகளையும் எவ்வளவு அதிகரிக்க வேண்டும் என்பதை நாங்கள் முடிவு செய்தோம். திட்டமிடவும் செயல்படுத்தவும் எங்களுக்கு முழு சுதந்திரம் இருந்தது” எனத் தெரிவித்தார்.

முன்னதாக மக்களவையில் அரசியல் தலைமையின் கட்டுப்பாடுகள் காரணமாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்தியா சில ஜெட் விமானங்களை இழந்ததாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share