நீட் தேர்வில் எத்தனை பேர் ஆள்மாறாட்டம் செய்துள்ளனர்?: நீதிமன்றம்!

Published On:

| By Balaji

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் சென்னையைச் சேர்ந்த உதித் சூர்யா கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் எத்தனை பேர் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (செப்டம்பர் 25) கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் நிரப்பப்படாமல் இருக்கும் நிர்வாக ஒதுக்கீடு இடங்களைக் கலந்தாய்வு மூலம் நிரப்பிட உத்தரவிட வேண்டும் என்று கோவையைச் சேர்ந்த தீரன் என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

ADVERTISEMENT

அப்போது, அகில இந்திய மற்றும் மாநில அரசின் இட ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களின் விவரங்களை மதிப்பெண்ணுடன் தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அப்போது மருத்துவ சேர்க்கையில் முறைகேடுகள் அதிகரித்திருப்பதாக நீட் தேர்வில் உதித் சூர்யா ஆள்மாறாட்டம் செய்ததை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

தொடர்ந்து ஆள்மாறாட்டம் செய்யப்பட்டது குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர். ‘நீட் தேர்வில் எத்தனை பேர் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்? நீட் தேர்வின்போது காண்பிக்கப்படும் அடையாள அட்டையும், மாணவர்கள் கல்லூரிகளில் காண்பிக்கப்படும் அடையாள அட்டையும் சரிபார்க்கப்பட்டதா? உதித் சூர்யா வழக்கு விசாரணை எந்தநிலையில் உள்ளது? உதித் சூர்யா மோசடி செய்து கல்லூரியில் சேர்ந்தது தெரிந்தும், அவர்மீது தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று சொல்லப்படுவது உண்மைதானா? நீட் தேர்வின்போது மாணவர்களைச் சோதிப்பது உட்பட அனைத்து நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட்டதா? இரட்டை இருப்பிடச் சான்றிதழ் பெற்று மோசடி செய்தார்களா?’ என்பன உள்ளிட்ட கேள்விகளை நீதிபதிகள் எழுப்பியுள்ளனர். இதற்குத் தமிழக அரசு இன்று (செப்டம்பர் 26) பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share