ஒரு நாளைக்கு உணவுடன் எத்தனை முட்டைகள் எடுத்துக் கொள்ளலாம், முட்டை சாப்பிடுவதன் மூலம் என்னென்ன நன்மைகள் என்று விரிவாக பார்க்கலாம்.
அசைவ உணவுப் பிரியர்களில் முட்டையை விரும்பாதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. அசைவம் சாப்பிட முடியாத நாளில் முட்டை இல்லை என்றால் கூட சிலருக்கு உணவு இறங்காது. முட்டையை அவித்தோ, ஆம்லேட், கலக்கி என ஏதோ ஒரு வடிவில் பலருக்கும் அன்றாட உணவில் இடம்பிடித்துவிடுகிறது. முட்டை சுவையானது, உடலுக்கு ஆரோக்கியமானது என்பதுதான் இதற்கு முக்கியமான காரணம். ஆனால் பலருக்கும் ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிடலாம்?, எத்தனை முட்டை சாப்பிட்டால் பாதுகாப்பானது என்கிற குழப்பங்கள் இருந்துகொண்டேதான் உள்ளன.
எத்தனை முட்டை சாப்பிடுவது என்பது வயது, உடல்நிலையை பொறுத்தே மாறுபடுகிறது. முட்டையை மிதமான எண்ணிக்கையில் சாப்பிடுவது ஆயுளை அதிகரிக்கவும், அறிவாற்றலுக்கும் நன்மை பயக்க உதவும். அத்துடன், கொழுப்பைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும் என்று தரவுகள் கூறுகின்றன.
முட்டையில் என்னென்ன சத்துகள் உள்ளன?
ஒரு முட்டையில் உடலுக்கு தேவையான அமினோ அமிலங்களை உள்ளடக்கிய 6 -7 கிராம் புரதச் சத்து உள்ளது. ஏ, டி, இ மற்றும் பி12 வைட்டமின்களும் உள்ளன. முட்டையின் மஞ்சள் கருவில் கொழுப்பில் கரையக்கூடிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மூளை மற்றும் கண் ஆரோக்கிய கூறுகளும் அதிகம் உள்ளன. வெள்ளைக்கரு மெலிந்த புரதத்தை வழங்குகிறது.
முட்டை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள்?
கர்ப்பிணி பெண்கள் முட்டை சாப்பிடுவதன் மூலம் கருவில் உள்ள குழந்தையின் மூளை வளர்ச்சி அதிகரிக்கும். வயதானவர்கள் முட்டை எடுத்துக்கொள்வது நினைவாற்றல், அறிவாற்றலை அதிகரிக்கிறது. முட்டை சாப்பிடுவதன் மூலம் கண் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். முட்டை சாப்பிடுவது இதய பிரச்னைகளை தடுக்கும் என சில ஆய்வுகளும் கூறுகின்றன.
ஒரு நாளைக்கு எத்தனை முட்டைகள் சாப்பிடலாம்?
கொழுப்புச் சத்துகள் நார்மலாக இருந்து, இதய நோய், நீரிழிவு நோய் இல்லை என்றால், ஒரு நாளைக்கு உணவின்போது தாராளமாக 1-2 முழு முட்டைகளை சாப்பிடலாம். உங்களுக்கு இதய நோய், கெட்ட கொழுப்பு (LDL) இருந்தாலோ அல்லது உங்கள் உணவில் ஏற்கனவே கொழுப்புச் சத்து அதிகம் இருந்தாலோ ஒரு வாரத்திற்கு 4 – 7 முட்டைகள் வரை சாப்பிடலாம்.
நீங்கள் எத்தனை முட்டை சாப்பிடுகிறீர்கள் என்பதையெல்லாம் தாண்டி, அது எந்த வகையில் சாப்பிடுகிறீர்கள், எந்த வகையான உணவுகளோடு முட்டையை எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதுதான் மிகவும் முக்கியமானது.
முட்டை சாப்பிடுவதுடன் வாழ்க்கை முறை பயிற்சிகளான வாக்கிங், ரன்னிங், உடற்பயிற்சிகளை மேற்கொண்டால் எந்த பிரச்னையும் இல்லாமல் வாழலாம் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
