சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடங்களே உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தங்களது கட்சியினரை தேர்தல் பணிக்கு தயார்படுத்தி வருகின்றன.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் தான் அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நேற்று (டிசம்பர் 15) நடந்தது.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்தும் சுமார் 5,000 நிர்வாகிகளும் பொதுக்குழு உறுப்பினர்களும் சென்னைக்கு வந்திருந்தனர்.
அதேபோலத்தான் முன்னாள் அமைச்சரும், அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனும் முன்கூட்டியே சென்னை வந்துவிட்டார். ஆனால் பொதுக்குழுவுக்கு வரவில்லை.
இதுதொடர்பாக விசாரித்தபோது, அவருக்கு பொதுக்குழுவுக்கு முதல்நாள் டிசம்பர் 14ஆம் தேதி இரவு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என கட்சியின் தரப்பில் இருந்து தகவல் வெளியானது.
இதன் காரணமாக பொதுக்குழுவில் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் வாசிக்க வேண்டிய கட்சியின் வரவு செலவு அறிக்கையை முன்னாள் அமைச்சரான புதுக்கோட்டை சி.விஜயபாஸ்கர் நேற்று வாசித்தார்.
இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திண்டுக்கல் சீனிவாசன் தற்போது எப்படி இருக்கிறார் என்று அதிமுக வட்டாரங்களில் விசாரித்தோம்.
“அண்ணன் திண்டுக்கல் சீனிவாசன் எப்போது மேடையேறினாலும் பேசும் ஆர்வத்தில் ஏதாவது பேசிவிடுவார். அது சர்ச்சையாகி விடுகிறது.
அதிமுக பொருளாளரான அவர், கட்சியின் வரவு செலவு அறிக்கையை பொதுக்குழுவில் வாசிக்க வேண்டிய நிலையில், ஏதாவது பேசிவிடுவார் என்ற யோசனையில், அவரிடம் முன்கூட்டியே கவனமுடன் பேசுமாறு தலைமை அறிவுறுத்தியிருந்தது.
அதனை ஏற்றுக்கொண்ட அவரும் சென்னைக்கு வந்தார். ஆனால் திடீரென அவருக்கு உடலில் வேர்வையும், லேசான பதட்டமும் ஏற்பட்டது. தொடர்ந்து நெஞ்சு வலியையும் ஏற்பட்டது போல் உணர்ந்ததால் அவரை சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு கட்சியினர் அழைத்து சென்றனர்.
அங்கு அவருக்கு உடனடியாக இரத்த பரிசோதனை, இசிஜி, எக்கோ உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
அதில் அவருக்கு நெஞ்சு வலி ஏதும் இல்லை என மருத்துவர்கள் உறுதி செய்தனர். எனினும் அவருக்கு அதிகமான காய்ச்சல் இருந்தபடியால், மருத்துமனையில் அட்மிட் ஆகி சிகிச்சை பெறும்படி வலியுறுத்தினர். அதனை அவரும் ஏற்ற நிலையில் தற்போது அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது” என்கின்றனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அர்த்த மண்டபத்தில் நுழைந்த இளையராஜா… தடுத்த ஜீயர்கள் : நடந்தது என்ன?
ஜாஹீர் ஹுசைன் காலமானார்… உறுதி செய்த குடும்பத்தினர்!
”ஆதவ் அர்ஜுனா விலக வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல” : திருமா