சிறையில் கைதிகளுக்கு செல்போன் கிடைப்பது எப்படி? : உயர்நீதிமன்றம் கேள்வி!

Published On:

| By christopher

சிறையில் கைதிகளுக்கு செல்போன் கிடைப்பது எப்படி என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. How do prisoners get cell phones

தமிழ்நாட்டில் சென்னை புழல், வேலூர், கடலூர், திருச்சி, மதுரை, பாளையங்கோட்டை உள்பட 9 இடங்களில் மத்திய சிறைகள் உள்ளன. மேலும் 5 பெண்கள் தனிச் சிறை, சிறுவர் சீர்திருத்த பள்ளிகள், மாவட்ட சிறை, கிளைச் சிறைகளும் உள்ளன. இந்த சிறைகளில்  தண்டனை கைதிகள், விசாரணைக் கைதிகள், நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டவர்கள் என சுமார் 20,000 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.

அதே சமயம் சிறையில் சட்ட விரோத செயல்கள் நடப்பதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக கைதிகள் சிறைக்குள் செல்போன் மூலம் வெளியுலக தொடர்பில் இருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. அவ்வப்போது சிறைத் துறை அதிகாரிகள், திடீர் சோதனை நடத்தி செல்போன்களை பறிமுதல் செய்யும் தகவல்களும் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோர் சிறைத்துறை அதிகாரிகளால் தாக்கப்பட்டதாகவும், அவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், செந்தில் குமார் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. கைதிகள் தாக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். How do prisoners get cell phones

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கடுமையான கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் சிறையில் கைதிகளுக்கு செல்போன் கிடைப்பது எப்படி? அதனை எப்படி பதுக்கி வைக்கின்றனர்? சிறையில் ஜாமர் கருவி இல்லையா? என கேள்விகளை எழுப்பினர். மேலும், சிறைக் காவலர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் சிறைக்குள் செல்போனை எப்படி கொண்டு செல்ல முடியும் என்று கேட்டனர்.

இதற்கு அரசுத் தரப்பில், “கழிவுநீர் குழாய் உள்ளிட்ட இடங்களில் செல்போனை மறைத்து வைத்து பயன்படுத்தி வருகின்றனர். கைதிகளுக்கு எப்படி செல்போன் கிடைக்கிறது என்பது குறித்து வேலூர் சிறைத் துறை டிஐஜி தலைமையில் விசாரணை நடந்து வருகிறது” என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

சிறைக்குள் செல்போன் பயன்படுத்துவது அபாயகரமான சூழல் என்று தெரிவித்த நீதிபதிகள், விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும், வழக்கு விசாரணையை வரும் மார்ச் 10ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். How do prisoners get cell phones

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share