கவரப்பேட்டையில் ரயில் விபத்து ஏற்பட்டது குறித்து ரயில்வே தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டையில் நேற்று இரவு சுமார் 8.30 மணி அளவில் பயங்கர ரயில் விபத்து ஏற்பட்டது.
மைசூரு- தர்பங்கா பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை மைசூரில் இருந்து புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி அரக்கோணம், பெரம்பூர், குண்டூர், பாட்னா வழியாக பீகார் மாநிலம் தர்பங்காவை சென்றடைய இருந்தது.
இந்த ரயில் நேற்று இரவு கவரப்பேட்டை பகுதியில் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 13 பெட்டிகள் வரை தடம் புரண்டன. ஓரிரு பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன.
இந்தக் கோர விபத்தில் நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை. இருந்தாலும் 19 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ரயில் விபத்து எப்படி நடந்தது?
இந்த ரயில் விபத்து தொடர்பாக ரயில்வே தரப்பில், ” மைசூர் தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு 8.27 மணிக்கு பொன்னேரி ரயில் நிலையத்தை கடந்தது.
கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் பிரதான தண்டவாளத்தில் செல்வதற்காக அந்த ரயிலுக்கு கிரீன் சிக்னல் கொடுக்கப்பட்டது.
ஆனால், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அந்த பயணிகள் ரயில் மெயின் லைனில் செல்லாமல் லூப் லைனில் நுழைந்துவிட்டது. சுமார் 75 கிலோமீட்டர் வேகத்தில் சென்ற தர்பங்கா எக்ஸ்பிரஸ் லூப் லைனில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பின்புறமாக மோதி விபத்து ஏற்பட்டது” என்று கூறியுள்ளது.
தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.சிங் உத்தரவின் பேரில் இந்த விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, ரயில் விபத்துக்கு காரணம் மனித தவறா? அல்லது தொழில்நுட்ப கோளாறா என்பது குறித்து விசாரிக்கவுள்ளது.
ரயில் விபத்தில் காயம் அடைந்தவர்கள், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களை நேற்று இரவு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ரயில் விபத்துகள் தொடர் கதையாவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்று வலியுறுத்தினார்.
அதுபோன்று ரயில் விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள், பயணம் செய்ய முடியாதவர்கள் அருகில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் ஆகியவற்றை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுளளார்.
இதற்கிடையே அமைச்சர் நாசரும் விபத்து நடந்த பகுதிக்கு சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டார். தற்போது தண்டவாளத்தில் சிதறி கிடக்கும் ரயில் பெட்டிகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.
இந்தசூழலில் விபத்துக்குள்ளான பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த பயணிகள் எம்ஜிஆர் சென்டரல் ரயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரயில் மூலம் அதிகாலை 4.45 மணிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
டாப் 10 செய்திகள் : விஜயதசமி மாணவர் சேர்க்கை முதல் கவரைப்பேட்டை ரயில் விபத்து வரை!