நாமக்கல்லில் ஹரியானா ஏடிஎம் கொள்ளையர்கள் சிக்கியது எப்படி என்பது குறித்து சேலம் சரக டிஐஜி உமா தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
கேரளாவில் ஏடிஎம்களை கொள்ளையடித்து விட்டு கண்டெய்னர் லாரியில் நாமக்கல் வழியாக தப்பிக்க முயற்சித்த கொள்ளையர்களை தமிழக போலீசார் இன்று (செப்டம்பர் 27) துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்தனர்.
இதில், போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். காலில் குண்டு பாய்ந்த நிலையில் பிடிபட்ட ஒருவர் உட்பட 6 பேரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபகாலமாக தமிழகத்தில் பிரபல ரவுடிகள் போலீசாரின் என்கவுன்ட்டரில் உயிரிழந்து வரும் நிலையில் சினிமா காட்சியை மிஞ்சும் வகையில் ஹரியானா கொள்ளையர்களை துரத்திச் சென்று தமிழக போலீசார் சுட்டுப் பிடித்த சம்பவம் நாமக்கல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஹரியானா கொள்ளையர்கள் பிடிபட்டது எப்படி என்பது குறித்து சேலம் சரக டிஐஜி உமா செய்தியாளர்கள் மத்தியில் இன்று மாலை விளக்கம் அளித்துள்ளார்.
அவர், “இன்று காலை 6 மணிக்கு நாமக்கல் எஸ்.பிக்கு, திருச்சூர் எஸ்பி போனில் தொடர்பு கொண்டு, திருச்சூரில் இன்று 3 ஏடிஎம் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டு வெள்ளை நிற கிரேட்டா காரில் கொள்ளையர்கள் தப்பி வருவதாக தகவல் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, மேற்கு மண்டலம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டது. காலை 8 மணியளவில் நாமக்கல் குமாரப்பாளையம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்த போது, ராஜஸ்தான் பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரி ஒன்று வாகன தணிக்கையில் நிற்காமல் சென்றது.
உடனடியாக அதனை போலீசார் சேசிங் செய்து பிடிக்க முயன்ற போது, அந்த லாரி வேகமாக சென்று முன்னால் சென்ற பைக் கார்களை இடித்து தள்ளியபடி முன்னேறியது. அதனை சன்னியாசிபட்டி அருகே மடக்கி பிடித்த போலீசார், ஓட்டுநர் ஜூமான் மற்றும் அவருடன் லாரியில் முன்பக்கத்தில் அமர்ந்திருந்த 4 பேரையும் பிடித்து விசாரித்தனர்.
தொடர்ந்து அருகில் உள்ள வெப்படை காவல் நிலையத்தில் லாரியை ஒப்படைக்கலாம் என போலீசார் பாதுகாப்புடன் கொண்டு வந்தோம். அப்படி வரும் வழியில் கண்டெய்னரில் இருந்து பலத்த சத்தம் வந்தது.
அப்போது போலீசார் லாரியை நிறுத்தி, கண்டெய்னர் கதவை திறக்கும்படி ஓட்டுநர் ஜுமானுக்கு உத்தரவிட்டனர்.
தொடர்ந்து ஜுமான் கதவை திறக்கவும், அதில் இருந்து இரண்டு பேர் தோள்பையுடன் குதித்து, போலீசாரையும் தாக்கிவிட்டு தப்பி ஓடினர். அவர்களுடன் ஜூமானும் தப்பியோடியுள்ளார்.
மூவரையும் துரத்தி சென்ற போலீசார் மீது கற்களை வீசி தாக்கியதால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் ஜுமான் போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்டார். மற்றொருவரான அஸ்ரூ என்பவரை காலில் சுட்டுப் பிடித்தனர்.
இந்த சம்பவத்தில் பிடிபட்ட கொள்ளையர்கள் 7 பேரும் ஹரியானாவை சேர்ந்தவர்கள். இவர்கள் ஏடிஎம்களை குறிவைத்து கொள்ளையடிக்கும் கும்பல் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்-களை குறிவைத்து, கூகுள் மேப் உதவியோடு கொள்ளையடித்துள்ளனர். கண்டெய்னரில் இருந்த காரை பயன்படுத்தி ஏடிஎம்களில் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.” என்று டிஐஜி உமா தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
செந்தில்பாலாஜிக்கு சோக முகத்துடன் ஆறுதல்: ஜோதிமணி எமோஷனல்!
உத்தரபிரதேசத்துல வாழ்றது கஷ்டம்னு கேள்விபட்டுருக்கோம், ஆனா, இந்த அளவுக்கா?