பாதிக்கப்பட்டவர்கள் என்ன கூறுகிறார்களோ…அதை அப்படியே பதிவு செய்வதுதான் எஃப்ஐஆர் என்று சென்னை கமிஷனர் அருண் விளக்கமளித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் குறித்து, சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் இன்று (டிசம்பர் 26) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், “எப்ஐஆர்-ஐ இப்படி போட்டிருக்கலாம் அப்படி போட்டிருக்கலாம் என்று சிலர் சொல்கிறார்கள்.
ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே பதிவு செய்வது தான் எஃப் ஐ ஆர்.
இந்த எஃப்ஐஆர்-ஐ பதிவு செய்து கோட்டூர்புரம் ஏசி தலைமையில் நான்கு தனி படைகள் அமைத்தோம். ஒவ்வொரு டீமுக்கும் ஒரு டாஸ்க் கொடுத்து விசாரித்தோம்.
சந்தேகத்தின் அடிப்படையில் சிலரை அழைத்து வந்து விசாரித்தோம்.
இதையடுத்து அறிவியல் பூர்வமாக ஆதாரங்களை சேகரித்து, டவர் லொகேஷனை வைத்து 25 ஆம் தேதி காலையில் குற்றம் செய்தவரை பிடித்தோம்.
அவர்தான் குற்றம் செய்தார் என்பதை உறுதி செய்வதற்காக அவரிடம் பல விசாரணைகளை செய்தோம். அவர்தான் குற்றவாளி என்று உறுதி செய்த பின்னர் கைது செய்து ரிமாண்ட் செய்தோம்.
இந்த வழக்கை பொறுத்தவரை இதுதான் நடந்தது” என்றார்.
மேலும் அவர், “போக்சோ மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் எப்.ஐ.ஆர் போடும் போது சிசிடிஎன்எஸ் என்ற இணையதளத்தில் தானாகவே லாக் ஆகிவிடும். ஆனால், ஐபிசி-யில் இருந்து புதிய சட்டங்களான பிஎன்எஸ்-க்கு மாற்றப்பட்டதால் சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக லாக் ஆவதில் சற்று தாமதம் ஆகியுள்ளது. இந்த நேரத்தில் சிலர் அதனை பதிவிறக்கம் செய்திருக்கலாம்.
மேலும், பாதிக்கப்பட்ட தரப்புக்கும் எப்.ஐ.ஆர் நகல் கொடுக்கப்பட்டது. இந்த 2 இடங்களிலும் ஏதாவது ஒரு இடத்தில் லீக் ஆகியிருக்கலாம். பாதிக்கப்பட்ட நபரின் அடையாளம் எந்தவகையிலும் வெளியாகக் கூடாது. எனவே இந்த எப்.ஐ.ஆர் வெளியானது தொடர்பாக வழக்குப்போட்டிருக்கிறோம்.
யார் வெளியிட்டார்கள் என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுப்போம்” என கூறினார்.
கைதான ஞானசேகரன் குறித்து பேசிய அவர், “இதுவரை நடந்த புலன் விசாரணையில் இவர் ஒருவர் தான் குற்றவாளி. புலன் விசாரணை குறித்து வெளியில் சொல்லக் கூடாது. இருந்தாலும் நிறைய பேர் அரசியல் செய்கிறார்கள் அதனால் சொல்கிறேன்.
இவர் (ஞானசேகரன்) பேசும்போது, ‘சார்’ என்று குறிப்பிட்டதாக சொல்கிறார்கள். ஆனால் குற்றம் செய்த போது அவர் போனை ஏரோபிளேன் மோடுதான் போட்டு வைத்திருக்கிறார். அதனால் அது தவறான தகவல்.
இதுவரை ஞானசேகரன் மேல் 2013 முதல் இதுவரை 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 6 வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மற்ற வழக்குகள் விசாரணையில் உள்ளது. எல்லாம் திருட்டு உள்ளிட்ட வழக்குகள்தான் உள்ளன. வேறு ஏதேனும் பெண்களிடம் தவறாக நடந்துகொண்டதாக வழக்குகள் இல்லை. ஒருவேளை இவனால் பெண்கள் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களிடம் பேசி வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுப்போம்” என்று கூறினார்.
அரசியல் தலைவர்கள் சொல்கிறார்கள் என்று கேட்காதீர்கள். இது அரசியல் பேட்டி கிடையாது. காவல்துறை ரீதியாக கேளுங்கள் என்று குறிப்பிட்ட ஆணையர் அருண், “அண்ணா பல்கலை. வளாகத்தில் 70 சிசிடிவி கேமராக்கள் உள்ளன. அதில் 56 வேலை செய்கிறது. அதன் அடிப்படையில் தான் குற்றவாளியை பிடித்தோம். பல்கலையில் 3 ஷிப்டுகளாக காவலாளிகள் பணியில் உள்ளனர். வளாகத்திற்கு 11 நுழைவு வாயில்கள் உள்ளன. இன்னும் அங்கு பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்து ஆய்வு நடக்கிறது” என்றார்.
காவல்துறை நடுநிலையோடு செயல்பட வேண்டும். எந்த கட்சி என்று பார்க்கக்கூடாது என்று முதல்வர் ஸ்டாலின் ஆய்வு கூட்டங்களில் சொல்லியிருக்கிறார். அதன்படிதான் செயல்படுகிறோம் என்றார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
‘அவன் செய்த கொடுமை’… மாணவி சொன்ன அதிர்ச்சி தகவல்: ஞானசேகரனின் அரசியல் பின்னணி!