நித்யானந்தாவின் சீடர்கள் அமேசானின் காட்டுத் தீயை அணைக்க உதவுவதாக கூறி, பழங்குடி மக்களிடம் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு நிலத்தை அபகரித்திருப்பது தெரியவந்துள்ளது. How did Nithyanandha seize tribal land
குழந்தை கடத்தல், பாலியல் வன்கொடுமை, கொலை முயற்சி என பல்வேறு வழக்குகளில் சிக்கி இந்தியாவை விட்டு வெளியேறி தலைமறைவாக இருந்து வருபவர் போலி சாமியார் நித்யானந்தா. இண்டர்போல் அவரை தேடி வந்தாலும் அவர் எங்கிருக்கிறார் என்று இதுவரை தெரியவரவில்லை. அவர் நீதித்துறைக்கே சவால் விடுத்துக்கொண்டிருக்கிறார் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கண்டனம் தெரிவித்திருந்தது.
இப்படிபட்ட நிலையில், நித்யானந்தா தொடர்ந்து ஆன்மீக சொற்பொழிவு ஆற்றி வீடியோ வெளியிடுவதை மட்டும் வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்தில் அவர் இறந்துவிட்டதாக தகவல் வெளியான நிலையில், யூடியூப் லைவில் வந்து ஒரு கமெண்ட்டை படித்து காட்டி நான் இறக்கவில்லை என்று பதிலளித்திருந்தார்.
இதற்கிடையே நித்யானந்தாவின் கற்பனை நாடான கைலாசா தென் அமெரிக்காவில் உள்ள பொலிவியா நாட்டில் அமேசான் காடு பகுதிகளை முறைகேடு செய்து ஒப்பந்தம் போட்டது தெரியவந்தது.
பாயர், கயூபா, எசி இஹா ஆகிய பழங்குடி இன மக்கள் வசிக்கும் அமேசான் காடு நிலத்தை 1000 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு ஒப்பந்தம் போட்டார் நித்தி.
இந்த முறைகேட்டை முதலில் பொலிவியாவில் உள்ள El Deber என்ற பத்திரிகையைச் சேர்ந்த சில்வானா வின்சென்டி என்ற பத்திரிகையாளர் அம்பலப்படுத்தினார்.
தொடர்ந்து பொலிவியா காட்டில் இருந்த 20க்கும் மேற்பட்ட நித்தி சீடர்களை பொலிவியா அரசு இந்தியா, அமெரிக்கா, ஸ்வீடன் மற்றும் சீனா உள்ளிட்ட அவர்களின் சொந்த நாடுகளுக்கு நாடு கடத்தியது.
பொலிவியா அரசாங்கத்திற்கும் ‘கைலாசா தேசம்’ என்று அழைக்கப்படும் இந்த கற்பனையான நாட்டுக்கும் இடையே எந்த உறவும் இல்லை என்று அறிவித்தது.
இந்தநிலையில் நித்யானந்தா எப்படி பழங்குடி மக்களின் நிலத்தை அபகரித்தார் என்று தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், “நித்யானந்தாவும் அவரது சீடர்களும் உலகின் முதல் இந்துக்களுக்கான “இறையாண்மை கொண்ட தேசத்தின்” தூதர்கள் என்று அழைத்துக் கொள்கிறார்கள். இல்லாத ஒரு நாட்டின் பிரதிநிதிகள் என கூறிக்கொள்ளும் இவர்கள் ஐ.நா கூட்டங்களிலும் அறிக்கைகளை வழங்கியிருக்கின்றனர்.
இந்தநிலையில் பொலிவியாவுக்கு சுற்றுலா விசாவில் வந்த நித்தி சீடர்கள், அந்நாட்டு அதிபர் லூயிஸ் ஆர்ஸுடன் ஒரு புகைப்படத்தை எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து பழங்குடி தலைவர்களைச் சந்தித்துள்ளனர்.
இதுகுறித்து பழங்குடி குழுக்களில் ஒன்றான ’பௌரி’ தலைவர் பெட்ரோ குவாசிகோ கூறுகையில், “கடந்த ஆண்டு இறுதியில் காட்டுத் தீயை அணைக்க உதவுவதாக கூறி வந்தபோதுதான் எங்களுக்கும் அவர்களுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டது” என்று கூறுகிறார்.
இவர்களுடனான பேச்சுவார்த்தையின் இறுதியில் இந்திய தலைநகர் டெல்லியை விட மூன்று மடங்கு பெரிய நிலத்தை ஒப்பந்தம் போட முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 2,00,000 டாலர் என்ற அடிப்படையில் முதலில் 25 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போட ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கைலாசா பிரதிநிதிகள் ஆங்கிலத்தில் ஒரு வரைவை கொண்டு வந்திருக்கின்றனர். அதில், 1000 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் என்றும் வான்வெளி பயன்பாடு, இயற்கை வளங்களை பிரித்தெடுப்பது ஆகியவற்றை உள்ளடக்கியது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக பெட்ரோ குவாசிகோ கூறுகையில், எங்கள் பிரதேசத்தைப் பாதுகாப்பதற்காக வருடாந்திர போனஸாக அந்தப் பணத்தை அவர்கள் எங்களுக்கு வழங்கினர், ஆனால் அது முற்றிலும் தவறானது. அவர்கள் பேச்சை கேட்டு நாங்கள் தவறு செய்துவிட்டோம். ” என்று தெரிவித்துள்ளார்.
நித்தியின் இந்த ஒப்பந்தம் செல்லாது என்று பொலிவியா அரசு அறிவித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. How did Nithyanandha seize tribal land