கேரளாவில் இருந்து தன் குடும்பத்தை ஏழ்மையில் இருந்து மீட்கும் கனவுகளுடன் 2008 ஆம் ஆண்டு ஏமன் நாட்டிற்கு சென்றவர் நர்ஸ் நிமிஷா பிரியா. இப்போதோ, ஏமன் நாட்டுக்காரரை கொன்ற வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் அவர். அவரை மீட்க வழி உள்ளதா?
பொதுவாக வளைகுடா நாடுகளில் இஸ்லாமிய சட்டம்தான் பின்பற்றப்படும். ஏமன் நாட்டிலும் ஷரியத் சட்டம் நடைமுறையில் உள்ளது. இதனால், கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினர் கொலையாளிக்கு மன்னிப்பு அளிக்க வேண்டும். பின்னர் அவர்கள் கேட்கும் இழப்பீடு தொகையும் கொலை செய்தவர் தரப்பில் இருந்து கொடுக்கப்பட வேண்டும். இப்படி கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினர் மனம் இறங்கினால் மட்டுமே நிமிஷா பிரியாவின் உயிரை காப்பாற்ற முடியும். தற்போது, அவர் சனா என்ற நகரிலுள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரை மீட்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில், நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை நிறைவேற்ற ஏமன் நாட்டு ஹூதி பிரிவு அதிபர் மெஹ்தி அல் மஷாத் ஒப்புதல் அளித்துள்ளார். ஏமன் நாடு தற்போது 3 கிளர்ச்சியாளர் குழுக்களால் ஆளப்பட்டு வருகிறது. அதில்,ஹூதி பிரிவு கிளர்ச்சியாளர்கள் பிடியில் சனா உள்ளிட்ட ஏமனின் ஒரு பகுதி உள்ளது.
ஏமன் நாட்டுக்காரரை நிமிஷா கொன்றது ஏன்?
ஏமன் நாட்டில் நிமிஷா வேலை பார்த்த போது, கேரளா திரும்பி டோமி தாமஸ் என்பரை திருமணம் செய்தார். பின்னர், கணவருடன் ஏமன் சென்றார். அங்கு வாழ்க்கை நடத்த சிரமப்படவே, டோனி தாமஸ் தாய் நாடு திரும்பினார். இதற்கிடையே, ஏமன் நாட்டில் சொந்தமாக மருத்துவமனை தொடங்க நிமிஷா விரும்பினார். அங்கே, வெளிநாட்டினர் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டுமென்றால், உள்நாட்டு பங்குதாரர் வேண்டும். இதனால், 2015ஆம் ஆண்டில், ஏமன் நாட்டைச் சேர்ந்த தலோல் அப்டோ மஹ்தி என்பவருடன் இணைந்து ஒரு மருத்துவமனையை நிமிஷா தொடங்கினார்.
இதற்காக, கேரளாவில் சொந்த ஊரான பாலக்காடு பகுதியில் 50 லட்சம் வரை அவர் கடன் வாங்கியதாக தெரிகிறது. மருத்துவமனை நல்ல நிலையில் சென்று கொண்டிருந்த போது, மஹ்திக்கும் நிமிஷாவுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. மஹ்தி நிமிஷாவை துப்பாக்கியை காட்டி துன்புறுத்தியதாகவும் தெரிகிறது. இந்தியா வர முயன்றாலும் முடியவில்லை. காரணம் நிமிஷாவின் பாஸ்போர்ட்டை மஹ்தி பறித்து வைத்திருந்தார். இதனால், மஹ்திக்கு மயக்க மருந்து போட்டு அவர் மயக்கத்தில் இருக்கும் போது தனது பாஸ்போர்ட்டை கண்டுபிடித்து விடலாம் என்று நிமிஷா முடிவு செய்துள்ளார் . அப்போது, மருந்தின் அளவு அதிகமாகி மஹ்தி மரணமடைந்தார். பின்னர், அவரின் உடலை துண்டு துண்டாக்கி செப்டிங் டேங்கில் நிமிஷா போட்டுள்ளார். இந்த சம்பவம் 2017 ஆம் ஆண்டு நடந்தது.
நிமிஷாவை மீட்க கேரள அரசும், மாநில அரசும் முயன்று வந்தாலும் வெற்றி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், நிமிஷாவால் கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினர் மன்னிப்பு அளிக்க மறுப்பதாக தெரிகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
’பொங்கல் பரிசாக ரூ.30,000 கொடுக்க வேண்டும்’ : செல்லூர் ராஜூ தடாலடி!
‘சீனா-தைவான் மீண்டும் சேர்வதை யாராலும் தடுக்க முடியாது’ – புத்தாண்டு உரையில் ஜின்பிங் அறைகூவல்!
’உடன்பிறப்புகளோடு புத்தாண்டு தொடக்கம்’ : ஸ்டாலின் மகிழ்ச்சி!