சிவா
கிட்டத்தட்ட 75 ஆண்டுகளுக்கு முன்பு, டிசம்பர் 18ஆம் தேதி ஒரு திட்டத்தின் கடைசி வடிவத்தைப் பற்றி ஜெர்மனியின் சர்வாதிகாரியான அடால்ஃப் ஹிட்லரும், அவரது ஜெர்மனியப் பாதுகாப்புப் படையின் தலைமை அதிகாரி ஹெய்ன்ரிச் ஹிம்லரும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அது, யூதர்களைப் பற்றிய கேள்விக்கான பதிலைத் தேடும் சந்திப்பாக இருவருக்குமிடையே இருந்தது. ‘Juden frage’ என்றழைக்கப்பட்ட ‘Jewish question’க்கான சந்திப்பு. திட்டமிட்டபடி ஐரோப்பாவில் இருந்த பெரும்பாலான யூதர்களை வதை முகாம்களில் அடைத்து வைத்து, காவல் செய்துவரும் ஜெர்மனியப் படைகளுக்கும், இத்தனை நாட்கள் சிறந்த ஜெர்மனியை உருவாக்குவோம் எனக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கும் யூதர்களின் மூலம் பதில் சொல்ல நினைத்தனர் ஹிட்லரும், ஹிம்லரும். என்ன செய்தார்கள், எப்படி செய்தார்கள் என்பதற்கு முன்பு யூதர்களை எப்படி வதை முகாம்களில் தள்ளினார்கள் என்று பார்ப்போம்.
ஹிட்லர் ஆட்சிக்கு வந்ததற்கு அடிப்படை காரணம் ஜனநாயகமாக இருந்தது. ஆஸ்திரியாவின் குடிமகனாக இருந்தாலும், ஜெர்மனியப் படையில் சேர்ந்து முதலாம் உலகப் போரில் போரிட்டார் ஹிட்லர். ‘வீழ்த்தவே முடியாதது’ என்று நினைத்திருந்த ஜெர்மன் தோற்றுப் போனதாக செய்தி கிடைத்தபோது ஹிட்லர், மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருந்தார். ஆஸ்திரிய குடிமகனாக இருந்தாலும், சில நிர்வாகக் கோளாறுகளால் ஜெர்மனியப் படைகளில் சேர்ந்து போரிட்டவர். முதல் உலகப் போர் முடிந்த பிறகும் ராணுவத்திலேயே தொடர்ந்தார். ஜெர்மனியின் தோல்விக்கு அங்கிருந்த மார்க்சிஸ்டுகளையும், யூதர்களையும் காரணமாக நினைத்தார் ஹிட்லர். இவர்களெல்லாம் இல்லாத ஜெர்மனி மட்டுமே சிறப்பான நாடாக இருக்க முடியும் என நினைத்தவர், ‘தேசிய சோசியலிச ஜெர்மனிய தொழிலாளர்கள் கட்சி’யில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கினார். அதன்பின், கட்சிக்குள் இருந்த பலரையும் ஒதுக்கிவிட்டு, பலரை கட்சியிலிருந்து வெளியேற்றி ஜனாதிபதி வேட்பாளராகத் தன்னை அறிவித்தார். ஆரம்பத்திலிருந்தே சிறந்த பேச்சாளரான ஹிட்லருக்கு, யூதர்களால் ஜெர்மனி எப்படி நாசமாகிப் போனது என்று சொல்ல ஏராளமான கதைகள் இருந்தன. யூதர்களின் மீது ஹிட்லர் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு மதிப்பு இருந்தது. அந்தத் தேர்தலில் ஹிட்லரின் கட்சி வெற்றி பெற்றது.
Enabling Act

பொருளாதார தொய்வு ஹிட்லருக்கு நெருக்கடியைக் கொடுத்தது. அவர் கொண்டுவர நினைத்தவற்றை எதிர்க்கட்சிகள் எதிர்த்தன. ஹிட்லரின் நோக்கங்களை நிறைவேற்ற, ஜெர்மனியில் இயங்கும் கட்சிகள் பிரச்சினையாக இருக்கும் என உணர்ந்ததால், Enabling Act மூலம் எல்லா கட்சிகளையும் கலைத்து கட்சியின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளைச் சிறையில் அடைத்தார். தனது நோக்கம் நிறைவேறுவதற்காக, மக்களிடம் தன் கருத்தைக் கரையேற்ற பரப்புரை அமைச்சராக ஜோசப் கோயபெல்ஸை நியமித்தார். ‘யூதர்களற்ற ஜெர்மனி’ என்பதே ஹிட்லரின் நோக்கமாக உலகம் கருதியது. ஜெர்மனியில் ஹிட்லரின் நடவடிக்கைகளை மற்ற நாடுகளில் விமர்சிக்கத் தொடங்கினார்கள். 1933இல் இருந்து 1939 வரை, ஜெர்மனியின் பொருளாதார முன்னேற்றம் அச்சம்கொள்ள வைத்தது. ஆனால், 1939இல் போலந்தில் ஜெர்மனியப் படைகள் ஊடுருவி, பிரான்ஸ் நாட்டையும் கைப்பற்றியபோதுதான் ‘யூதர்களே இல்லாத ஐரோப்பிய கண்டம்’ என்ற ஹிட்லரின் கொள்கை புரிந்தது. இது, யூதர்களே இல்லாத உலகம் என்பதில் தான் நிற்கும் என்பதையும், இது அடுத்தடுத்த இனங்களையும் துவம்சம் செய்யும் என்பதையும் உணர்ந்து ஜெர்மனி மீது போரை அறிவித்தன உலக நாடுகள். இந்தப் போர் இரண்டாம் உலகப் போராக உருவெடுத்தது.
குடியுரிமையை நீக்குதல்

போரைத் தொடங்கி நடத்திக்கொண்டிருந்தாலும் யூதர்களைக் கவனிப்பதிலிருந்து ஹிட்லர் கண் எடுக்கவில்லை. முழுக்க முழுக்க சுத்தமான ஜெர்மன் ரத்தம் ஓடுபவர்கள் மட்டுமே ஜெர்மனிய குடியுரிமைக்குத் தகுதி பெற்றவர்கள் என்று அறிவித்தார். இதை ஜெர்மனிய மக்கள் எதிர்க்கக் கூடாது என்பதற்காக, ஜெர்மனியர்களின் நல்வாழ்வு கெட்டுப்போனதற்குக் காரணம் யூதர்கள் என்ற பிரகடனத்தை கோயபெல்ஸ் மேற்கொண்டார். முதலாம் உலகப்போரில் ஜெர்மனி தோற்றதற்கே யூதர்கள் காரணம் எனப் பிரகடனப்படுத்தினார்கள். இப்படி உருவாக்கப்பட்ட வெறுப்பு, யூதர்களுடன் கலப்புத் திருமணம் செய்தவர்களுக்கோ, யூதர்களின் ரத்தம் ஓடும் மக்களுக்கோ குடியுரிமை இல்லை என்ற சட்டத்தின் மூலம் மக்களிடமிருந்து வெளிப்படத் தொடங்கியது.
அரசு வேலைகளிலிருந்து யூதர்கள் நீக்கப்பட்டனர். யூதர்கள் நடத்திவந்த கடைகளுக்குச் செல்வதை மக்கள் நிறுத்தினார்கள். வீடு மற்றும் அலுவலகங்களில் பணிக்கு நியமிக்கப்பட்டிருந்த யூதர்கள் நீக்கப்பட்டனர். சாலையில் செல்லும் யூதர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்து சிறையில் அடைத்தது ஜெர்மனிய ராணுவம். யூதர்கள் நடத்திவந்த தொழில்களை, பலர் கையகப்படுத்தினார்கள். வீடு, அலுவலகம் என யூதர்களின் சொத்துகள் சூறையாடப்பட்டன. குடியுரிமை இல்லாத யூதர்களைச் சட்டம் பாதுகாக்கவில்லை. கடைசியாக ஜெர்மனியை விட்டு வெளியேற வேண்டிய சூழலுக்கு ஆளாக்கப்பட்ட யூதர்கள், அதற்குத் தயாரானார்கள். ஆனால், அங்கும் ஒரு படுகுழியைத் தோண்டியது ஜெர்மனி.
வதை முகாம்கள்

ஜெர்மனியை விட்டு வெளியேறும் யூதர்கள், இத்தனை நாட்கள் ஜெர்மனியிலிருந்து அனுபவித்ததற்கு வரி கட்டப்பட வேண்டும் என்று நிர்பந்திக்கப்பட்டனர். கோடீஸ்வரர்கள் கூட அந்த வரியைக் கட்ட தயாரானார்கள். ஆனால், ஒவ்வொருவரது முழு சொத்து விவரங்களையும் தனித்தனியே ஆராய்ந்து, அவர்களது மொத்த சொத்து மதிப்பில் 90 சதவிகிதத்தை வரியாகக் கட்ட வேண்டும் எனக் கூறப்பட்டது. பணத்தைவிட உயிர் முக்கியம் என அனைத்தையும் விற்றுவிட்டு யூதர்கள் வெளியேறத் தயாரானார்கள். கப்பல்களில் ஏறி வேறு நாடுகளுக்குப் பயணமான யூதர்களை எந்த நாடும் ஏற்றுக்கொள்ளவில்லை. உலகளவில் நிலவிவந்த அப்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் ஜெர்மனிய உளவாளிகளின் மீதான அச்சம் காரணமாக ஜெர்மனியிலிருந்து சிறு பொருளையும் எந்த நாட்டிலும் ஏற்றுக்கொள்ளவில்லை. எல்லா நாடுகளும் கைவிரித்துவிட, கப்பலில் பயணமான பலர் கடல் நோயினால் தாக்கப்பட்டு இறந்தனர். மீதமிருந்தவர்களை சுமந்துசென்ற கப்பல் ஜெர்மனியைச் சென்றடைந்தது. ஏதாவது வேலை செய்தாவது பிழைத்துக்கொள்ளலாம் என நாட்டுக்குள் சென்றவர்களை ஜெர்மனியப் பாதுகாப்புப் படைகள் பிடித்து அகதிகளாக முத்திரை குத்தின.

குடியுரிமையுடன் சேர்த்து எல்லா உரிமைகளையும் இழந்த மக்கள் முகாம்களில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்காக, ஒவ்வொரு சிறைச்சாலையிலும் ஒரு பகுதியைத் தயார் செய்து முகாம்களை உருவாக்கியிருந்தது ஜெர்மனி. போலந்து, பிரான்ஸ் மற்றும் சோவியத் யூனியனுடன் நடைபெற்ற போரில் பிடிக்கப்பட்ட போர்க் கைதிகள், அரசியல் கைதிகள் மற்றும் யூதர்கள் இந்த முகாம்களில் அடைக்கப்பட்டனர். இந்த முகாம்களை ‘Concentration Camp’ (வதை முகாம்கள்) என்றழைத்தது ஜெர்மனி.
போரின் வெற்றியா? யூதர்களின் இனமா?

போஷாக்கான உணவு இல்லாமல், குடிநீர் இல்லாமல் எத்தனையோ மக்கள் அங்கு அவதிப்பட்டனர். ராணுவம் முன்னேறிச் செல்லும்போது, அந்த இடத்தில் மக்களுடன் சண்டை வேண்டாம் என்பதால், உங்களை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்கிறோம் என்று கூறி, ஆயிரக்கணக்கில் ரயிலில் ஏற்றி இந்த வதை முகாம்களுக்கு அனுப்பிவைத்தனர். டயோரியா போன்ற நோய்களால் பல நூறுகளில் தினம் தினம் மக்கள் இறந்து போயினர். 1944இல் ஜெர்மனி நெருக்கடியைச் சந்திக்கத் தொடங்கியது. சோவியத் யூனியன் ஸ்டாலிங்கர்டில் திருப்பியடிக்கத் தொடங்கியது. இது போரில் தோற்றுவிடுவோம் என்பதையும் தாண்டி, யூதர்களை அழிக்கும் திட்டம் கைவிடப்படுமோ என்று ஜெர்மனிய நாஜி தலைவர்களிடையே பயத்தை உருவாக்கியது.
ஆக்கிரமிக்கப்பட்ட போலந்தின் கவர்னராகச் செயல்பட்ட ஹான்ஸ் பிராங்க், தனது மாகாண கவர்னர்களிடம் பேசிய பேச்சு, அங்கு பிடித்து வைக்கப்பட்டிருந்த யூதர்களுக்கு முடிவு கட்டுவதற்கான வழியை உருவாக்கியது. “நாம் யூதர்களுக்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும். இதை வெளிப்படையாகவே சொல்கிறேன். யூதர்கள் மொத்தமாக அழிக்கப்படவில்லை என்றால், நமது ஜெர்மனியர்கள் சிந்திய புனிதமான ரத்தத்துக்கு மதிப்பு கிடைக்காமல் போய்விடும்” என்று பேசினார்.
அப்படி என்ன ஜெர்மனியர்கள் புனிதமானவர்கள் என்ற நூலைப் பிடித்துப் போகும்போது, தங்களை புனிதமான ‘ஆரியர்கள்’ என ஜெர்மனியர்கள் பெருமைப்படுத்திக் கொள்கின்றனர். ஆரியர்களில் ஐரோப்பிய ஆரியர்கள், இந்தோ ஆரியர்கள் (இந்தோ இரானியர்கள்) என இரு வகைகளாகப் பிரிக்கின்றனர். ஹிட்லரின் வகையறாக்கள் ஐரோப்பிய ஆரியர்களில் வருகின்றனர். இந்தோ ஆரியர்கள் எனப்படுபவர்கள், கைபர் கணவாய் வழியாக இந்தியாவுக்குள் குடிபுகுந்தவர்கள்.
ஐரோப்பிய ஆரியர்கள் தங்களது வைரிகளாக யூதர்களை உருவகப்படுத்தினர். அவர்களைத் தங்களது இனத்திலிருந்து பிரிப்பதற்காக அவர்கள் முதலில் கைவைத்தது குடியுரிமை. “மடகாஸ்கர் பிளான்” என்ற பெயரில் ஐரோப்பாவிலிருந்து கைது செய்த யூதர்களை மடகாஸ்கர் தீவுக்குக் கப்பலில் அழைத்துச் சென்றனர். ஜெர்மனியிலிருந்து வெளியேறி சுதந்திரமாக வாழலாம் என்று சென்ற யூதர்களை, அங்கும் ஜெர்மனிய அதிகாரிகளே நிர்வகித்தனர். அந்தமான் சிறை போல ஒரு மடகாஸ்கர் சிறை அங்கு உருவாக்கப்பட்டிருந்ததே தவிர மடகாஸ்கரும் அவர்களுக்கு சுதந்திரத்தைக் கொடுத்துவிடவில்லை.
குடியுரிமை எனும் ஆயுதம்
“‘இன அழிப்பு’ என்பது ஒரு செயல்பாடு. அது நேரடியாக விஷ வாயு நிரப்பப்பட்ட அறைக்குள் தொடங்குவதில்லை. அது வெறுப்புப் பேச்சிலிருந்து தொடங்குகிறது” என ஐக்கிய நாடுகள் சபையின் அடாமா டிய்ங் Prevent Genocide தினத்தில் பேசிய பேச்சு, மிக முக்கியமான ஒன்று.
நிலம் யாருக்கானது என்றும், அந்த நிலத்தில் வாழ வேண்டியவர்கள் யார் என்பதையும் முடிவு செய்யும் அதிகாரத்தைப் பெற்றிருப்பதாக ஹிட்லர் நினைத்தார். அதற்கான முழு தைரியத்தையும் ஹிட்லருக்குக் கொடுத்தது அதற்கு முந்தைய திட்டத்தின் வெற்றி. ஹிட்லரும் ஹிம்லரும் அமர்ந்து பேசி, ‘யூதர்களைப் பற்றிய கேள்வி’க்குப் பதில் கண்டுபிடித்தனர். யூதர்களை அழிப்பதற்கான முடிவை அந்த அறையில் எடுத்து 75 வருடங்கள் கடந்துவிட்டது. ஆனால், அதற்கும் ஐந்து வருடங்களுக்கு முன்பாகவே 1939இல் யூதர்களின் குடியுரிமையைப் பறித்து தனக்கான அழிவுக்கு ஹிட்லர் பதிலை எழுதினார்.
உலகில் வாழும் மனிதர்களின் அடிப்படை உரிமை மண். காலுக்கடியில் இருக்கும் மண்ணை பறிப்பதும், குடியுரிமையைப் பறிப்பதும் ஒன்றுதான். அது மக்களை நேரடியாக Detention Campகளுக்கு அனுப்பினாலும், சர்வாதிகாரிகளின் முடிவுக்கும் வழிவகுக்கிறது.
