பொள்ளாச்சியில் தொடர்மழையால் வீடு இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் நல்வாய்ப்பாக 5 பேர் உயிர் தப்பி உள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் தாக்கத்தால் கடந்த ஒரு வாரமாக தமிகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 3 நாட்களாக பொள்ளாச்சி பகுதியிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் பொள்ளாச்சி ஜூபிலி கிணறு வீதி சுப்பிரமணியம் சந்து பகுதியில் பூர்வீக வீட்டில் சித்ரா மற்றும் அவரது தாயார் லட்சுமி ஆகியோர் வசித்து வருகின்றனர். சித்ரா பொள்ளாச்சியில் உள்ள தனியார் துணிக்கடைக்கு பணிக்கு சென்று வருகிறார். சித்ராவின் மகள் சண்முகப்பிரியா, மருமகன் சிவக்குமார், பேரக்குழந்தைகள் கிருத்திகராஜ், தீக்சன் ஆகியோர் குடும்பத்துடன் உறவினர் வீட்டில் தங்கி இருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை முதல் பொள்ளாச்சி பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் சித்ராவின் பூர்வீக வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் இரண்டு சிறு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இடிந்த வீட்டில் இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர்.
விபத்து குறித்த தகவல் அறிந்த பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் ஷ்யாமளா மற்றும் நகராட்சி ஆணையாளர் குமரன், வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து ஆய்வில் ஈடுபட்டனர்.
முன்னதாக பொள்ளாச்சி அருகே ஆழியார் குரங்கு அருவி எனப்படும் கவி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
