சிறு உணவகங்களில் விலை உயர்வு! அடுத்து பெரிய ஹோட்டல்களிலுமா? 

Published On:

| By Aara

சில வாரங்களாகவே தக்காளி விலை உயர்ந்துகொண்டே வரும் நிலையில்….தக்காளியைப் போலவே இஞ்சி, பச்சைமிளகாய், குடைமிளகாய், பீன்ஸ் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளும் விலை உயர்ந்துகொண்டே செல்கின்றன. காய்கறிகள் விலை உயர்வோடு பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட சமையலுக்கான பொருட்களும் விலை உயர்வை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில்தான்… தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று (10.7.2023) தலைமைச் செயலகத்தில், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வினை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.

ADVERTISEMENT

ஆனால் இந்த ஆய்வுக் கூட்டம் நடத்துவதற்கு முன்பே சென்னையில் இருக்கும் சிறிய  அளவிலான உணவகங்களில் விலை உயர்வு அமலுக்கு வந்துவிட்டது. கடந்த சில நாட்களாக சென்னை திருவல்லிக்கேணி, சேப்பாக்கம்  உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் மெஸ்களில் விலை உயர்வு நடைமுறைப்படுத்தப்பட்டது.  முதலில் தக்காளி சாதத்தின் விலையை ஏற்றியவர்கள் பிறகு டிபன் வகைகள் மற்ற வெரைட்டி ரைஸ் வகைகளுக்கும் விலையை ஏற்றினார்கள். சென்னையின்  நடுத்தர அளவிலான உணவகங்கள் பலவற்றில் இன்று (ஜூலை 10) முதல் விலையேற்றப் பட்டியல் ஒட்டப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து திருவல்லிக்கேணி மெஸ் உரிமையாளர்களிடம் இன்று (ஜூலை 10) நாம் கேட்டபோது, ‘சமையலுக்கான மூலப்பொருட்கள் விலை எல்லாம் உயர்ந்துவிட்டது. அதனால் வெரைட்டி ரைஸ் 5 ரூபாய் ஏற்றியிருக்கிறோம். இட்லி தோசை,  பொங்கல், பூரி, வடை உள்ளிட்ட டிபன் வகைகளையும் விலை ஏற்றியிருக்கிறோம்” என்றார்கள்

ADVERTISEMENT

இந்த நிலையில்  சென்னை ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவரான நம்ம வீடு வசந்த  பவன் ரவியிடம்  இதுகுறித்துப் பேசினோம்.

“இந்த விலை உயர்வை தற்காலிகம் என்று நம்பிக்கை வைத்து அப்படியே போய்க் கொண்டிருக்கிறோம்.  மக்கள் தலையில்  எவ்வளவுதான் சுமையை வைப்பது? ஏற்கனவே  கரன்ட்  பில், பெட்ரோல், கேஸ், அரிசி, துவரம் பருப்பு என எல்லாவற்றின் விலையும் ஏறியிருக்கிறது.  சின்னச் சின்ன ஹோட்டல் காரர்கள் தாக்குப் பிடிக்க முடியாமல் விலையை ஏற்றியிருப்பார்கள்.  பெரிய ஹோட்டல்களில் விலை ஏற்றுவது தொடர்பான ஆலோசனையில்தான் இருக்கிறோம்” என்று பதில் கூறினார்.

ADVERTISEMENT

போகிற போக்கைப் பார்த்தால் தமிழ்நாடு முழுவதும் ஹோட்டல்களிலும் சாப்பாட்டு விலை உயரும் என்றே தெரிகிறது.

வேந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share