தமிழகத்தில் ஆணவக்கொலை அதிகரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ஜெயசூர்யா, அதே பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்தார்.
கடந்த மே மாதம் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது நடந்த சாலை விபத்தில் ஜெயசூர்யா உயிரிழந்தார்.
இந்த நிலையில் தனது மகன் ஆணவ படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் முருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில் தனது மகன், “கல்லூரியில் படித்து வந்தபோது இளம் பெண் ஒருவரை காதலித்து வந்தார். இதற்கு பெண்ணின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து தன்னுடைய மகனுக்கு மிரட்டல் விடுத்து வந்தனர். எனக்கு இது சாதாரண விபத்தாக தெரியவில்லை. ஆணவ கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. எனவே இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன் இன்று(ஆகஸ்ட் 4) விசாரணைக்கு வந்தது.
அப்போது ஜெயசூர்யா மரண வழக்கில் சந்தேகம் இருப்பதால் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
தமிழக காவல்துறையினர் வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிசிஐடி அதிகாரிகளுக்கு இரண்டு வாரங்களுக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, தமிழகத்தில் ஆணவக் கொலைகள் அதிகரித்து வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை இது போன்ற ஒரு சில வழக்குகள் வெளியில் வருவதில்லை” என்று வேதனை தெரிவித்தார்.
