சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்குக்கூட பிடித்த உணவு உருளைக்கிழங்கு. ருசியுடன் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் தரும் இந்த இனிப்பும் காரமும் நிறைந்த ஹனி சில்லி பொட்டேட்டோ குழந்தைகளுக்கு மட்டுமல்ல… பெரியவர்களுக்கும் பிடிக்கும்.
என்ன தேவை?
உருளைக்கிழங்கு – 3 அல்லது 4
ரெட் சில்லி சாஸ் – 2 டேபிள்ஸ்பூன்
டொமேட்டோ கெட்சப் – ஒரு டேபிள்ஸ்பூன்
இஞ்சி – பூண்டு விழுது – அரை டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பூண்டு – ஒரு டேபிள்ஸ்பூன்
கார்ன்ஃப்ளார் (சோள மாவு) – 2 டேபிள்ஸ்பூன்
வறுத்த எள் – 2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் – ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
உருளைக்கிழங்குகளைத் தோல் சீவி பிங்கர் சிப்ஸுக்கு நறுக்குவதுபோல நீளவாக்கில் துண்டுகளாக்கவும். இதனுடன் தேவையான அளவு தண்ணீர்விட்டு 5 – 10 நிமிடங்கள் வரை வேகவிட்டு இறக்கவும். பிறகு நீரை வடியவிட்டு, குளிர்ந்த தண்ணீரில் அலசி எடுக்கவும். சோள மாவுடன் பாதியளவு கெட்சப், உப்பு, இஞ்சி – பூண்டு விழுது சேர்த்துக் கலக்கவும். அதனுடன் உருளைக்கிழங்கு துண்டுகள் சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து உருளைக்கிழங்குத் துண்டுகளைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு பூண்டு சேர்த்து வறுக்கவும். அதனுடன் ரெட் சில்லி சாஸ், மீதமிருக்கும் டொமேட்டோ கெட்சப், உப்பு சேர்த்துக் கலக்கவும். பிறகு, பொரித்த உருளைக்கிழங்கு சேர்த்துக் கிளறவும். தேன் சேர்த்துக் கலந்து இறக்கவும். மேலே வெங்காயத்தாள், எள் தூவிப் பரிமாறவும்.
**[நேற்றைய ஸ்பெஷல்: தந்தூரி ஆலு!](https://minnambalam.com/public/2021/03/26/1/tandoori-aalu)**
