பருவ கால மாற்றங்களின்போது உடலில் அதிக அளவு பாதிக்கப்படுவது சருமம். அதிக வெப்பம் கொண்ட காலத்தில் சருமம் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகும்.
தேவையான அளவு தண்ணீர் பருகுவது, கோடைக்கேற்ற குளிர்ச்சியான உணவு முறை, மிதமான உடற்பயிற்சி போன்றவற்றை பின்பற்றுவதன் மூலம் சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்கலாம்.
அதற்காக வீட்டிலேயே ஃபேஸ் பேக்கை தயாரித்து பயன்படுத்துவது நல்ல பலன்களை அளிக்கும்.
ஒரு சிறிய அளவு வெள்ளரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அதனுடன் 50 மில்லி பால் மற்றும் ஒரு டீஸ்பூன் நாட்டுச்சர்க்கரை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
இந்த விழுதை முகத்தில் பூசி 20 முதல் 25 நிமிடங்கள் வரை வைத்திருக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். வெள்ளரிக்காயின் சாறு சரும பாதிப்புகளை குணமாக்கும் .
நன்கு பழுத்த மாம்பழத்தின் சதைப்பகுதியை ஒரு டேபிள்ஸ்பூன் அளவு எடுத்துக்கொண்டு அதனுடன் 2 டீஸ்பூன் கெட்டியான தயிர் சேர்த்து நன்கு குழைத்து கொள்ள வேண்டும்.
இந்த கலவையை முகத்தில் பூசி 20 நிமிடங்கள் வரை காத்திருந்த பின்னர் முகத்தை நன்றாக தேய்த்து கழுவவும்.
மாம்பழத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஈ சத்துகள் புற ஊதாக்கதிர்களின் பாதிப்பிலிருந்து சருமத்தை காக்கும். சருமத்தின் இயல்பான தன்மையை மீட்கும். முகப்பரு ஏற்படாமல் தடுக்கும். தயிரிலுள்ள லாக்டிக் ஆசிட் சருமத்தை மென்மையாக்கும்.
இரண்டு டீஸ்பூன் தக்காளி சாறுடன், ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து கெட்டியான கலவையாக தயார் செய்யவும். இந்த கலவையை முகத்தில் பூசிவிட்டு 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவலாம்.
தக்காளியில் நிறைய உயிர்ச்சத்துக்களும், வைட்டமின் சியும் உள்ளன. அதிலுள்ள அஸ்கார்பிக் ஆசிட் எனும் ஆன்டி ஆக்சிடன்ட் சருமத்தின் துளைகளுக்குள் பரவி சருமத்தை பளபளப்பாக மாற்றும்.
இரண்டு டீஸ்பூன் அரைத்த நெல்லிக்காய் விழுதுடன் ஒரு டீஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் பூசவும்.
இந்த கலவை நன்றாக உலர்ந்ததும் முகத்தை கழுவவும். நெல்லிக்காய் சருமத்தில் கொலாஜின் உற்பத்தியை அதிகரித்து இளமையுடன் வைத்திருக்க உதவும். மேலும் சருமத்தின் தளர்ச்சியை அகற்றி அதன் இயல்பான நிலைக்கு மாற்றவும் உதவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அதிகரிக்கும் வெயில்… ஹெல்த் டிப்ஸ் வழங்கிய அமைச்சர்!
அமலாக்கத்துறையும், அடக்குமுறையும்! சீரழியும் மக்களாட்சி விழுமியங்கள்!