கோடைக்காலத்தில் பலரும் சந்திக்கிற பிரச்சினை உடலின் உள்ள இறுக்கமான பகுதிகளில் ஏற்படும் அரிப்பு. இதைச் சொல்வதற்கே பலர் கூச்சப்படுவார்கள். ஆனால், அந்த இடத்தில் கைவைத்து, வருடாமல் இருக்க முடியாது. இதற்கான காரணமும் தீர்வும் என்ன?
“கோடைக்காலத்தில் இறுக்கமான பகுதிகளில், குறிப்பாக அந்தரங்க உறுப்பு பகுதிகளில் வியர்வை அதிகமாகத் தங்கும்.
உடல் பருமன் அதிகமாக உள்ளவர்களுக்கும், தொடைப்பகுதிகளில் கொழுப்பு அதிகமுள்ளவர்களுக்கும் வியர்வை இன்னும் அதிகமாகத் தங்கும். நீரிழிவு உள்ளவர்களுக்கு இந்தப் பிரச்சினை இன்னும் தீவிரமாக இருக்கும்.
இவர்களுக்கெல்லாம் அந்தப் பகுதிகளில் ‘டீனியா’ (Tinea) அல்லது ‘கேண்டிடா’ (Candida) என்ற பூஞ்சைத் தொற்று ஏற்படும்.
இந்தத் தொற்றின் காரணமாக அந்தப் பகுதிகளில் வீக்கம் ஏற்படும். அதன் விளைவாகவே அங்கே அரிப்பு ஏற்படுகிறது.
ஆன்டிஃபங்கல் க்ரீம் (Antifungal Cream) என்று கேட்டு வாங்கி, அரிப்புள்ள இடங்களில் தடவலாம். இந்த க்ரீம்களில் ஸ்டீராய்டு இல்லாததாகப் பார்த்து வாங்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனையோடு ஆன்டிஃபங்கல் மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம்.
அந்தரங்கப் பகுதிகளில் வியர்வை தங்காதபடி, வசதியான உள்ளாடைகளை அணிய வேண்டும். இறுக்கமான, சிந்தெடிக் உள்ளாடைகள் வியர்வையை அதிகப்படுத்தும்.
எனவே, தளர்வான காட்டன் உள்ளாடைகளே சிறந்தவை. முடிந்தவரை காற்றோட்டமான இடங்களில் இருக்க வேண்டியதும் முக்கியம்.
உடல் பருமன் அதிகமிருந்தால், முதலில் அதைக் குறைத்துக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அதேபோல, ரத்தச் சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது முக்கியம். இந்த எளிய வழிகளின் மூலமே இறுக்கமான பகுதிகளில் ஏற்படும் அரிப்பிலிருந்து நிவாரணம் பெறலாம்.
முக்கியமாக, ஆன்லைனை பார்த்து கண்ட சிகிச்சைகளையும் பின்பற்றி, தேவையற்ற பின்விளைவுகளை ஏற்படுத்திக்கொண்டு, பாதிப்பைத் தீவிரப்படுத்திக் கொள்ளாதீர்கள்” என்று எச்சரிக்கிறார்கள் தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
IPL 2024 : கடைசி ஓவரில் பதற வைத்த உனத்கட்… த்ரில் வெற்றி பெற்ற ஹைதராபாத்!
சேலம்: செல்வகணபதியின் பாசவலையில் அதிமுகவினர்… எடப்பாடி ஷாக்! மாம்பழத்தின் நிலை என்ன?
டிஜிட்டல் திண்ணை: அரசு ஊழியர் ஓட்டுகளில் 30% சரிவு: ஸ்டாலினை அதிர வைத்த சர்வே!