தேவையானபோது உணவு உட்கொள்ளாமல் விடும்போது, ஆரம்பத்தில் அதன் விளைவுகள் பெரிதாகத் தெரியாது. நாள்கள் செல்லச் செல்ல, புளித்த ஏப்பம், வாயில் நீர் சுரப்பது, காலையில் பல் துலக்கும்போதே குமட்டல் ஏற்படுவது, துவர்ப்புச் சுவையை உணர்வது, சாப்பிட்டவுடன் வயிறு எரிச்சல் ஏற்பட்டு நெடு நேரம் தொடர்வது, தூக்கமின்மை போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
இவற்றின் பிரதிபலிப்பாக மனநலப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். இந்த பிரச்சினையை, கடைகளில் மாத்திரை வாங்கிப் போட்டு சரிசெய்து கொள்ளலாம் என்று நினைக்கக் கூடாது.
மருத்துவ ஆலோசனை, பரிசோதனை, அதனடிப்படையில் சிகிச்சை, வாழ்வியல் மாற்றம் எனப் பின்பற்ற வேண்டும் என்கிறார்கள் வயிறு, குடல் சிறப்பு மருத்துவர்கள்.
பொதுவாக, வயிற்றில் இருக்கும் ஹைட்ரோக்ளோரிக் அமிலம் அதிகமாகச் சுரப்பதால் வரும் பிரச்சினை அசிடிட்டி.
வயிற்றில் எப்போதுமே நமக்கு அமிலங்கள் சுரந்து கொண்டேதான் இருக்கும். இவை, வயிற்றில் இருக்கும் கெட்ட பாக்டீரியாக்களை கொன்று உடல்நலப் பிரச்சினைகள் பலவற்றிலிருந்து நம்மை காக்கும்.
மேலும், இந்த அமிலங்கள்தான் சில நொதிகளுடன் (Enzymes) சேர்ந்து உணவு செரித்தலுக்கு உதவி புரியும். நாம் தேவையானபோது சாப்பிடவில்லை என்றால், வயிற்றில் சுரக்கும் ஹைக்ரோக்ளோரிக் அமிலம் வெறும் வயிற்றில் சேகரமாகி பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
நம் உணவுக்குழாய் வயிற்றுடன் இணையும் இடத்தில் இருக்கும் பகுதியில் (Lower Esophageal Sphincter) இறுக்கம் குறையும்போது, அமிலம் வயிற்றிலிருந்து மேலே எழும்பி உணவுக்குழாயில் நுழையும். அப்போது நெஞ்செரிச்சல் ஏற்படும். இதுதான் அசிடிட்டி.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பவர்களுக்கு அசிடிட்டி ஏற்படும்.
டயட் என்ற பெயரில் தேவையான உணவை தவிர்ப்பவர்களும் இதற்கு இலக்காவார்கள். அசிடிட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் காரமான உணவை சாப்பிடும்போது, அது உணவுக்குழாயில் மேலெழும்பி வரும்போது அதிக வலி, கூடுதலான நேரம் நெஞ்செரிச்சல் ஏற்படும்.
லேசான பாதிப்பு என்றால், வாரத்துக்கு ஒருமுறை எரிச்சல் போன்று ஏற்படும். நேரத்துக்கு சாப்பிட்டு, காரம் குறைக்க வேண்டும். மிதமான பாதிப்பு என்றால், வாரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நாள்களில் பிரச்சினை ஏற்படும். இதுவே அதிக பாதிப்பு என்றால், எதையுமே சாப்பிட முடியாது, வாயில் சாப்பாடு வைக்கும்போதே எதுக்களித்தல் ஆரம்பித்து விடும். சரியாக தூங்கவும் முடியாது.
அசிடிட்டி பிரச்சினையின் ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் முதலில் அவர்களது உணவுப் பழக்கம் மற்றும் தூக்கப் பழக்கத்தை சரி செய்ய வேண்டும்.
மருத்துவ ஆலோசனையுடன் கார உணவுகள், மசாலா உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இவற்றை செய்ய ஆரம்பித்தால் பிரச்சினை குறைய ஆரம்பிக்கும்.
மேலே குறிப்பிட்ட அறிகுறிகளுடன் இரண்டாம், மூன்றாம் நிலையில் இருப்பவர்கள் உடனடியாக மருத்துவரை சந்தித்து, தேவைப்பட்டால் எண்டோஸ்கோப்பி உள்ளிட்ட பரிசோதனை மேற்கொண்டு, நோயின் தீவிரத்தை பொறுத்து சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படும்.
எந்த வேளை உணவையும் தவிர்க்கக் கூடாது. குறிப்பாக, காலை உணவு. காலை உணவை தேவையான அளவு எடுத்துக்கொள்ளுதல் அவசியம். காலையில் எழுந்து நான்கு மணி நேரத்திற்குள்ளாக சத்துமிகுந்த ஆகாரங்களைச் சாப்பிடுவது அவசியம்.
மதிய நேரத்தில் நார்ச்சத்து, புரதம் கொண்ட உணவுகளைச் சாப்பிட வேண்டும். நிறைய காய்கறிகள், சிட்ரஸ் இல்லாத பழங்கள், குறைந்த கொழுப்பு உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இரவு உணவை 6.30 – 7 மணிக்குள் முடித்துவிட வேண்டும். டீ, காபி போன்றவற்றை ஒரு நாளைக்கு ஒருமுறை எடுத்துக்கொள்வது போதுமானது.
அசிடிட்டி பிரச்னை உள்ளவர்கள் சரியான நேரத்தில் தூங்குவது அவசியம். முக்கியமாக, 6 – 8 மணி நேரம் தூக்கம் அவசியம்.
சீரான உணவுப் பழக்கம், உயரத்துக்கு ஏற்ற எடையில் இருப்பது, 30 முதல் 45 நிமிடங்கள் வரை தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வது, மனதை அமைதிப்படுத்தும் பயிற்சிகளை மேற்கொள்வது அவசியம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: பெரிய நெல்லி சட்னி
சல்லிசல்லியா நொறுக்கிட்டாங்க… மும்பையிடம் மொத்தமாக சரணடைந்த பெங்களூரு!