ஸ்ரீராம் சர்மா
வரலாறு காணாத மழை வரும், வெள்ளம் வரும், மலைச்சரிவு வரும் என்றெல்லாம் சொல்லத் தெரிந்த எவருக்கும் இப்படி ஒரு இடி வரும் என்று சொல்லத் தெரியாமல் போனதே !
அந்த டிசம்பர் எட்டில் இந்தியத் திருநாட்டின் பாதுகாப்புக் கவசம் ஒன்று ஏனென்று தெரியாமல் எரிந்து போனதே !
குன்னூர்க் காட்டின் ஓங்கிய மரங்கள் சடசடவென முடங்கிச் சரிய போற்றுதலுக்குரிய முப்படைத் தளபதியாம் தியாகத்திரு பிபின் ராவத் காரணம் இதுவென தெரியாதபடிக்கு உயிர்த் தியாகம் செய்து மாண்டாரே !
அவரது மனைவி உட்பட 13 பேரை பலிகொண்ட அந்த கொடுமை ஏன் நடந்தது ? எப்படி நடந்தது ? எதற்காக நடந்தது என்பதெல்லாம் போகப் போகத்தான் தெரியும். தெரிந்தாக வேண்டும்.
**
கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
**
**
நாடென்ப நாட்டின் தலை !
**
பகை இன்றி இருப்பது நாட்டுக்கு அழகு. பகை நம்பிக் கெட்ட போதும், மீண்டெழுந்து உயர்ந்து காட்டுவதே நல்ல நாட்டுக்கு அழகு என்கிறது ஈராயிரத்து திருவள்ளுவம் !
கொடுமை நிகழ்ந்தது தமிழ் மண்ணில்…
அந்த நாளில் இறுகிய முகத்தோடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குன்னூர் விரைந்தார்.
அன்றவரது அனலோடிய பெருமூச்சு எப்படியிருந்திருக்கும் என்பதையும், அவரது தலைமையில் இயங்கும் ஈடு இணையற்ற தமிழக காவல் படை எந்தவிதம் பதைபதைத்திருக்கும் என்பதையும் எளிதில் எழுதிச் சொல்லி விட முடியாது.
இருந்திருந்து இந்த மண்ணுக்கு ஏன் இந்த சோதனை என புலம்பியபடியே, அந்த குன்னூர் மலைக் காட்டுச் சரிவில், வீட்டு வாளியில் தண்ணீர் முகர்ந்து கொண்டோடி வந்து, தன்னியல்பாக சரிந்து இறங்கி, வாரி வாரி இறைத்த தமிழர்களின் பரிதவிப்பைக் கண்டு உலகம் நெகிழ்ந்தது.
முதலமைச்சர் உத்தரவின் பேரில் தேசத்தின் இழப்பை இயன்ற வரையில் காப்பாற்ற ஒட்டுமொத்த மாநில அமைப்புகளும் ஆங்காங்கே முடுக்கி விடப்பட்டன. மாநில டிஜிபி முன்னெடுத்து விரைந்தார்…
மொத்த முயற்சிகளும் கைமீறிப் போக, முப்படை ராணுவத் தலைமைத் தளபதி அவர்களின் இன்னுயிர் விண்ணில் கலந்து ஏறிவிட, தேசம் அந்த பேரிழப்பை சந்தித்தே விட்டது.
ஆம், அன்றந்த வெலிங்டன் வளாகத்தில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் அஞ்சலி மலர்கள் அடங்கிய தட்டொன்றை ஏந்திக் கொண்டு, ஆறு முறை தன் பூட்ஸ் கால்களை ஓங்கி ஓங்கித் தரைமேல் அறைந்தபடி உடன்வர,
உறவுக்குப் பேர் போன இந்தியக் காக்கைகள் வானவெளியில் ஓயாது கரைந்தபடியே இருக்க…
பாரதப் பெருமண்ணின் பேரார்ந்த தளபதியார் பிபின் ராவத் அவர்களின் பூத உடலுக்கும், மற்ற மற்ற தியாகிகளுக்கும் வீரவணக்கம் செலுத்தும் துர்பாக்கிய நிலையினைக் கொண்டார் தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
மு.க. ஸ்டாலின் அவர்களின் உடல் மொழியினை ஆரம்பம் தொட்டே கூர்ந்து கவனித்து வருபவன் என்னும் வகையில் சொல்கிறேன்…

தனது ஆட்சிக் காலத்தில் இப்படியானதொரு துர்சம்பவம் ஒன்று நடந்து விட்டதை அவரால் கொஞ்சமும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
படபடப்பை வெளிக்காட்டிக் கொள்வது அரசாண்மையல்ல என்பதாலும், தேசத்தின் பெரும் விபத்தை ஊன்றிக் கவனித்து உள்ளோடி நசுக்குவதே சரி என்பதாலும், அமைதியோடு, அதே சமயத்தில் வீரியத்தோடு செயலாற்ற எண்ணியவராக அழுத்தமாக நகர்ந்து போனார் என்றே கொள்ள முடிகின்றது.
பல்லி ஆகப்பட்டது அதன் வேட்டை முடியும் வரையில் தன் முகத்திலோ, உடலிலோ எந்த ஓர் அசைவையும் காட்டாது. எதிரி அசந்திருக்கும் நேரத்திலும் கூட பொறுமை காட்டியே நிற்கும்.
ஆனால், தனக்கு சரியெனத் தோன்றும் ஓர் கணத்தில் சட்டெனக் கவ்வி விடும். முதல்வர் மு.க.ஸ்டாலினும் கவ்வி விடுவார் என்றே நம்புகிறேன்..
தமிழ்நாடு தன் மாநில உரிமைகளை உரக்கக் கேட்கக் கூடியது என்றாலும், தேசியம் என்று வரும்போது என்றுமே விட்டுக் கொடுத்து விடாது என்பதே கடந்த கால வரலாறு.
நாட்டுப்பற்றில் எந்தவொரு மாநிலத்துக்கும் தமிழகம் சளைத்ததல்ல என்பதற்கு எல்லையில் நிற்கும் வீரம் செறிந்த தமிழர்களின் படையே சாட்சி !
தேசத்துக்கான இந்த பேரிழப்பில் குற்றச் செய்கை ஒன்று இருந்திருக்கும் எனில், அதில் உள்ளூர் சில்லறைகளின் கைவரிசை இருந்திருக்க முடியாது. எனினும், எதையும் புறந்தள்ளிவிட முடியாது. சந்தேகத்தின் பலனை எவருக்கும் அளித்துவிட முடியாது.
இராணுவ ஹெலிகாப்டரின் “ப்ளாக் பாக்ஸ்” கண்டெடுக்கப்பட்டுவிட்டது. அதனைத் தீர ஆய்ந்து சொல்லும் இடத்தில் நமது இராணுவம் இருக்கிறது. என்ன நடந்தது என்பதை அது சொல்லத்தான் போகிறது. அதுவரை பொறுத்து இருப்பதே சரி.
இடையிடையே சோஷியல் மீடியாக்களில் ஆளாளுக்கு மனம் போன போக்கில் புரளி பேசுவது நாட்டின் நன்மைக்கு ஆகாது.
ஜனநாயக நாட்டில், பேச்சுரிமை என்பதும், எழுத்துரிமை என்பதும் சாதி, மத, வர்க்க பேதமின்றி அனைவருக்கும் உண்டானதுதான். சட்டமும் அதை வலியிறுத்துகின்றது.
ஆனால், பேச்சுரிமையும் எழுத்துரிமையும் இன்றைய சோஷியல் மீடியாக்களின் முடுக்கத்தால் வியாபாரமாகி நிற்பதை காண முடிகின்றது. அது விகாரமாகி விடக் கூடாது. சப்ஸ்க்ரைபர்களை அள்ளுவேன் பேர்வழி என சகட்டுமேனிக்கு பேசிவிடக் கூடாதல்லவா ?
பரந்து விரிந்த இந்த தேசத்துக்கு இறையாண்மை உண்டு என்பது போல் மாநிலத்துக்கும் இறையாண்மை உண்டு அல்லவா ? இரண்டையும் மீறப் பார்ப்பது சட்டத்துக்கு புறம்பானது அல்லவா ?
எல்லைகளை புரிந்து கொண்டு செயலாற்றுவது அவசியமாகிறது. போகிற போக்கில் எது வேண்டுமானாலும் பேசலாம், எழுதலாம் எனில், அது சுமூகமான சமூக வாழ்வுக்கு ஆகாது. தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சியை வெறுப்புணர்வோடு உமிழ்ந்து எதிரிக்கு இரையாகிவிடக் கூடாது.
இறையாண்மையின் ஆழ அகலங்களை அறியாமல் தன் முனைப்போடு அடித்தாடினால் அது ஆபத்தில்தான் சென்று முடியும்.
இந்த எச்சரிக்கையை அனைவரும் கொண்டாக வேண்டும்.
போகட்டும்.
குன்னூர் கொடூரங்களிடையே என் மனமெங்கும் நிறைந்து போன அந்த தாயாரின் நினைவுகளோடு இந்த கட்டுரையை முடிக்கிறேன்.

அவள் பெயர் மதுலிகா !
மத்தியப் பிரதேசத்தின் ஷாதோல் நகரத்தில் பிறந்து, குவாலியரில் படித்து, டெல்லியில் பட்டப் படிப்பை முடித்த இளமகள் அவள் !
அருணாச்சல பிரதேசம் தனி மாநிலமாக அறிவிக்கப்பட்ட 1986 ல் சீன எதிரியோடு தீரத்தொடு மோதிய இந்திய ராணுவக் கணவன் பிபின் ராவத்துக்கு அந்த ஆண்டே வாழ்க்கைப்பட்டு மதுலிகா ராவத் ஆனார் !
இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்று, கணவனின் போக்கை கடமையாய் கொண்டு தொடர்ந்தார்.
ராணுவ வீரர்களின் மனைவிகள் நலச் சங்கதலைவியாகவும், குழந்தைகள் நலம், மாற்றுத் திறனாளிகளின் மேம்பாடு, கேன்ஸர் நோயாளிகளின் நல்வாழ்வு என ஓயாது உழைத்த அந்த தாய்…
குன்னூர் காட்டில், மூண்டெழுந்த செந்தழலில், எந்தக் காரணமும் இன்றித் தன் மெல்லுடல் குழைந்தழிய இன்னுயிர் நீத்தாள் !
மற்றவர்களின் தியாகத்தை இராணுவம் போற்றும். தாயவள் தியாகத்தை யார் போற்றுவார் ?
அவள், கடைசியாய் சுவாசித்தது தமிழ்க் காற்று.
அது, விடை காணாமல் விடாது !
**கட்டுரையாளர் குறிப்பு**

**வே.ஸ்ரீராம் சர்மா** – எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.
,”
