ஹாலிவுட் பட பாணியில் ரகசிய அறை: சோழர் கால சிலைகள் மீட்பு !

Published On:

| By Kalai

புதுச்சேரியில் ஹாலிவுட் திரைப்பட பாணியில் கட்டப்பட்ட வீட்டின் ரகசிய அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று சோழர் கால சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்டுள்ளனர்.

புதுச்சேரி ஆரோவில்லில் உள்ள யந்த்ரா சமூகத்தில் வசிக்கும் ஜெர்மன் நாட்டினருக்கு சொந்தமான வீடு ஒன்றில் பழங்கால சிலைகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

ADVERTISEMENT

இந்த தகவலின் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நீதிமன்ற உத்தரவு பெற்று நேற்று(நவம்பர் 7) வீட்டில் சோதனை மேற்கொள்ள சென்ற போது, ஜெர்மன் நாட்டு தம்பதியான பாப்போ பிங்கல் மற்றும் மோனா பிங்கல் ஆகியோர் போலீசாரை தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனை மீறி போலீசார் வீட்டிற்குள் சென்று சோதனை நடத்திய போது சிலைகள் ஏதும் கிடைக்கவில்லை. ஆனால் அந்த வீட்டின் மீது சந்தேகம் இருந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து மீண்டும் சோதனை வேட்டை நடத்திய போது, ஹாலிவுட் திரைப்படத்தில் வருவது போல வீட்டின் முதல் தளத்திற்கு செல்லக்கூடிய படிக்கட்டுகள் மறைத்து கட்டப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

பின்னர் முதல் தளத்தில் உள்ள படுக்கையறையின் மேல் மாடியில் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று பழங்கால வெண்கல சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர்.

ADVERTISEMENT

கண்டுபிடிக்கப்பட்ட நடராஜ், அம்மன், சந்திரசேகரர் ஆகிய மூன்று சிலைகளுக்கு உண்டான முறையான ஆவணங்கள் எதுவும் ஜெர்மனிய தம்பதியினரிடம் இல்லாததால் மூன்று சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

மூன்று சிலைகளும் சோழர் காலத்தை சேர்ந்தவை எனவும் சர்வதேச சந்தைகளில் பல கோடி மதிப்புடையவை எனவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

ஜெர்மனி நாட்டு தம்பதி மேலும் சில பொருட்களை பெற்று  அருங்காட்சியகம் அமைக்க திட்டமிட்டிருந்ததாகவும், பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் 30 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கியதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளனர். 

வீட்டின் உரிமையாளரான பாப்போ பிங்கல் கட்டிட நிபுணர் என்பதால் ஹாலிவுட் திரைப்பட தரத்தில் ரகசிய அறைகளை அமைத்து வீட்டை கட்டி இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியாவிலிருந்து ஜெர்மனி நாட்டிற்கு சிலைகளை இந்த தம்பதி கடத்தி வந்தனரா, இந்த சிலைகள் யாரிடம் இருந்து வாங்கப்பட்டது என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கலை.ரா

”சினிமா தொழிலாளர்களின் சம்பள பிடிப்பு தொகை எங்கே?” : ஆர்.கே.செல்வமணி

சந்திர கிரகணம் : வெறும் கண்களால் பாா்க்கலாமா?

Photo of author
Kalai
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share