கன மழை காரணமாக தமிழகத்தில் இரு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (22-11-2025) மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (23-11-2025) காலை 05.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, 08.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற 24-ஆம் தேதி வாக்கில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இது மேலும் அதே திசையில் நகர்ந்து அதற்கடுத்த 48 மணி நேரத்தில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதன் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று அறிவித்தது.
அதன்படி நெல்லை, தென்காசி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களின் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தாமிரபரணி ஆற்றிl தண்ணீர் கரை புரண்டு ஓடுவதால் ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
குற்றாலத்திலும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
இந்தசூழலில் மாணவர்களின் நலன் கருதி நாளை தென்காசி, நெல்லை மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
