கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர் , செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை (டிசம்பர் 3) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் கடந்த 27ம் தேதி உருவான டிட்வா புயல் காரணமாக தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புயல் வலுவிழந்தாலும் அதன் பிந்தைய தாக்கத்தால் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு நேற்று கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. இந்நிலையில் இன்றும் சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
இந்நிலையில் திருவள்ளூரில் பரவலாக மழை பெய்து வருவதால் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல் சென்னையிலும் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்திலும் கனமழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அண்ணா பல்கலை தேர்வுகள் ரத்து
மழை காரணமாக நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ள நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பாணையில் மழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் நாளை நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
