வே.ஸ்ரீராம் சர்மா
இனி, ஜூலை 18ஆம் நாள் தமிழ்நாடு தினமாகக் கொண்டாடப்படும் என தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஏன் அவ்வாறு அறிவித்தார்… அதன் பின்னால் இருக்கும் வரலாற்று நியாயங்கள் என்ன என்பதையெல்லாம் ஆர அமர சிந்தித்தால் முதலமைச்சரின் நோக்கமும் அவரை வழிமொழிய வேண்டிய அவசியம் புரிபட்டுவிடும்.
ஆனால், அந்தப் பொறுமையும் – மண்ணின் வரலாற்றை முழுமையாக அறிந்துகொள்ளும் நோக்கமும் இங்கு சிலருக்கு இல்லாமல் போகிறது.
என்ன செய்வது, நாலு பேர் சுற்றி நின்று விட்டாலே நாடாளும் நினைப்பு வந்து விடுகிறது. போர்வைக்குள் புகுந்து கொண்டு வானம் காணவில்லை என வம்பிழுக்கத் தோன்றுகிறது.
ஆட்டுவிப்பரைக் கடந்து – ஆடும் பொம்மைக்கு கர்வம் ஏறி நின்றால் பிறகு அந்தக்கூத்து இப்படித்தான் இருக்கும்.
போஸ்டர் அடித்த காசு வீணாகப் போய் விடுமே எனச் சிலர் கூடி கலைந்து போன கதையைப் புரிந்து கொள்ள முடிகிறது என்றாலும், அவர்களும் உண்மை வரலாற்றை உணர்ந்து கொள்ள வேண்டியது அவசியம் என்பதே இந்தக் கட்டுரைக்கான நோக்கம்.
1967 ஜூலை 18. “தமிழ்நாடு – தமிழ்நாடு – தமிழ்நாடு” என பேரறிஞர் அண்ணா சட்டசபையில் மூன்று முறை ஓங்கி முழங்கிய நாள்!
தீர்மானத்தில் தமிழ்நாடு என ஒருமுறை அறிவித்தால் போதுமே. ஏன் மூன்று முறை அப்படி ஓங்கி முழங்கினார்? அதன் பின்னால் இருக்கும் உணர்வுபூர்வமான அரசியலாட்டங்கள் என்ன என்பதை எல்லாம் இன்றைய தலைமுறைக்குச் சொல்லியாக வேண்டும்.
கவனியுங்கள்…
ஒட்டுமொத்த இந்தியமும் முட்டி மோதியதால் பெற்ற விடுதலை 1947இல் அமைந்துவிட்டாலும், சுதந்திரம் பெற்ற பின்பும்கூட தென்னகம் இளைத்தே இருந்தது.
காரணம், டெல்லியில் அதிகாரத்தைக் குவித்து வைத்துக்கொண்ட அன்றைய ஆட்சியாளர்களில் பெரும்பாலானவர்கள் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களே.
தாங்கள் மட்டுமே போராடி சுதந்திரத்தைப் பெற்றதாக எண்ணினார்களோ என்னவோ… அவர்களது அரசியல் பார்வையும் – மக்கள் நலத் திட்டங்களும் வட எல்லையைக் கடந்து வரவேயில்லை.
கிழக்கிந்தியக் கம்பெனியின் வெளியேற்றத்துக்கு ஆணிவேரானது வேலூர் புரட்சி. சுதந்திரப் போராட்டத்தில் வீர தீரமாக ஈடுபட்டு அந்தப் புரட்சியை நிகழ்த்தியது தென்னகத்தின் தமிழ்மண்!
ஆனால், சுதந்திரத்தின் பலன்களுக்கும் தென்னிந்தியர்களுக்கும் சம்பந்தமேயில்லை என்பது போல வட நாட்டு ஆட்சியாளர்கள் வலம் வந்து கொண்டிருக்க தென்னகம் அதிர்ந்து போனது. அதிருப்தி கொண்டது.
ஆம், தென்னிந்தியா என்ற ஒன்று இருப்பதே அறியாதவர்கள் போல தங்கள் அளவிலேயே சந்தனம் பூசிக் கொண்டிருந்தனர்.
கல்வியிலும் – கேள்வியிலும் – கலாச்சாரத்திலும் – வீரத்திலும் செழித்த தென்னிந்தியர்கள் தாங்கள் நிர்தாட்சண்யமாக புறக்கணிக்கப்படுகிறோமோ என்னும் அச்சமும் ஆதங்கமும் கொண்டார்கள்.
“ஓ… டெல்லிக் கனவான்களே…. எங்களைப் பற்றி நீங்கள் அக்கறை கொள்ள மாட்டீர்கள் எனில் நாங்கள் திராவிட நாடு என்னும் பெயரில் பிரிந்து போகத் தயாராக இருக்கிறோம்…” என்னும் முதல் குரல் எழுந்தது.
அதாவது, இன்றைய தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட நான்கு மாநிலத்தையும் உள்ளிட்டு எழுப்பப்பட்ட உரிமைக்குரல் அது!
அதில் இருந்த நியாயங்களை உணர்ந்த அன்றைய தென்னிந்திய அரசியல் பெரியவர்கள் அனைவரும் ஒன்றுகூடத் துவங்க டெல்லி ஆட்சியாளர்களும் பனியாக்களும் கலக்கம் அடைந்தார்கள்.
திராவிட நாடு என்னும் பெயரில் நான்கு மாநிலங்களும் ஒன்றிணைந்து பிரிந்து விடுமானால், அது இந்தியா என்னும் அமைப்புக்கு பேரிழப்பாகி விடும் எனக் கருதிய டெல்லி வாலாக்கள் திராவிட நாடு என்னும் சித்தாந்தத்தையே நீர்த்தடிக்க விரும்பினார்கள்.
அதற்காக பலவித முயற்சிகளை எடுத்துத் தோற்றவர்கள். முடிவில் தென்னகத்தை நான்கு தனி மாநிலங்களாகப் பிரித்து அதற்கெனத் தனித்தனி தலைமைகளை உண்டாகி விட்டால் அந்த ஒன்றிணையும் சித்தாந்தத்தையே உடைத்துவிடலாம் எனக் கருதினர்.
அதற்கானத் திட்டங்களை அன்று மட்டுமல்ல; இன்றும்கூட இந்திய நிலத்தின் பெரும் வணிகங்களைத் தங்களிடையே கொண்டிருக்கும் பிராமணர்களும் – பனியாக்களும்தான் வகுத்துக்கொடுத்தார்கள்.
அதன் உள்ளார்ந்த காரணம், பரந்த நிலமும் – விரிந்த வணிகமும் – அதன் லாபமும் மட்டுமே! பணம் ஆறாகக் கொட்டப்பட்டு ஆர்ப்பாட்டக் கலகங்கள் அவிழ்த்து விடப்பட்டன.
பொட்டி ஸ்ரீராமுலு – சங்கரலிங்க நாடார் எனப் பலரை ஆங்காங்கே இறக்கி விட்டுக் களபலி கொண்டு திராவிட சித்தாந்தத்தைத் திசை திருப்பி ஒருவழியாக வெற்றி கண்டுவிட்டது அன்றைய டெல்லி ஒன்றியம்.
அதன் விளைவாக 1956 நவம்பர் 1இல் நான்கு மாநிலங்களும் தனித்தனியே பிரிக்கப்பட – வணிக சாம்ராஜ்ஜிய சக்திகள் – இனி, நம் லாபத்துக்கு சேதாரமில்லை என பெருமூச்சு விட்டுக் கொண்டன.
திராவிடம் என்பது மொழி – கலாச்சாரம் – உடை – உணவு – உணர்வு – மெய்யியல் போன்றவற்றை உள்ளடக்கிய அகன்ற சித்தாந்தக் கோட்பாடு. அதற்கு எதிரானது அன்றைய கார்ப்பரேட்டுகளுக்கு அடி பணிந்த ஒன்றியமே!
உண்மையைத் தவிர்த்து, ஒரு சிறு வகுப்பை மட்டுமே திராவிடத்துக்கு எதிராக காட்டிக் கடப்பது வருங்காலத்துக்கு நலம் பயக்காது!
உண்மையில், 1956 என்பது – அகண்ட கனவுகளோடு நின்றிருந்த திராவிட நிலம் நான்காகப் பிரிக்கப்பட்ட துக்க ஆண்டு ஆகும்.
அதை, தாய்நிலத்துக்குச் சொந்தக்காரர்களான நாம் எப்படிக் கொண்டாட முடியும்?
தெலங்கானா பிரிக்கப்பட்ட நாள் 2014 ஜூன் 2. அந்த நாளை பறிகொடுத்த தாய் நிலமான ஆந்திரா கொண்டாடுமா?
கேட்பார் பேச்சைக் கேட்டுக் கொண்டு ஆளுக்கொருவராய் தனிக்குடித்தனம் கிளம்பிய நாளில், அந்தப் பரம்பரை வீடு எப்படிக் காட்சியளித்திருக்கும்? மஞ்சப் பட்டும், மாந்தோரணமுமாகவா மேளங்கொட்டிக் கொண்டிருந்திருக்கும்?
போலத்தான், அன்று தன் மூன்று அங்கங்களைப் பறிகொடுத்த அந்த நவம்பரில் திராவிடத்தின் தாய்நிலமான தமிழகமும் கனத்த அமைதியில் விம்மி நின்றிருந்தது.
போகட்டும். அப்படிப் பிரிக்கப்பட்ட போதும்கூட ‘மெட்ராஸ்’ என்றே பெயரிட்டுப் பிரித்தது டெல்லி ஒன்றியம்.
ஆங்கில ஆட்சியின் நீட்சிப் பெயரான மெட்ராஸ் என்பதை நாங்கள் தூக்கிச் சுமக்க விரும்பவில்லை என்றார் அண்ணா.
“எங்கள் மண்ணை தமிழ்நாடு என்று அழைத்துக் கொள்கிறோம்…” என்றார். அதையும் மறுத்தது அன்றைய ஒன்றியம்.
திராவிட நாடு எனும் சித்தாந்தத்தை துவக்கிவைத்த பூமி என்பதால் கடுப்பில் இருந்த டெல்லி அரசாங்கம் வேண்டுமென்றே பெயர் மாற்றத்துக்கு முட்டுக்கட்டை போட்டுக்கொண்டிருந்தது.
திராவிட நாடு காணும் சித்தாந்தத்தைச் சிதைக்க முடிந்த உங்களால், எங்கள் மண்ணை தமிழ்நாடு என நாங்கள் அழைத்துக் கொள்வதை தடுத்துவிட முடியாது என வெகுண்டு எழுந்து தொடர்ந்து போராடியது திமுக.
முடிவில், ஆட்சிக்கு வந்த கையோடு 1967 ஜூலை 18ஆம் நாள் தமிழ்நாடு கொள்கையை சட்டமன்றத்தில் தீர்மானமாகவே இயற்றி அதை மூன்று முறை “தமிழ்நாடு – தமிழ்நாடு – தமிழ்நாடு” என மொத்த மேஜைகளும் அதிர முழங்கி அமர்ந்தார் அண்ணா.
அதன் பிறகும் நான்கு மாதங்கள் கழித்துத்தான் அன்றைய ஒன்றியம் அந்தத் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.
திராவிடத்தின் தாய்நிலம் தனக்கென பிரத்யேக அடையாளத்தைப் பெற்றுக் கொண்டது என்றால் – அதற்கு வித்திட்ட நாள் ஜூலை 18 தான். அதுவே பெருமைக்குரிய தினமாகும்.
இந்த நீண்ட நெடும் வரலாற்றை நன்கு அறிந்தவர் என்பதால்தான் – அதனை வருங்காலமும் நினைவுகூரும் முகமாகத்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜூலை 18ஆம் நாளை தமிழ்நாடு தினமாக அறிவித்தார்.
தன்மானமும் – விடுதலை உணர்வும் செறிந்த தமிழர்கள் நாம், கடந்த வரலாற்றை மனதில் நிறுத்தி, நமது முதல்வர் அறிவிப்பை முழு மனதாக வழிமொழிந்து…
இனிவரும் ஆண்டுகளில் ஜூலை 18ஐ தமிழ்நாடு தினமாக எழுச்சியோடு கொண்டாடுவதுதான் நமக்குப் பெருமை சேர்க்கும்!
அன்று, அண்ணா மூன்று முறை முழங்கியதற்கு அர்த்தம் கூட்டும் !
**கட்டுரையாளர் குறிப்பு**
**வே.ஸ்ரீராம் சர்மா** – எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.
.
,”
